திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் மொத்தம், ஒரு லட்சத்து, 48 ஆயிரம் ஹெக்டரில் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இந்த பயிர்கள் அனைத்தும் விளைச்சல் கண்டுள்ளதால், விவசாயிகள் அறுவடை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும், 431 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும், 11 நடமாடும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் குறித்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில், 28ம் தேதி வரை, மொத்தம், ஒரு லட்சத்து, 1,500 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு, 8,000 மெட்ரிக் டன் கொள்முதல் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில், கடந்த ஆண்டு இதே நாளில், 96 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்தாண்டில் மொத்தம், மூன்று லட்சத்து, 73 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. டந்த, 2011-12 ம் ஆண்டில் அதிகபட்சமாக, ஆறு லட்சத்து, 65 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.அந்த ஆண்டை போல நடப்பாண்டிலும் மகசூல் அதிகமாக இருந்து வருவதால், ஏழு லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் சாகுபடி செய்யப்பட்டுள்ள, ஒரு லட்சத்து, 48 ஆயிரம் ஹெக்டேரில், 30 ஆயிரம் ஹெக்டேர் அளவில் அறுவடை நடைபெற்றுள்ளது. மேலும், சாகுபடி பரப்பில், 60 சதவிகிதம் அளவிற்கு பொதுரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், அந்த பயிர்கள் இனிமேல் தான் அறுவடைக்கு தயாராகும். எனவே, ஏழு லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் நிச்சயமாக கிடைக்கும்.
கொள்முதல் நிலையங்களில், ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் முதுநிலைமண்டல மேலாளர் அலுவலகத்துக்கு 04366222532 என்ற தொலைபேசி எண்ணிலும், முதுநிலை மண்டல மேலாளருக்கு, 09442255542 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்