அறிகுறிகள்
- நெற்பயிரின் அனைத்து பகுதிகளும் (இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும்.
- இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.
- தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இதையே “குலை நோய்” என்கிறோம். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும்.
- கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும்/பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இதை “கழுத்து குலை நோய்” என்கிறோம்.
- கணுக்கள் கருப்பு நிறமாக மாறி, உடைந்துவிடும். இதை “கணு குலை நோய்” என்கிறோம்.
- பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும்.
- கதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக (அ) அடர்பழுப்பு நிறமாக இருக்கும். நெல் இரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.
இலைகளில் பழுப்பு நிற விளிம்பு சாம்பல் நிற மையத்துடன் கூடிய நீள்புள்ளிகள் காணப்படும் | கண் வடிவ புள்ளிகள் இலைகளில் காணப்படும் |
கழுத்து குலை நோய் | கணு குலை நோய் |
சாதகமான சூழ்நிலை
- வருடம் முழுவதும் குலை நோய் பூசண வித்துக்கள் காற்றில் இருக்கும்.
- நெல் வளரும் மேட்டுப்பாங்கான இடங்களின் சுற்றுப்புற அமைப்பு மற்றும் வெட்பமண்டல பகுதிகள்.
- மேக மூட்டமுள்ள வானம், தொடர் மழை மற்றும் துாரல்கள்.
- அதிக அளவில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் சல்பேட் போன்ற தழைச்சத்து உரங்கள்.
- காற்றின் ஈரப்பதம் (90 சதவிகிதம் மற்றும் அதற்கும் அதிகம்) மற்றும் ஈரமான இலைகள்.
- வெப்பநிலை 25-28°C
மேலாண்மை முறைகள்
- நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
- வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்.
- நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஆடுதுறை 36, ஐ.ஆர்.20 மற்றும் கோ 47 ஆகியவற்றைப் பயிர் செய்தல்.
- கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2.0 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- நாற்றங்கால் பருவம் : குறைந்த தாக்குதல் இருப்பின் கார்பன்டசீம் (அ) எடிஃபென்டாஸ் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
- துார் வைக்கும் முன் நிலை முதல் துார் வைத்தலின் மத்திய நிலை வரை : குறைந்த தாக்குதலாக (2-5%நோய் தீவிரம்) இருந்தால், கார்பன்டசீம் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் காணப்பட்டால் தழைச்சத்து உரம் அளித்தலை தாமதமாக செய்ய வேண்டும்.
- சூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 400 மி.லி. தண்ணீரில் கலந்து விதைப்பதால் குலை நோய் தாக்குதல் குறைகின்றது.
- ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.
- வயலில் நோய் தோன்றும்போது செடிகளுக்கு எக்டேருக்கு எடிபென்பாஸ் 500 மி.லி. அல்லது மேன்கோசெப் 1 கிலோ அல்லது கிட்டாசின் 250 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 400 கிராம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
- புழுதி நாற்றங்கால்களை தவிர்க்க வேண்டும்.
- சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். (10 கிராம்/கிலோ விதை)
- 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியைத் துாவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
புழுதி நாற்றங்காலை தவிர்க்கவும் | வயல் மற்றும் வரப்புகளை சுத்தமாக வைக்கவும் |
சூடோமோனாஸில் நாற்றுகளின் வேர்களை நனைக்கவும் | சூடோமோனாஸ் உடன் விதை நேர்த்தி செய்யவும் |
நன்றி: தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பயனுள்ள தகவல்