நெற்பயிருக்கு அடியுரமாக டி.ஏ.பி.,க்கு மாற்று உரமாக, கூட்டு உரங்கள் மற்றும் கலப்பு உரங்களை இடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். நெல்லை மாவட்டத்தில் தற்போது கார்பருவ நெல் சாகுபடிக்கான விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெற்பயிருக்கு தேவையான தழை,மணி மற்றும் சாம்பல் சத்துக்களை முறையே யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களாக அடி மற்றும் மேலுரமாக இடுவது அவசியமாகும்.
பொதுவாக 120 நாட்கள் வரை வயதுடைய குறுகிய காலப் பயிராக இருந்தால் ஒரு ஏக்கருக்கு பொதுப்பரிந்துரையாக 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் 10 கிலோ சாம்பல் சத்து அளிகவல்ல 44 கிலோ யூரியா,125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 17 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
இவற்றுடன் ஏக்கருக்கு 10 கிலோ சிங்க் சல்பேட் உரத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன் வயலில் தூவ வேண்டும். தேவையான அளவு சிங்க் சல்பே வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீதம் மான்யம் விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.
டி.ஏ.பி.,உரம் கிடைக்கும்பட்சத்தில்,ஏக்கருக்கு தேவையான 44 கிலோ டிஏபி.,26 கிலோ யூரியா மற்றும் 17 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இடலாம். டி.ஏ.பி.,உரத்திற்கு மாற்றாக அதே அளவு சத்துக்களை கொடுக்கவல்ல கூட்டு மற்றும் கலப்பு உரங்களை அடியுரமாக இடலாம்.
20:20,0:13 கூட்டு உரமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு தேவையான 100 கிலோ உரத்துடன் 17 கிலோ பொட்டாஷ் உரம் கலந்து அடியுரமாக இடலாம். இந்த கூட்டு உரத்தில் கந்தக சத்து உள்ளதால் இது பயிரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
கலப்பு உரம் 17:17:17 ஆக இருந்தால் 59 கிலோ கலப்பு உரத்துடன் 22 கிலோ யூரியா மற்றும் 62 கிலோ சூப்பர் பாஸ்டேட் உரங்களை கலந்து அடியுரமாக இடவேண்டும்.
மேற்குறிப்பிட்ட உரங்களை அடியுரமாக இடுவதுடன் 22 கிலோ யூரியாவை நடவு செய்த 15,30,45 நாட்களில் மேலுரமாக இடவேண்டும். 30வது நாள் இடும் 22 கிலோ யூரியா மேலுரத்துடன் 17 கிலோ பொட்டாஷ் உரம் கலந்து இடுவது அவசியம்.
இதுபோன்ற உரப்பரிந்துரையின்படி நடப்பு கார் பருவ நெல் பயிருக்கு உரமிட்டு அதிக மகசூல் பெறுமாறு மானூர் வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்