தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆற்று நீர், ஏரி நீர் பாசனங்களை நம்பி, நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்துள்ள நெற் பயிர்களில் சாம்பல் சத்து குறைபாடு பரவலாகத் தென்படுகிறது. நெற் பயிருக்கு தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்ட சத்துகள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் சாம்பல் சத்து குறைபாடு காணப்படுகிறது.
சாதா நெல் ரகங்களைவிட வீரிய ஒட்டு நெல் ரகங்கள்தான் சாம்பல் சத்து குறைபாட்டால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. சாம்பல் சத்து குறைபாடு இருந்தால் மஞ்சள் பழுப்பு நிறத்தில் இலையின் விளிம்பு காய்ந்து விடும். முதிர்ந்த இலைகளில் துரு போன்ற பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றுவது மற்றும் இலைகள் வெண்கல நிறத்தில் தோன்றுவது ஆகியவை சாம்பல் சத்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும்.
ஆரம்பத்தில் பயிர் வளர்ச்சி குன்றி, சிறிய இலைகள், மெலிந்த தண்டுகள், குறைந்த தூர்கள் மற்றும் வாடி வதங்கிய கரும்பச்சை நிற இலைகளுடன் காணப்படும். இறுதியில் இலை காய்ந்த விடும் அபாய நிலை ஏற்படும்.
நெற்பயிரில் சாம்பல் சத்து குறைபாட்டினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளான மண் பரிசோதனை செய்து உரமிட வேண்டும். இயற்கை எருக்களை அடி உரமாக இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைப்படி மூரியேட் ஆப் பொட்டாஷ் அல்லது சல்பேட் ஆப் பொட்டாஷ் உரங்கள் இட வேண்டும். சாம்பல் சத்து உரங்களை 2 அல்லது 3 தவணைகளில் பிரித்து இட வேண்டும். முதல் தவணை உரத்தை அடி உரமாகவும், இரண்டாவது தவணை உரத்தை கதிர் உருவாகும் தருணத் திலும் (நாற்று நட்ட 40-50வது நாளில்), மூன்றாவது தவணை உரத்தை கதிர் வெளியாகும் தருணத்திலும் (நாற்று நட்டு 60-70வது நாளில்) மேலுரமாகவும் இட வேண்டும்.
தனியார் உர விற்பனை நிலையங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங் களின் உர விற்பனை நிலையங் களிலும் பொட்டாஷ் உரங்கள் தேவைக்கேற்ப இருப்பு வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி குறைபாட்டினை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்