நெற்பயிரில் களைகள் அதிக அளவு விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்த்து மகசூல் அதிகம் பெற பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச. சண்முகம், முனைவர்கள் அய்யாதுரை, மா.அ.வெண்ணிலா ஆகியோர் கூறும் ஒருங்கிணைந்த களை நிர்வாக முறைகள்:
தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். களைகளினால் நெல் பயிரில் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. களைகள் பயிர்களோடு போட்டியிட்டு, பயிருக்குண்டான சத்துகள், நீர், சூரிய ஒளி, நிலம் போன்றவற்றை அதிக வீரியத்துடன் பகிர்ந்து பயிர் மகசூலைக் குறைக்கின்றன. களைகளினால் நடவு நெல், நேரடி நெல் விதைப்பு, மானாவாரி நெல் சாகுபடி முறைகளில் முறையே 34 முதல் 67 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
தட்பவெப்ப நிலை, மண்ணின் வகை, நெல் பயிரிடும் முறை, வகைகளின் குணம், ரகம், நீர் மேம்பாடு முறைகள் போன்ற காரணிகளினால் நெற்பயிரில் களைகளின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும்போது நெல் வயலில் புல் வகை களைகளான வர்சனாம் புல், குதிரை வாலி, இஞ்சி புல், கோரை வகை களைகளான வட்டக்கோரை, ஊசிக்கோரை, அகன்ற இலை களைகளான நீர்மேல் நெருப்பு, நீர்முள்ளி, வல்லாரை, நீர்ப்புள்ளி, நீர் கிராம்பு, அரைகீரை, நீர்த்தாமரை, பொடுதழை, கொடகுசால், கொட்டகரந்தி ஆகியவை நெல் பயிரில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒருங்கிணைந்த களை நிர்வாகம்:
சாகுபடி செய்யும் பயிர்களைக் காட்டிலும் விரைவாக வளர்வதற்கும், பரவுவதற்கும் களைகள் சிறப்புத் தன்மைகள் பெற்றுள்ளன. களைகளை அழிப்பது, ஒழிப்பது என்பது முடியாத செயலாகும். நல்ல மகசூல் பெற நடவு நெல் வயலில் நடவுசெய்த 30-ஆம் நாள் வரையிலும், நேரடி நெல் விதைப்புக்கு விதைத்த 35-ஆம் நாள் வரையிலும், மானாவாரி நெற்பயிருக்கு 40 முதல் 60 நாள் வரையிலும் களைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். பயிர் சாகுபடியில் குறிப்பிட்ட பருவம் வரை மட்டும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கும் பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தில் தகுந்த களைக் கட்டுப்பாடு முறைகளைக் கையாண்டு குறைப்பதையே ஒருங்கிணைந்த களை நிர்வாக முறையாகும். அதாவது, உழவியல் மற்றும் பயிர் சாகுபடி முறைகள் கருவி, இயந்திரக் களையெடுப்பு முறைகள் களைக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை சூழ்நிலைக்கேற்ப ஒருங்கிணைந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.
உழவியல் முறைகள்:
விதைகள் கலப்பில்லாத நெல் விதைகளை உபயோகித்தல். வரப்பு, வாய்க்கால்களில் களை வராமல் சுத்தமாக வைத்தல். கோடை உழவு முறையில் உழவு மற்றும் சமன் செய்து நிலம் தயாரித்தல், பயிரையும் ரகத்தையும் தேர்வு செய்தல், பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல். ஊடுபயிர், நிலப்போர்வை இடுதல், தகுந்த பயிர் சுழற்சியைக் கடைப்பிடித்தல், களைக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்துதல், உரிய களைக்கொல்லி மருந்துகளை சரியான தருணத்திலும் அளவிலும் தெளித்தல் சிறந்தது.
களைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்துதல்:
2-3 ஆம் நாள் நேரடி நெல் விதைப்பு செய்து, 2-3 ஆம் நாளில் களைக் கொல்லியை ஹெக்டேருக்கு 1.5 லிட்டர் அளவில் 50 கிலோ மணலுடன் கலந்து 1- 2 செ.மீ அளவு தண்ணீரை நிறுத்தி சீராக வயல் முழுவதும் தூவி விட வேண்டும். இக்களைக் கொல்லியை இட்டவுடன் 3 -ஆம் நாள் வரை தண்ணீரைப் பாய்ச்சவோ, வடிகட்டவோ கூடாது.
^^^^
களைகள் முளைத்தப் பின் கட்டுப்படுத்துதல்:
பால்பேக் சோடியம் களைக்கொல்லியை களைகள் முளைத்த பின் (2 முதல் 3 இலைகள் தருணத்தில்) 15 முதல் 20 நாளில் ஹெக்டேருக்கு 200 மி.லி. வீதம் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். இக் களைக் கொல்லியை இட்டவுடன் 3ஆம் நாள் வரை தண்ணீரைப் பாய்ச்சவோ, வடிகட்டவோ கூடாது.
களை எடுக்கும் கருவி (கோனோ, ரோட்டால் வீடர்):
களைகளைக் கட்டுப்படுத்த, களை எடுக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதால், கைக் களை எடுக்கும் செலவைக் காட்டிலும் குறைந்த செலவில் களைகளைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்க முடியும்.
இக் களைக் கருவிகளை நடவு நெல் விதைப்பு செய்த வயலில் வரிசைக்கு வரிசை இடைவெளியில் முன்னும், பின்னும் நகர்த்தி இயக்குவதால், களைகளைக் கட்டுப்படுத்துவதோடு, மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்பட்டு, அதிக தூர்களும், கதிர்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இக் களை கருவி வரிசையிலுள்ள களைகளை மட்டுமே (70-75 சதம்) அழித்து விடும்.
செடிகளுக்கு இடையே உள்ள களைகளை (20-25 சதம்) மிகக் குறைவான ஆள்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம். இக் களைக் கருவிகள் ஒன்று மற்றும் இரண்டு உருளும் முள்போன்ற வடிவில (கோனோ, ரோட்டால் வீடர்) அமைக்கப்பட்டுள்ளன.
இக் களை கருவிகளை விதைத்த 10-ஆம் நாள் முதல் முறையாகவும் அடுத்து களைகளின் தீவிரத்தைப் பொருத்து 10 அல்லது 15 நாள்களுக்கு ஒன்று அல்லது இரு முறைகள் பயன்படுத்துவதால் களைகளின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்துவதோடு, இயற்கை உரமாகவும் மாற்றலாம். நன்கு வளர்ந்த பயிர்களுக்கு இடையே இக் களை கருவியைப் பயன்படுத்துவது சிரமமாக இருப்பதால், விதைத்த 30-35 நாள்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
எனவே, உழவியல் முறைகள், களைக்கொல்லிகளையும், கருவியையும் ஒருங்கிணைந்து களைகளை அதிக அளவில் கட்டுப்படுத்துவதனால் மகசூலையும், வருவாயையும் அதிகரிக்கலாம் என்றனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்