நெல்வயலில் ஒருங்கிணைந்த எலி மேலாண்மை

  • பயிர் செய்வதற்கு முன் வரப்பு களில் உள்ள எலி வளைகளை உடைத்து தாய் எலிகளையும் குட்டிகளையும் சேகரித்து அழிக்க வேண்டும். வரப்புகளைச் செதுக்கி குறுகலாக அமைப்பதால் எலிகள் வளைகளை அமைத்து இனப்பெருக்கம் செய்ய இயலாது. தேவையற்ற களைச் செடிகளைப் பிடுங்கி அழிப்பதால் எலிகள் அவற்றில் பதுங்குவதைத் தடுக்கலாம்.
  • அறுவடைக்குப் பிறகு சேரும் வைக்கோல் போர்களை வயல் களுக்கு அருகாமையில் வைக்காமல் விரைவில் காலி செய்துவிட வேண்டும். அதிக ஒளி வீசக்கூடிய விளக்குகளை வயல்வெளியில் சென்று காண்பித்து வழியில் தென்படும் எலிகளை எளிதில் வேட்டையாடி கைவினை முறைகளால் கொல்ல முடியும்.
  • வரப்பு ஓரம் உள்ள எலி வளைகளுக்குள் நீரை ஊற்றி எலிகளை மூச்சுத்திணறச் செய்து கொல்லலாம். இதற்காக தண்ணீர் வசதியுள்ள இடங்களில் வரப்பு மட்டம் வரை நீரைத்தேக்கி வைத்து சில மணி நேரத்திற்குப் பின் வடிக்க வேண்டும்.
  • காய்ந்த சாணம் மற்றும் குப்பை கூளங்களை எரித்து உண்டாக்கும் புகையை எலி வளைகளுக்குள் செலுத்துவதால் புகையோடு வெளிவரும் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சுவாயு எலிகளின் சுவாசம் மற்றும் ரத்த மண்டலங்களைப் பாதித்து கொல்கிறது.
  • ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 எண்ணிக்கையில் தஞ்சாவூர் எலிக்கிட்டிகளை வைத்துப் பிடித்து அழிக்கலாம்.
  • எலிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் (வளைகளில்) ஜிங்க் பாஸ்பைடு என்னும் எலிமருந்து ஒரு பங்குடன் 49 பங்கு கருவாடு, நிலக்கடலை, பொரி போன்ற சாப்பிடும் பொருட்களுடன் கலந்த நச்சுணவை அளித்து கொல்லலாம். இதை ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைக்க வேண்டும். ஒருமுறை இந்த நச்சுணவைச் சாப்பிட்டதும் எலிகள் இறந்துவிடும். விஷ உணவைக் கொடுப்பதற்கு முன் 2 முதல் 3 நாட்கள் விஷம் கலக்காத உணவு களை கொடுத்து பழக்க வேண்டும். அப்போதுதான் எலிகளுக்கு உணவுக்கூச்சம் ஏற்படாது.
  • ரத்தம் உறைதலைத் தடைசெய்யும் “புரோமோடயலோன்’ என்ற மருந்து கலந்த கட்டி வகை மருந்துகளைக் கொடுப்பதும் எலிகளைக் கொல்ல சிறந்த முறை யாகும். இவ்வகைத் தயாரிப்புகளை எலிகள் வெறுத்து ஒதுக்காமல் விரும்பி உண்கின்றன. புரோமோ டயலோன் 0.005 சதவீதம் உள்ள கட்டிகளை வளைக்கு 15 கிராம் வீதம் வைக்க வேண்டும். எலிகள் 5 கிராம் அளவு சாப்பிட்டால் போதும். அதன் விளைவாக உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்துவிடுகின்றன.
  • அலுமினியம் பாஸ்பைடு மாத்திரை ஒன்று அல்லது இரண்டு எடுத்துக்கொண்டு அடுப்பு ஊதும் குழல் போன்ற குழாய்களை உபயோகித்து எலி வளைகளின் ஆழத்தில் செலுத்தி களிமண் வைத்து அடைத்துவிட வேண்டும். நீர் மூலக்கூறு இதனுடன் சேர்ந்து பாஸ்பின் என்ற நச்சுவாயு உருவாகி எலியின் சுவாசத்தில் சேர்ந்து கொன்றுவிடும்.

இவை எல்லாவற்றையும் விட இயற்கை முறை கட்டுப்பாடு வழிகளை பார்ப்போமா?

  • பாம்புகள், கீரிகள், காட்டுப் பூனைகள், பறவைகள் போன்ற ஊண் விழுங்கி விலங்கினங்களைக் கொல்லாமல் ஊக்குவிப்பதால் அவை எலிகளைத் தின்று கட்டுப் பாட்டுக்குள் கொன்றுவருகின்றன.
  • “டி’ வடிவ குச்சிகளால் ஆன பறவை தாங்கிகள் அல்லது வைக்கோலில் செய்த பந்தங்களை ஏக்கருக்கு 25 எண்ணிக்கை என்ற அளவில் வயல்களில் வைப்பதால் இரவில் ஆந்தைகள், கோட்டான்கள் போன்ற பறவைகள் அமர்ந்து எலிகளை வேட்டையாடி கட்டுப்படுத்தும்.

முனைவர் ஜெ.ஜெயராஜ்,
முனைவர் த.ச.ராஜவேல் மற்றும்
முனைவர் க.முரளிபாஸ்கரன்
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை-625 104.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *