நெல் சாகுபடி வயல் பயறு வகை விதைப்பு

நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் உளுந்து, பாசிப் பயறு போன்ற பயறு வகை சாகுபடி மேற்கொள்ள மார்கழி, தைப் பட்டம் ஏற்ற தருணமாகும்.

  • தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பாசனப் பகுதிகளில் சம்பா, முன் தாளடிப் பருவ நெல் சாகுபடி அறுவடையாகும் தருணத்தில் உளுந்து, பாசிப் பயறு போன்றவை நேரடியாக விதைப்பு செய்யப்படுகிறது.
  • நெல் தரிசு பயறு வகை விதைப்புக்கு மார்கழி, தைப் பட்டம் ஏற்ற தருணமாகும். நிலத்தின் தன்மை மெழுகுப் பதத்தில் இருக்கும் போது, அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக விதைக்க வேண்டும்.
  • நெல் தரிசு பயறு வகை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவது அவசியம்.
  • குறிப்பாக, ஏ.டி.டி.3, ஏ.டி.டி.4 உளுந்து ரகங்கள் மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றவை. 70 – 75 நாள்களுக்குள் அறுவடைக்கு வருவதுடன், ஒரே நேரத்தில் காய்கள் முற்றும் சிறப்பு இயல்பு இருப்பதால், மகசூல் இழப்பு ஏற்படுவதும் குறைவாக இருக்கும்.
  • கோ.1,2,3 ரக உளுந்து 65 நாள்களில் மகசூல் தரும். இதேபோல, ஏ.டி.டி. 3 ரக பச்சைப் பயறு மூலம் 65 நாள்களில் மகசூல் எடுக்கலாம்.
  • நெல் தரிசுப் பயறு வகையான உளுந்து, பச்சைப் பயறு பயிர்கள் ஜனவரி -பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பெய்யும் பனியைக் கொண்டு வளர்ந்து பலன் தருகிறது.நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை.
  • அதிகமாக வறட்சி ஏற்பட்டால் இலை வழியாக நீர் தெளிக்கலாம்.
  • விதைகள் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு டிரைகொடெர்மா விரிடி எதிர் உயிர் பூசணத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • இதனால் முளைப்புத் திறன் கூடுவதுடன், சீரான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும்.
  • பயறு வகை சாகுபடியில் பூச்சி, நோய் தாக்கம், நுண்ணூட்டம் பற்றாக்குறை, வெள்ளம், கடும் வறட்சி காரணமாக பூக்கள் உதிர்ந்து மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
  • இதைத் தடுக்க பயிர் ஊக்கியான நாப்தலின் அசிடிக் ஆசிட் (என்.ஏ.ஏ) பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.இதை, ஒரு மில்லி என்ற அளவில் நாலரை லிட்டர் தண்ணீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் மாலை அல்லது அதிகாலையில் தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 624 லிட்டர் கரைசல் தேவைப்படும்.
  • காய்கள் அதிகம் பிடித்து மகசூலை அதிகரிக்க டி.ஏ.பி. கரைசலைத் தெளிப்பது பயனளிக்கும். ஹெக்டேருக்கு,10 கிலோ டி.ஏ.பி. உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, 12 மணி நேரத்துக்குப் பிறகு தெளிந்த கரைசலை மட்டும் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
  • இதை, பூக்கும் நிலையில் ஒரு முறையும், காய்கள் பிடிக்கும் தருணத்தில் மறு முறையும் காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.
  • உரிய பருவத்தில் விதைத்து, பரிந்துரைக்கப்படும் தொழில்நுட்பங்களைக் கையாண்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
  • அத்துடன், பயறு வகைப் பயிர்கள் வழியாக பல்வேறு உயிர்ச் சத்துக்கள் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *