நெல் தரிசில் உளுந்து, பயறு தெளிப்பு

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தில் நெல் அறுவடை முடிந்த உடன் உளுந்து, பயறை விதை நேர்த்தி செய்து தெளிக்க தொடங்கி விட்டார்கள்.

விவசாயிகள் குறுகிய கால ரகங்களை தேர்ந்தெடுத்து சாகுபடியை தொடங்கி உள்ளார்கள்.

இனி உளுந்து, பயறு தெளிக்க உள்ள விவசாயிகள் பூமியை மெழுகு பதத்திற்கு கொண்டு வந்து விதையை விதைப்பது மிகவும் அவசியமாகும்.
உளுந்து, பயறு சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள்:

 • உளுந்து ரகங்களான எடீடி, 2, எடீடி 3 மற்றும் எடீடி 5 போன்றவைகளை சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கலாம்.
 • டி9 உளுந்தினை மணற்பாங்கான மற்றும் வடிகால் வசதியுள்ள இடங்களில் சாகுபடி செய்யலாம்.
 • பயறு ரகங்களில் எடீடி 2, எடீடி 3 மற்றும் கே.எம். 2 ரகங்கள் சிறந்தவை.
 • உளுந்து, பயறு இவைகளில் ஒரு ஏக்கரில் தெளிக்க விதை அளவு 20 கிலோ தேவைப்படும்.
 • உளுந்து, பயறு இவைகளின் வயது 90 நாட்களுக்குள் இருக்கும்.

விதை நேர்த்தி:

 •  விதையை விதைக்கும் முன் திரம் அல்லது பவிஸ்டின் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
 • மருந்தை கலந்த பிறகு அப்படியே 24 மணி நேரம் வைத்திருந்து அடுத்த வேலையை செய்ய வேண்டும்.
 • அடுத்த வேலை யாதெனில் ஒவ்வொரு பத்து கிலோ விதைக்கும் போதும் ஒரு நுண்ணுயிர் பொட்டலம் உபயோகிக்க வேண்டும்.
 • பொட்டலத்தில் உள்ள ரைசோபியம் நுண்ணுயிரியை 250 மிலி வடித்த அரிசி கஞ்சியில் நன்றாக கலக்க வேண்டும்.
 • நுண்ணுயிர் கலந்த விதைகளை நிழலில் 15 நிமிடங்கள் உலர்த்த வேண்டும்.
 • கஞ்சி கையில் ஒட்டிக் கொள்ளாத அளவிற்கு உலர்த்த வேண்டும்.
 • பிறகு இந்த விதையை விதைக்கலாம். விதை விதைத்த 10-15 நாட்களில் பயிர் பாதுகாப்பு செய்து இலைகளை பாதிக்கும் பூச்சிகளை அழிக்க வேண்டும்.
 • இதற்கு செவின் தூள் அல்லது எண்டோசல்பான் மருந்தை தெளிக்கலாம்.
 • காய்களைப் பாதுகாக்க காய்த்துளைப்பான் புழு, பூச்சிகளை அழிக்க வேண்டும்.
 • பூஞ்சாள நோயினைக் கட்டுப்படுத்த 500 கிராம் நனையும் கந்தகத்தை 500 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
 • உளுந்து செடிகளை எலிகள் பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அடுத்து செடிகளுக்கு இடையே தோன்றும் களைச்செடிகளை கவனமாக கையால் பிடுங்க வேண்டும்.
 • களைக்கொத்தியால் கொத்தி களைகளை எடுத்தால் பூமியிலிக்கும் ஈரம் காய்ந்து செடிகளை வறட்சியால் பாதிக்கப்பட்டு விடும்.
 • பிடுங்கிய நெல் தாள் கட்டை இவைகளை பூமியை மூடிக் கொள்ளும்படி போட வேண்டும். இது பூமியிலுள்ள ஈரத்தை ஆவியாகாமல் தடுக்கும்.

சங்கு பருவத்தில் முக்கிய பணி:

 • செடிகளில் பூக்கள் தோன்றும்போது (சங்கு பருவம்) இலைவழி உரத்தைக் கொடுக்க வேண்டும்.
 • நான்கு கிலோ டிஏபி உரத்தை எடுத்துக் கொண்டு 20 லிட்டர் நீரில் கரைத்து 12 மணி நேரம் அப்படியே வைத்திருந்து, பிறகு தெளித்த கரைசலை மட்டும் கவனமாக வடிகட்டி அதை 180 லிட்டர் நீரில் கலந்து செடிகளின் மேல் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
 • இத்தெளிப்பினை 10-15 நாட்கள் இடைவெளியில் இருமுறை செய்யலாம்.
 • உளுந்து பயிரின் கடைசி கட்டத்தில் டிஏபி உரமிட்டு ஒரு பாசனம் தர வேண்டும்.
 • சாகுபடி செலவு ரூ.4,000 ஆகின்றது. கிடைக்கும் மகசூல் 500 கிலோ ஒரு ஏக்கரில் செலவு போக நிகர லாபமாக ரூ.10,000 எடுக்கலாம்.

கே.எம்.2 பாசிப்பயறு சாகுபடி:

 •  தற்போதுள்ள பயறு வகைகள் சாகுபடியை தமிழக அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றது.
 • தற்போது பாசன வசதி உள்ள நஞ்சை நிலங்களில் 80 முதல் 85 நாட்கள் வயதுடைய கே.எம்.2 பாசிப்பயறினை சாகுபடி செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது.
 • ஒரு ஏக்கருக்கு சாகுபடி செலவு ரூ.10,000 ஆகின்றது. மகசூல் 500 கிலோ கிடைக்கும். இதன் மதிப்பு ரூ.30,000. சாகுபடி செலவு ரூ.10,000 போக நிகர லாபம் ரூ.20,000 எடுக்கலாம்.

– எஸ்.எஸ்.நாகராஜன்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *