பாடில்லாமல் மகசூல் தரும் பாரம்பர்ய ரகம்!

பாடில்லாமல் மகசூல் தரும் பாரம்பர்ய ரகம்!  30 சென்ட்… 600 கிலோ நெல்!

  • 30 சென்ட் நிலத்தில் 10 மூட்டை மகசூல்
  • சிவப்பு நிற அரிசி
  • அனைத்து மண்ணிலும் வளரும்
  • வறட்சி, வெள்ளத்தைத் தாங்கி வளரும்
  • 145 நாள் வயதுபூச்சி, நோய் தாக்குதல் குறைவு

தாளடி, சம்பா பட்டங்களுக்கு ஏற்றது

யற்கை விவசாயத்துக்கு மாறும் நெல் விவசாயிகளில் பெரும்பாலானோர் பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடிப்பிடித்து சாகுபடி செய்வது வழக்கம். அதனால்தான் காலத்தால் கைவிடப்பட்ட  பல அரிய நெல் ரகங்கள் தற்போது புத்துயிர் பெற்று பரவலாகி வருகின்றன. அந்தவகையில், கைவரச்சம்பா என்ற பாரம்பர்ய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார், தஞ்சாவூர் மாவட்டம், செட்டிப்பத்து கிராமத்தைச் சேர்ந்த ‘இயற்கை விவசாயி’ ராமமூர்த்தி.

களத்தில் நெல் தூற்றிக் கொண்டிருந்த ராமமூர்த்தியைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்… தனக்காக கொண்டு வந்திருந்த வெல்லம் கலந்த அவல் கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்ற ராமமூர்த்தி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“இது கைவரச்சம்பாவில் செஞ்ச அவல். இது நல்ல சுவையா இருக்கும். இந்த ரக அரிசியில் சமைச்ச சாதம் நல்லா கமகமனு வாசனையாவும் ருசியாவும் இருக்கும். இதோட பழைய சோறு கூட அருமையா இருக்கும். நாங்க இந்த அரிசிக் கஞ்சியைத்தான் தினமும் குடிக்கிறோம். மூணு வருஷமா கொழுக்கட்டை, அதிரசம், பொங்கல், புட்டு… இந்த அரிசியிலதான் சமைச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்” என்று அரிசி பெருமை சொன்ன ராமமூர்த்தி தொடர்ந்தார்.

பாரம்பர்ய ரகங்களில் அதிக மகசூல் கொடுக்கும் ரகம்!

“நாங்க பாரம்பர்ய விவசாய குடும்பம். அஞ்சாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அப்போ இருந்தே விவசாயத்துக்கு வந்துட்டேன். எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கு. மணல் கலந்த களிமண் பூமி. ஒரு ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் நிலத்துல பாரம்பர்ய நெல் சாகுபடி செய்றோம். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். ஆரம்பத்துல வீரிய ரகங்களைத்தான் சாகுபடி செஞ்சோம். இப்போ, ஏழு வருஷமா மாப்பிள்ளைச் சம்பா, சிகப்பு கவுனி, பூங்கார், சொர்ணமசூரி, கருடன் சம்பா…னு பாரம்பர்ய நெல் ரகங்களை மட்டும் சாகுபடி செஞ்சிட்டு இருக்கோம். எல்லா ரகங்களுமே இயற்கை விவசாயத்துல அற்புதமா விளையுது. இந்த எல்லா ரகங்களையும் விட கைவரச்சம்பாவுல அதிக மகசூல் கிடைக்குது. மத்த ரகங்கள்ல 18 மூட்டையில் இருந்து 25 மூட்டை ( 60 கிலோ மூட்டை) வரைதான் கிடைக்கும். கைவரச்சம்பாவில் 33 மூட்டை வரை மகசூல் கிடைக்குது. அதனால மூணு வருஷமா இந்த ரகத்தை அதிகளவுல சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.

இந்த வருஷம், 30 சென்ட் நிலத்துல கைவரச்சம்பா, 20 சென்ட் நிலத்துல மாப்பிள்ளைச் சம்பா, 20 சென்ட் நிலத்துல சிகப்பு கவுனி, 10 சென்ட் நிலத்துல காட்டுயானம், 10 சென்ட் நிலத்துல கருங்குறுவை, 10 சென்ட் நிலத்துல கருடன் சம்பானு சாகுபடி செஞ்சேன். மாப்பிள்ளைச் சம்பாவில்  5 மூட்டை, சிகப்பு கவுனியில் நாலரை மூட்டை, மற்ற ரகங்கள் ஒவ்வொண்ணுலயும் 2 மூட்டைனு மகசூல் கிடைச்சுது. எல்லாத்தையுமே விதைநெல்லாத்தான் விற்பனை செய்றேன். கைவரச்சம்பாவில் 10 மூட்டை மகசூல் கிடைச்சுது. இதை அவல், அரிசினு மதிப்புக் கூட்டியும் விற்பனை செஞ்சுட்டு இருக்கேன்” என்ற ராமமூர்த்தி தனது சாகுபடி அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

இயற்கைக் கொடுத்த வரம்!

“கைவரச்சம்பா ரகத்தை சாகுபடி செய்றப்போ எவ்வளவு களை முளைச்சாலும் கவலையில்லை. அதையெல்லாம் மீறி வளந்து வந்துடும். இதை விவசாயிகளுக்கு இயற்கைக் கொடுத்த வரம்னே கூட சொல்லலாம். அதே மாதிரி, வறட்சி, வெள்ளம்னு கவலைப்பட வேண்டியதில்லை. நான், நாற்று நடவு செஞ்ச 15-ம் நாள்ல இருந்து தொடர்ச்சியா 15 நாட்களுக்கு மழை பேஞ்சுக்கிட்டே இருந்துச்சு. ஆனாலும், ஒண்ணும் ஆகலை. தண்ணீர் வடிஞ்சதும் செழிப்பா வளர ஆரம்பிச்சுடுச்சு. பூச்சி, நோய் தாக்குதல்களும் அவ்வளவா இல்லை. தண்டு தடிமனா திடகாத்திரமா இருக்கு. நடவு செஞ்ச 45-ம் நாள்லயே 3 அடி உயரத்துக்கு வளர்ந்துடுது. இதோட அரிசி சிவப்பா இருக்குது” என்ற ராமமூர்த்தி நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.

விதை நெல்லாக விற்றால் கூடுதல் லாபம்!

“கைவரச்சம்பா ரகத்தை விதை நெல்லா கிலோ  50 ரூபாய்னு விற்பனை செய்றேன். அவலா மாற்றினா ஒரு கிலோவுக்கு அரை கிலோ அவல் கிடைக்கும். ஒரு கிலோ அவல் 80 ரூபாய்னு விற்பனையாகும். அதுல அரவைக்கூலி 15 ரூபாய் போக 65 ரூபாய் லாபம். இந்தக் கணக்குல பார்த்தா ஒரு கிலோ நெல்லுக்கு 32 ரூபாய் 50 காசு விலை கிடைக்கும். ஒரு கிலோ நெல்லை அரைச்சா 600 கிராம் அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 60 ரூபாய்னு விற்பனையாகும். இந்தக்கணக்குல பார்த்தா ஒரு கிலோ நெல்லுக்கு 36 ரூபாய்தான் விலை கிடைக்கும்.  இதுவே விதைநெல்லா விற்பனை செய்றப்பதான் கிலோ 50 ரூபாய் கிடைக்கும். இதுதான் நல்ல லாபம். அப்படி விற்பனை செய்ய முடியாதபட்சத்துல… தேவையைப் பொறுத்து அவலாவோ, அரிசியாவோ அரைச்சு விற்பனை செய்துடுவேன். எப்படியும் ஒரு கிலோ நெல்லுக்கு 30 ரூபாய்க்கு குறையாம விலை கிடைச்சுடும். அரசாங்கம் நிர்ணயிக்கிற விலையை விட இது அதிகம்தான்” என்றார், சந்தோஷமாக.

 

இப்படித்தான் சாகுபடி செய்ய வேண்டும்

30 சென்ட் நிலத்தில் கைவரச்சம்பா ரக நெல்லை சாகுபடி செய்யும் விதம் குறித்து ராமமூர்த்தி சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…

30 சென்ட் சாகுபடிக்கு 3 கிலோ விதை!

“கைவரச்சம்பா ரக நெல்லின் வயது 145 நாட்கள். இது 5 அடி உயரம் வரை வளரக்கூடியது. அனைத்து வகை மண்ணிலும் சிறப்பாக விளையும். சம்பா, தாளடிப் பட்டங்களுக்கு ஏற்ற ரகம். 30 சென்ட் நிலத்தில் விதைக்க… 4 அடி நீளம், 16 அடி அகலம், அரையடி உயரத்தில் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தி அமைக்கும்போதே மண்ணோடு 10 கிலோ கனஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும்.

15 நாட்களில் நாற்று!

3 கிலோ கைவரச்சம்பா விதைநெல்லை ஒன்றரை லிட்டர் பீஜாமிர்தத்தில் மூழ்க வைத்து எடுத்து… 3 மணிநேரம் நிழலில் உலர்த்தி, மேட்டுப்பாத்தியில் பரவலாகத் தெளிக்க வேண்டும். பிறகு 1 லிட்டர் ஜீவாமிர்தத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பூவாளி மூலம் தெளித்து இலை,தழைகளை மூடாக்காக இட்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து  3 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் தண்ணீர் தெளிக்க வேண்டும். 5-ம் நாளுக்குப் பிறகு மூடாக்கை நீக்கி விட்டு… தினமும் மாலை நேரத்தில் மட்டும் தண்ணீர் தெளிக்க வேண்டும். 10-ம் நாள் 1 லிட்டர் ஜீவாமிர்தத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் 20 சென்டி மீட்டர் உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகி விடும்.

ஒற்றை நாற்று நடவு முறை!

தேர்வு செய்த 30 சென்ட் நிலத்தில் நடவுக்கு 40 நாட்களுக்கு முன்பாகவே ஒரு சால் உழவு ஓட்டி, 7 கிலோ சணப்பு விதையைத் தெளித்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 40 நாட்களுக்கு மேல் சணப்பு பயிரில் பூ எடுத்தவுடன் மடக்கி உழுது நிலத்தை சமப்படுத்த வேண்டும். பிறகு, ஒற்றை நாற்று முறையில் வரிசைக்கு வரிசை 1 அடி, நாற்றுக்கு நாற்று முக்கால் அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவிலிருந்து 3, 10, 21 மற்றும் 30 நாட்களில் பாசன நீரில் 70 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும்.

பூக்கும் தருணத்தில் புளித்த மோர்!

5 லிட்டர் மாட்டு சிறுநீரில் 250 கிராம் நசுக்கிய பூண்டு, 2 கிலோ வேப்பங்கொட்டை தூள் ஆகியவற்றை ஊற வைத்து மறுநாள் வடிகட்டி இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து நடவு செய்த 25-ம் நாள் அன்று  பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். இது பூச்சி மற்றும் நோய்களைத்  தடுப்பதோடு, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பலன் கொடுக்கும். 80 முதல் 85 நாட்களில் பூ பூக்கும்.  இந்த தருணத்தில் இரண்டரை லிட்டர் புளித்த மோரை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நடவிலிருந்து 125-ம் நாள் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி விடும். 30 சென்டில் 10 மூட்டைக்கு குறையாமல் மகசூலாகும்.”

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “பாடில்லாமல் மகசூல் தரும் பாரம்பர்ய ரகம்!

  1. S.Karumalaiappan says:

    இந்த மாதிரியான பயனுள்ள தகவல்களை பகிரும்பொழுது விவசாயிகளின் தொடர்புக்கு மொபைல் நம்பரையும் பகிர்ந்தால் பயனளிக்கும்

Leave a Reply to S.Karumalaiappan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *