மழை நீரினால் பாதித்த நெற் பயிர்களை காப்பது எப்படி

வடகிழக்கு பருவ மழையால் தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் அவ்வப்போது மழையால் மூழ்குகின்றன. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு முதல்வழி வடிகால் வசதி அமைப்பது தான்.

நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும். சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். துார் வெடித்த பயிரினைக் கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் அல்லது நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால், ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடன் வயலில் இட வேண்டும். போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்ட உடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

குலைநோயின் சிறு புள்ளிகள் காணப்பட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டசிம் பூசணக்கொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். பாக்டீரியா இலைக்கருகல் நோயின் அறிகுறி காணப்பட்டால் ஏக்கருக்கு ஸ்டெப்ரோமைசின் சல்பெட், டெட்ராசைக்ளின் 120 கிராம் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம்.மழை காரணமாக நீர் தேங்கியிருக்கும் பட்சத்தில் நீர் வடியும் வரை காத்திருக்காமல் பின்பட்ட குறுவை ரகங்களை உடனடியாக அறுவடை செய்து கதிரடித்து தானியத்தை உலரச் செய்ய வேண்டும்.

சுப்பிரமணியன்,
உதவி பேராசிரியர்

சதீஷ்குமார், உதவி ஆசிரியர்
உழவியல் துறை
மதுரை விவசாய கல்லுாரி
9003428245
.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மழை நீரினால் பாதித்த நெற் பயிர்களை காப்பது எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *