உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், சீரான விளைச்சலைப் பெறவும், வேளாண்மை தொழில்நுட்பங்களை சீரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.
மானாவாரி நெல் விளைச்சலை நிர்ணயிக்கும் தொழில்நுட்பங்களான
- உயர் விளைச்சல் ரகங்களைத் தேர்ந்தெடுத்தல் (அண்ணா-4 ரகம் உள்பட)
- சீரிய உழவியல் மற்றும் நீர், களை நிர்வாகம்,
- ஒருங்கிணைந்த உர மேலாண்மை,
- தேவைக்கேற்ப பயிர்ப் பாதுகாப்பு.
இவை நான்கு தொழில்நுட்பங்களில் ஒன்றான ஒருங்கிணைந்த உர நிரவாகம் நெல் உற்பத்தில் ஒரு மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது எனலாம்.
மானாவாரி நெற்பயிருக்கு அடியுரம் இடுதல்:
- வயலில் ரசாயன உரங்களை மண் ஆய்வு அடிப்படையில் இட வேண்டும்.
- மானாவாரி பகுதி பாசனம் செய்யும் நெல் ரகங்களுக்கு ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்து, 10 கிலோ மணிச்சத்து, 15 கிலோ சாம்பல் சத்தும் பரிந்துரைக்கப்படுகிறது.
- மானாவாரி நெல் ரகங்களுக்கு ஏக்கருக்கு 20 கிலோ தழைச் சத்தும், 10 கிலோ மணிச்சத்தும் 10 கிலோ சாம்பல் சத்தும் பரிந்துரைக்கப்படுகிறது.
- இதில் அதிரடியாக மணிச்சத்தை ஊட்டமேற்றிய தொழு உரமாக இட வேண்டும்.
- மணிச்சத்து நெற்பயிரின் இளமைப் பருவத்தில் வேர்ப்பிடித்து நன்றாக வளர்வதற்கும் பூக்கள் பூப்பதற்கும் நெல் மணிகள் வளர்ச்சி, எண்ணிக்கை மற்றும் முதிர்வடைதல் ஆகியனவற்றைச் சீராக்கி நெல் விளைச்சலைப் பெருக்கிட ஏக்கருக்கு 62.5 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு மாதம் காற்று புகாமல் வைத்து ஊட்டமேற்றிய தொழுவுரமாக மாற்றி கடைசி உழவில் இட வேண்டும்.
- இரும்புச் சத்து குறைபாடுள்ள நிலத்தில் அடியுரமாக இரும்பு சல்பேட்டை ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் இடவும், மானாவாரி நெல்லுக்கு சிங்க் சல்பேட் ஹெக்டேருக்கு 25 கிலோ என்ற அளவில் விதைப்பின் போது இடவும், ஒரு ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா ஆகியனவற்றுடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து வயலில் இட வேண்டும்.
மானாவாரி நெற்பயிருக்கு மேலுரம் இடுதல்:
- நெற்பயிருக்கு மேலுரம் இடுவதில் மிகுந்த கவனம் தேவை.
- நெல் வளர்ச்சியில் தூர்கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் தருணம் ஆகிய காலங்களில் பயிர் உணவுச் சத்துகளின் தேவை அதிகம்.
- மானாவாரியில் பகுதி பாசனம் செய்யும் நெல் ரகங்களுக்கு இப் பருவங்கள் முறையே நட்ட 20, 40, 60 ஆம் நாளில் உண்டாகின்றன.
- தழைச்சத்து அடங்கிய யூரியாவை பொது சிபாரிசுப்படி நட்ட 20, 40, 60 ஆம் நாளில் முறையே ஏக்கருக்கு 22 கிலோ யூரியா என்ற அளவில் இட வேண்டும்.
- சாம்பல் சத்து உரத்தை நட்ட 20, 40, 60 ஆம் நாளில் முறையே ஏக்கருக்கு 9,8 மற்றும் 8 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷாக இட வேண்டும்.
- விதைத்த சமயத்திலும், இடையேயும் நல்ல மழை பெய்து பயிரின் வளர்ச்சியும் நன்கு அமைந்திருப்பின், இரண்டாம் தருணமான 40 முதல் 45 நாள்களுக்குள் இடப்படும் யூரியாவை ஏக்கருக்கு 35 கிலோவாக அதிகரிக்கப்படலாம்.
- அதன் பின்னர், குறைந்தது 10 தினங்களுக்காவது தண்ணீர் தேங்கியிருத்தல் கட்டாயம் எனலாம்.
- மானாவாரியில் பகுதி பாசனம் செய்த நெல் ரகங்களுக்கு தழைச்சத்து அடங்கிய யூரியாவை பொது சிபாரிசுப்படி நட்ட 20 மற்றும் 40 ஆம் நாளில் முறையே ஏக்கருக்கு 22 கிலோ யூரியா என்ற அளவில் இட வேண்டும்.
- சாம்பல் சத்து உரத்தை நட்ட 20, 40-வது நாளில் முறையே ஏக்கருக்கு 8 மற்றும் 9 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் ஆகவும் இட வேண்டும்.
- இலைவழி உரமாக யூரியா 1 சதம், டி.ஏ.பி. 2 சதம் கரைசலை இருமுறை குருத்து உருவான தருணத்திலும், 10 நாள்கள் கழித்து மீண்டும் ஒருமுறையும் தெளித்தல் நல்லது.
தற்போது கூறிய வழிமுறைகளை ஒருங்கே கடைப்பிடித்து விலையுயர்ந்த ரசாயன உரத்தை செம்மையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தி திட்டமிட்டபடி நெல் விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த முனைவர்கள் மு. அனுராதா, வி. கணேசராஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்