பாரம்பரிய நெல் ரகங்களில் நீண்டகாலமாகப் பயன்பட்டுவருவது, எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய நெல் ரகம் காட்டுயாணம். வறட்சியிலும் வெள்ளத்திலும்கூட மகசூல் கொடுக்கும் நெல் ரகம் இது.
அதிகபட்சம் ஏழு அடி வளரும். காட்டுயாணம் சாகுபடி செய்த வயலில் யானை புகுந்திருந்தால்கூட வெளியே தெரியாது. அதனால்தான் இந்த ரகத்துக்குக் காட்டுயாணம் பெயர் வந்திருக்க வேண்டும்.

மருத்துவக் குணம்
மற்றப் பாரம்பரிய நெல் ரகங்களைவிட கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. இதன் அரிசியை மண்பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்குச் சாப்பிட்டுவந்தால், எந்த நோயில் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடந்தாலும் தெம்பாக எழுந்து நடக்கமுடியும். நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது.
இந்தக் காட்டுயாணம் பச்சரிசியைக் கஞ்சி காய்ச்சி, அதில் கருவேப்பிலையைக் கொத்தாகப் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் புண் ஏற்பட்டவர்களுக்குக்கூடப் பலன் கிடைக்கும் எனப்படுகிறது. காட்டுயாணத்தின் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடவும் அறுப்பும்
மற்ற நெல் ரகங்களைவிட தனிச்சிறப்பு கொண்டது காட்டுயாணம். இரண்டு சால் உழவு செய்து ஏக்கருக்கு முப்பது கிலோ விதைத்து, மீண்டும் ஒரு சால் உழவு செய்துவிட்டு, பின்னர் அறுவடைக்கு மட்டும் போனால் போதும். இதைத்தான் நம் முன்னோர்கள் ‘விதைப்போம் அறுப்போம்’ என்றார்கள்.
ஏக்கருக்குக் குறைந்தபட்சம் இருபத்தி நான்கு மூட்டை மகசூல் தரக்கூடியது. நூற்றி எண்பது நாள் வயதுடையது. ரசாயன உரம் பூச்சிக்கொல்லி இல்லாமல் நல்ல மகசூல் தரக்கூடியது. ஒரு மாதம் தண்ணீர் இல்லாவிட்டாலும், நேரெதிராகத் தண்ணீர் சூழ்ந்திருக்கும் காலங்களில்கூடப் பயிர் வீணாகாது.
நெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 09443320954
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்