வெள்ள நீர் பதிப்பில் இருந்து நெல் பயிரை காப்பது எப்படி?

தமிழ் நாட்டில் எப்போதும் இல்லாத படி இந்த வருடம் மிக அதிகமாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. நெற்பயிர்கள் மற்றும் பல வித பயிர்கள் பாதிக்க படும் சூழ்நிலை.

நீர் தேங்கியுள்ள பயிர்களைப் பாதுகாக்க வேளாண்துறை ஆலோசனை அளித்து உள்ளது.

  • வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நெற்பயிர் பாதிக்கப்படலாம். மேலும் பூச்சி, பூஞ்சாணங்களால் நெற்பயிருக்கு பாதிப்பு உண்டாகலாம்.
  • நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி பயிர் மூழ்காத அளவு நீரை வெளியேற்ற வேண்டும்.
  • தற்போது மூழ்கியிருக்கும் பகுதிகளில் இளம்பயிரில் நட்ட குத்துக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அதே ரக நாற்றுகள் கிடைத்தால் போக்கிடங்களில் நடவு செய்ய வேண்டும்.
  • சம்பா பயிர் நடவு செய்து 30-40 நாள்களுக்கு மேல் இருப்பின், இப்பயிரில் தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு போன்ற பூச்சிகளும் பயிர் அடர்ந்து வளர்ந்திருக்கின்ற பகுதியில் புகையான், பச்சைத்தத்து பூச்சிகள், எலிகளின் சேதம் போன்றவை காணப்படலாம்.
  • இவற்றை கண்காணித்து பூச்சிக் கட்டுப்பாட்டிற்கான மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். பூச்சிகளின் தாக்குதல் தென்படும் இடங்களில் 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற அளவில் புரோபினோபாஸ் மருந்தை கலந்து கைத்தெளிப்பான் மூலம் மழை இல்லாத நேரத்தில் தெளிக்கவும்.
  • தற்போது குலை நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிகையாக நடவு வயலில் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் கலவையை 30 கிலோ நன்கு மக்கிய மற்றும் உலர் நிலையில் உள்ள சாண எரு கலந்து இட வேண்டும்.
  • மேலும் ஏக்கருக்கு கார்பன்டசிம் 100 கிராம் அல்லது டிசைசைக்ளோசால் 200 கிராம் மருந்து 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பாக்டீரியா இலைக்கருகல் மற்றும் கீறல் நோய்களின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீத பசுஞ்சாணக் கரைசல் 100 லிட்டர் நீரில் கரைத்து 12 மணி நேரம் ஊற வைத்து தெளிந்த நீரை வடித்து இத்துடன் 100 லிட்டர் நீரை கலந்து 200 லிட்டராக்கி தெளிக்கவும். அல்லது ஸ்டரெப்டோமைசின் சல்பேட்டுடன் டெட்ராசைக்கிளின் கலந்து மருந்து கலவையை ஏக்கருக்கு 120 கிராமுடன் காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவும்.
  • நீர்வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 55 கிலோ யூரியாவுடன் 45 கிலோ ஜிப்சம் மற்றும் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து இத்துடன் 42 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.
  • பயிரின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக 200 லிட்டர் நீரில் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்சல்பேட்டைக் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும்

இவ்வாறு பரங்கிப்பேட்டை உதவி வேளாண்மை இயக்குநர் இ.தனசேகர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *