`கஜா’விலும் சாயாத பனைமரங்கள் காரணம் என்ன?

`கஜா'விலும் சாயாத பனைமரங்கள்... காரணம் என்ன?

 

பனை மரங்கள், நன்கு முற்றிட 80 ஆண்டுகள் ஆகும். மற்ற மரங்களைப்போல் வைரப்பகுதி, நடுப்பகுதியில் உருவாவதில்லை. பனையில் வைரப்பகுதி வெளிப்பகுதியில் உருவாகும்.

டலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது மத்தியில் இருக்கும் மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களையும் துவம்சம் செய்து விட்டுச் சென்றிருக்கிறது `கஜா’ புயல். அப்புயலில் அனைத்து வகை மரங்கள் சாய்ந்தாலும், பெரும்பாலும் சாயாமல் ஈடுகொடுத்த மரம் என்றால் அது பனைமரமாகத்தான் இருக்கும். பனை மட்டும் ஏன் இவ்வளவு பலமாக எதிர்த்து நிற்கிறது என்ற திடமான சந்தேகம் எழவே, `வனதாசன்’ ராஜசேகரன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். பனை மரத்தின் தன்மையைப் பற்றியும், பனையின் அவசியத்தைப் பற்றியும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

“நம் முன்னோர்கள், பயன்பாட்டின் அடிப்படையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் சில வகை மரங்களை வளர்த்து வந்துள்ளனர். அவற்றில் ஒரு மரத்தை மட்டும் பல வகைகளில் பயன்படும் என்று கருதி அனைத்து இடங்களிலும் நட்டுவைத்து வளர்த்துள்ளனர். அந்த மரம்தான் தமிழகத்தின் பாரம்பர்ய மரமான பனை. இம்மரத்தை `பொதுநலத்தின் அடையாளம்’ என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில், அந்தக் காலத்தில் இம்மரத்தை நட்டவர்கள் யாரும் தங்களுக்காக நடவுசெய்யவில்லை. வருங்காலச் சந்ததிகளுக்காகத்தான் நடவுசெய்தனர். ஆனால், நகரமயமாக்கலில் பனைமரங்கள் பழங்கதைகளாகி வருவதுதான் வேதனை.

பனை மரங்கள்

`உச்சி சலசலக்கும், உடல் நீண்டு இருக்கும். நிறம் கருத்திருக்கும். நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கும். அது என்ன?’ என்று கேட்கும் கரிசல் காட்டுக் குரலுக்கு, `காணாமல் போன பனை’ என்றுதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது. `பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது’ என நெஞ்சு நிமிர்ந்து நின்ற பனங்காடுகளை, இன்றைக்குப் பார்க்க முடியவில்லை. இதை விவசாயத்துறையும் கண்டுகொள்வதில்லை, வனத்துறையும் கண்டுகொள்வதில்லை. காலுக்கடியில் இருக்கும் புதையலைப் புரிந்துகொள்ளாமல், உலகெங்கும் பிச்சையெடுத்த கதைக்கு நாம்தான் சிறந்த உதாரணம்.

பத்து சதுர மீட்டர் இடத்தில், ஆண்டுக்கு 200 லிட்டர் பதநீர், 10 ஓலைகள், ஒன்றரை கிலோ தும்பு, இரண்டரை கிலோ ஈர்க்கு என்று பலவற்றையும் அள்ளிக்கொடுக்கக்கூடிய மரம் பனை. சாப்பிடுவதற்குக் கிழங்கும், கோடைக்கு நுங்கும் பனைமரத்திலிருந்து கிடைக்கின்றன. பாசனம் செய்யாமலேயே, கரும்புக்கு இணையாகச் சர்க்கரை தரக்கூடிய மரம் பனை.

பனையிலிருந்து இவ்வளவு பயன்கள் கிடைத்தாலும், அம்மரத்தை அழிப்பதில் உள்ள தீவிரம், வளர்ப்பதில் இல்லை என்பதுதான் உண்மை. பனைமரத்துப்பட்டி, பனங்குடி, பனையூர் என ஊர்ப் பெயர்களில் மட்டுமே தற்போது பனை வாழ்ந்துகொண்டிருக்கிறது. பண்டைய நாகரிகம், வரலாறு பேசும் அநேக நூல்கள் பனை ஓலையில் எழுதப்பட்டவையே. காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பே, பண்டைய தமிழர்கள் பனை ஓலையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் பனை, தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கம்.

ஆண் பனையில் திரட்சியான தடிமனான பூந்தண்டு உருவாகும். இந்தப் பூக்களைத் துள்ளுப்பூக்கள் என்பார்கள். இவை மஞ்சள் நிற மகரந்தத்தை உதிர்த்து, காற்றிலே மிதக்கவிடும். அதேநேரம் பெண் பனையில் பூக்கள் குரும்பையாக உருவாகும். காற்றிலே மிதந்துவரும் மகரந்தம், குரும்பையில் விழுந்து மகரந்தச்சேர்க்கை நடைபெறும். பனையின் பூக்கும் காலம் இடத்துக்கு இடம் மாறுபடும். தொடர்ந்து பெண் பனைகளில் காய்கள் உருவாகும். அவை ஒன்று முதல் மூன்று கண்களை உடைய காய்களாக வளர்ச்சி பெறும். இளங்காய்கள் `நுங்கு’ எனப்படும். நுங்கு முற்றியவுடன் கொட்டைகளுடன் கனிந்து பழமாகும். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இப்பழங்கள் மரத்திலிருந்து உதிர்கின்றன.

பனை மரம்

பனையின் இளம் ஓலைகளைக்கொண்டு பெட்டி, பைகள், பாய்கள், விசிறிகள், கூடைகள், பூக்கள், மாலைகள், தட்டிகள், தொப்பிகள் எனப் பல வகையான பொருள்கள் செய்யப்படுகின்றன. குடிசைத் தொழிலாக உற்பத்திசெய்யப்படும் இந்தப் பொருள்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. தமிழகத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மகாபலிபுரம், கீழக்கரை, மணப்பாடு, பழவேற்காடு, மாத்தூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் பனைப்பொருள்கள் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.

பனை, நன்கு முற்றிட 80 ஆண்டுகள் ஆகும். மற்ற மரங்களைப்போல் வைரப்பகுதி, நடுப்பகுதியில் உருவாவதில்லை. பனையில் வைரப்பகுதி வெளிப்பகுதியில் உருவாகும். இந்த வைரப்பகுதி கனமாகவும் வலுவாகவும் இருக்கும். ஒரு கன மீட்டர் மரம், 850 முதல் 1,100 கிலோ வரை எடை இருக்கும். பனைமரத்தூணுக்கு அதிர்ச்சி தாங்கும் திறன் அதிகம்.

பனை மரச்சட்டங்கள் கறையான்களால் எளிதில் அரிக்கப்படுவதில்லை. பனை மரத்தின் வேர்ப்பகுதி நார்த்தன்மை கொண்டது. அதிக அளவு ஆழமாக வேர் செல்லக்கூடியது. இந்தக் காரணங்களால்தான் பனை மரங்கள் டெல்டா பகுதிகளில் அதிகமாக விழவில்லை. பனையை அவ்வளவு எளிதாகப் புயலால் வீழ்த்த முடியாது.

இதுபோக கிராமங்களில் குளங்களைச் சுற்றிப் பனைமரங்களை நட்டு வைத்திருப்பார்கள். அது கரையைப் பலப்படுத்த, நம் முன்னோர்கள் கையாண்ட முறை. கரைகளில் பனைகளை விதைக்கும்போது பத்தடி இடைவெளியில் விதைக்க வேண்டும். ஆளுக்குப் பத்துப் பனை விதைகளை நட்டாலே… நம் மாநில மரம் காக்கப்படுவதோடு, நம்முடைய கொள்ளுப் பேரன்களுக்கு நுங்கும் பதநீரும் கிடைக்கும்.

பனைமரம் அழிவின் விளிம்பில் இருந்தாலும், சமீபகாலமாகப் பனைமரத்தைப் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துவருகிறது. மீண்டும் மக்கள் பனைப் பொருள்களைத் தேடித்தேடி வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனை நடவுப் பணியைத் தன்னார்வலர்கள் முன்னெடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.

பனை

பனையைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருவது ஆறுதலான செய்தி. தன்னார்வலர்கள் மூலம் இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 50,000 பனை விதைகள் பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ளன.

பனையின் பயனைப் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டுசென்றால், இன்னும் பல தலைமுறைகளுக்குப் பனைமரங்கள் தழைத்துச் செழிக்கும். டெல்டா பகுதிகளில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளர வேண்டிய மரமும் பனைதான். அனைத்துச் சூழலுக்கும் ஏற்ற மாதிரி வளரும்” என்றார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *