தமிழ்நிலத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்களின் பரிதாப நிலை

விவரம் தெரிந்த வயதில் பொங்கலுக்கு முந்தைய நாள் முழுக்குடும்பமாக வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளையடித்தபோதுதான் மேற்கூரையில் பதியப்பட்டிருந்த பனங்கட்டைகள் என் கண்ணில் பட்டன.

அதற்கு முன்பு நுங்கு, பனங்கிழங்கு எனப் பனை சார்ந்த பலவற்றை தின்றிருந்தாலும் பனங்கட்டைகள்தான் பனையின் பிரம்மாண்டத்தையும் அதன்மீதான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த வீடு 60களின் தொடக்கத்தில் கட்டப்பட்ட காரை வீடு. இன்றும் அதே கம்பீரம் குறையாமல் அப்படியேதான் இருக்கின்றது அந்த பனங்கட்டைகளும் வீடும். உலகத்தின் தொல்குடி, மூதாதையர் இனம் என தமிழ்குடியைச் சொல்லும்போதே அந்தப் பெருமைகளனைத்தும் பனைமரத்துக்கும் உரித்ததாகிறது. தமிழனின் ஆதிநூலான தொல்காப்பியத்தில் இருந்து காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புள்ள தமிழ் இலக்கியம் வரை அனைத்தும் பனை தந்த ஓலைச்சுவடிகளில்தான் எழுதப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் ஆதிகாலத்தில் இருந்தே தொடர்புடைய மரமாகப் பனைமரம் இருந்துவருகிறது. அதனால்தான் பனை மரம் நம்முடைய மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பனைமரம்

ஆனால் மாநில மரத்தின் மீதான நமது பார்வைகளும் செயல்பாடுகளும் மெச்சிக்கொள்ளும்படி இல்லை. தமிழகத்தில் பனைமரங்களின் இருப்பு என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. 1970-களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் 6 கோடி பனைமரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய கணக்கெடுப்பு 5 கோடியாகக் குறைந்துள்ளதாக கூறுகிறது. ஆனால் இந்த கணக்கெடுப்பு என்பது எந்தளவிற்கு உறுதியானது என்று தெரியவில்லை என கூறுகிறார் பனைமர செயற்பாட்டாளர் ரா.பஞ்சவர்ணம். பனைமரம் எனும் நூலை எழுதியுள்ள இவர், “ஹெக்டேர் அளவில் கணக்கெடுப்பு நிகழ்த்தப்படுவதால் உண்மையில் எவ்வளவு பனைமரங்கள் இருக்கிறது என துல்லியமாகத் தெரிவதில்லை. உண்மையில் வெளியில் கூறும் எண்ணிக்கையைவிடப் பனைமரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்” என்கிறார் ரா.பஞ்சவர்ணம்.

குழந்தைகள் நடந்து பழகும் வயதில் நடைக்கருவியாகவும், சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுப்பொருளாகவும் இருந்தது நுங்குவண்டி. இப்போது நுங்கினையே அவ்வளவு எளிதில் பார்க்கமுடிவதில்லை. நுங்கு, பதநீர் என வெயிற்காலத்திற்கு ஏற்றக் குளிர்ச்சியான உணவுப்பொருட்களையும் பனை நமக்குத் தருகிறது. ” இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற சொலவடை பனைமரத்துக்கு மட்டுமே பொருந்தும். பனம்பழமாக விழுந்து விதையாக முளைத்து மரமாக வளர்ந்து கீழே விழும்வரை அதன் ஒவ்வொரு பகுதியும் பலவித பயன்களை மனிதர்களுக்குத் தருகிறது. அதுமட்டுமில்லாமல் சூழலியல் சார்ந்த தேவைகளையும் பனைமரம் நிறைவு செய்கிறது.

நுங்கு

பனைமரம் உறுதியான சல்லிவேர்த் தொகுப்பை கொண்டிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக குளக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கால்வாய்களை ஒட்டிய பகுதிகளிலும் நம் முன்னோர் வளர்த்தனர். அதுமட்டுமல்லாமல் வயல்வரப்புகள், தோட்டங்கள் போன்றவற்றில் வேலியாகவும் பனைமரங்களைப் பார்க்கலாம். குறைந்தது 60 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய பனைமரம் பல்வேறு உயினங்களுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாக திகழ்கிறது. தூக்கணாங்குருவிகள், கள்குருவிகள், தேன்சிட்டுகள், தேரைகள், இன்னும் பல ஊர்வன, பறப்பன என 100-க்கும் மேற்ப்பட்ட உயிரிகள் பனைமரத்தைச் சார்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பனை வகைகள் காணப்படுகின்றன என தாவரவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் பனைமரங்கள் காணப்படுகின்றன. திருவள்ளூர், சேலம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர், 25 கிலோ கருப்பட்டி, 10 கிலோ விறகு, 20 கிலோ பனைநார், 6 பனைஓலை பாய்கள், 2 கூடைகள் ஆகியவற்றை நாம் பெறலாம். இன்னும் மதிப்புக்கூட்டினால் அதிக பொருட்களைப் பெறலாம். நுங்கு, பதநீர், பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, கருப்பட்டி, பனங்கற்கண்டு, கள்ளு, பனை நார், பனங்குருத்து என எண்ணற்ற பொருட்கள் பனைமரத்தில் இருந்து கிடைக்கின்றன. இவை அனைத்தும் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் தவறாமல் இடம்பெற்று வந்தன. அதன்மூலம் நமது ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்போது இவற்றில் ஏதாவது ஒன்று கிடைப்பது கூட அரிதாகத்தான் இருக்கிறது.

பனை மரங்கள் அழிந்து வருவதால் இயற்கைக்கு மட்டுமல்லாமல் அதைச் சார்ந்தே தொழில் செய்யக்கூடிய பலரும் பாதிக்கப்படுகின்றனர். பனைமரத்தில் ஏறி தொழில் செய்யும் பனையேறிகள் பனைமரங்களின் அழிவின் காரணமாக வேறு தொழில் செய்யத் தள்ளப்படுகின்றனர். விவசாயிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் கூட பனையேறிகளுக்குக் கிடைப்பதில்லை. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் 2014-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி பனையேறிகளின் எண்ணிக்கை முன்பைவிட பாதியளவு குறைந்துள்ளது. பனையேறிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 40 வயதிற்கும் மேற்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என அந்த கணக்கெடுப்பு கூறுகிறது. பனையேறிகளைத் தவிர நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பனைத்தொழிலினைச் சார்ந்துள்ளனர்.

இந்தியா முழுக்க 8 கோடிக்கும் மேற்பட்ட பனைமரங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 5 கோடி பனைமரங்கள் தமிழகத்தில்தான் காணப்படுகிறது. பனை சார்ந்த ஏற்றுமதியிலும் தமிழகமே முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பனைமரங்கள் அதிகமாக வெட்டப்படுவதால் சூழலியல், பொருளாதார பலன்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாகிறது. பனைமரம் குறித்தன விழிப்பு உணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் பனைமரத்தினைப் பற்றி ஆவணப்படம் எடுத்து வரும் காட்சன் சாமூவேல். மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை பனைமரங்களின் பாதையில் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இவர்.

காட்சன்

“பனைமரம் பற்றிய கீழான பார்வையையும் பனையேறித் தொழிலையும் மதிக்காததே பனைமரத்தின் மீதான அலட்சியத்திற்குக் காரணம். ஒரு பனைமரம் கூடப் பனையேறிகளுக்கு சொந்தமாக இருப்பதில்லை. மேலும் இது ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த தொழிலாகப் பிம்பத்தை ஏற்படுத்தியதும் முக்கிய காரணம்” என்கிறார் காட்சன்.

தமிழர்களின் வாழ்வியலோடும் பனை நெருங்கிய ஒன்று. வீட்டில் பொருட்களை வைப்பதற்குப் பனை ஓலையில் செய்யப்பட்ட கூடைகள், முறங்கள், பெட்டிகள் போன்றவையே பயன்படுத்தப்பட்டன. பனை ஓலையில் வைக்கும் பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாது என்ற அறிவியல் உண்மையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கிறது.” தமிழ்நிலத்தின் எல்லா மதத்தினரோடும் பிணைந்த ஒன்றாகப் பனைமரம் இருக்கிறது” என்றும் காட்சன் குறிப்பிடுகிறார்.

“பனைமரம் குறித்தான தாவரவியல் ஆய்வுகளும் பெருமளவில் செய்யப்படவில்லை. உலக அளவிலும் இந்திய அளவிலும் மிகச்சிலரே இதுகுறித்து ஆய்வு செய்துள்ளனர். ஆதலால் இதுகுறித்து தாவரவியல்ரீதியாக படிப்பதே சவாலாக இருக்கிறது. ஒவ்வொரு தாவரத்தைப் பற்றியும் பதிவு செய்வது பின்னாளில் நமது சந்ததிகளுக்கு முக்கியமானது” என்கிறார் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் துறை தலைவரும் பேராசிரியருமான ரவிச்சந்திரன். பனைமரம் குறித்து இனப்பெருக்க, தாவர பரவல், உணவுசத்துகள் என ஐந்து தலைப்புகளுக்கும் மேல் ஆய்வு செய்து வருகிறார்.

பனைமர பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அரசு நிறுவனமான தமிழ்நாடு பனை உற்பத்தி மேம்பாட்டு மையம் எவ்வித செயல்திட்டங்களும் இன்றி முடங்கிக்கிடக்கிறது. அங்குள்ள ஒரு அதிகாரியிடம் பேசுகையில், “அரசிடமிருந்து எவ்வித நலத்திட்டங்களோ, நிதி உதவியோ வருவதில்லை. இருக்கிற பனை தொழிலாளர்களை வைத்து அதற்கான விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்” என அலட்சிய பதிலே கிடைத்தது. கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் நுங்கை வைத்தே ஐஸ் கீரிம் செய்கின்றனர். மேலும் பல பனை சார்ந்த பொருட்களையும் பெருமளவில் சந்தைப்படுத்துகின்றனர்.

பனை கட்டைகள்

பல்வேறு இயற்கை சீற்றங்களையும் வறட்சிகளையும் தாங்கி வளரக்கூடிய பனைமரங்கள் எவ்வித பராமரிப்பையும் கோருவதில்லை. அரசின் கவனமின்மையும் மக்களிடையே போதிய விழிப்புணர்வின்மையுமே பனைமரங்களின் அழிவிற்குக் காரணமாக உள்ளது. தமிழகத்தின் குளங்களும் ஆறுகளும் தொடர்ந்து சூறையாடப்படுவதன் விளைவாகவும் பனைமரங்கள் அழிந்து வருகின்றன. பனை அதிகளவில் இருக்கும் தென்மாவட்டங்களிலேயே செங்கற்சூளைகளுக்கு மிகவும் சொற்ப விலைக்கு வெட்டப்படுகின்றன. கடந்த ஆண்டில் இராமநாதபுரத்தில் மட்டும் 50 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. “இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே கள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. பெருமுதலாளிகளுக்கு இலாபம் தரும் மதுவினை விற்கத்தான் இந்த ஏற்பாடு. கள் குடிப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை மாறாக ஆரோக்கியத்தோடே வாழ்ந்திருக்கிறார்கள்” என்று கள் அரசியலையும் சொல்கிறார் ரா.பஞ்சவர்ணம்.

சூழலுக்கும் மனிதனுக்கும் தேவையான பனைமரத்தை அழிப்பதை இனிமேலும் வேடிக்கை பார்க்காமல் அரசு தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தனிமனிதனாய் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதை அதிகரிக்கலாம். பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு தடை செய்ததைப் போல பனை ஓலையால் செய்யப்படும் கூடைகள் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிப்பதன் மூலம் பனைமரத்தின் அழிவைத் தடுக்கலாம். மேலும் மீதமிருக்கிற பனைமரங்களையாவது வெட்டாமல் அதன் பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் பனைமரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம். தமிழனின் ஆதிமரம், மாநில மரம் என பல்வேறு பெருமைகளையும் நமது கலாசாரத்தோடும் இயற்கையோடும் இயைந்து வாழும் பனை மரத்தின் தேவை, என்றென்றைக்குமானது

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *