தமிழக அரசின் சின்னமான பனை மரங்கள் ஒரு காலத்தில் எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. இப்போது அபூர்வமாகி வருகின்றன இந்த மரங்கள். இந்த மரங்கள் தலை முதல் வேர் வரை மக்களுக்கு பயன் தருபவை

அழிந்து வரும் பனை மரங்கள் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இவற்றை காப்பாற்ற இயக்கங்கள் பற்றியும் படித்து உள்ளோம்.
இப்போது சிலர் களத்தில் இறங்கி இந்த மரங்களை நட்டு வருகின்றனர். இதை பற்றிய செய்தி:
மண் அரிப்பைத் தடுக்க கடலூரில் கெடிலம் ஆற்றின் கரையில், 10 ஆயிரம் பனைமர விதைகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது.
கடலூர் கெடிலம் ஆறு ஒரு காலத்தில் புனித நதியாக ஆன்மிக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆற்றில் கழிவுநீர் கலந்து முள்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது.
ஆற்றை சீர்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சியின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆற்றின் இருபுறமும் கரைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகின்றன.
ஒவ்வொரு முறையும் மழைக் காலத்தில் கடலூர் கெடிலம் ஆறு பெரும் வெள்ளப் பெருக்கிற்கு உள்ளாகும். அப்போது கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, கெடிலம் ஆற்றின் கரைகளை பலப்படுத்தவும், பசுமைப்படுத்தவும், பாதுகாக்கவும் பல்வேறு அமைப்புகள் முன் வந்துள்ளன.
ஐ லவ் இந்தியா அறக்கட்டளை, தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கடலூர் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து கடலூரில் படைவீரர் மாளிகையில் தொடங்கி கம்மியம்பேட்டை தடுப்பணை வரை 10 ஆயிரம் பனைமர விதைகளை நட்டு வளர்க்க திட்டமிட்டன.
பனை மரங்கள் இயற்கை பேரிடர்களில் இருந்து நிலத்தையும், மக்களையும் காப்பாற்றும் திறன் வாய்ந்தவை. மேலும் எவ்வித சவால்களையும் எதிர் கொண்டு வளரும் தன்மை வாய்ந்தவை. இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பனைமரங்கள் கெடிலம் ஆற்றின் கரையின் இருபுறமும் வளர்க்கப்பட்டால் கரைகள் பலப்பட்டு ஆற்றுக்கும் அதேநேரம் பொது மக்களுக்கும் பாதுகாவலாக விளங்கும் என இப் பணியினை மேற்கொண்ட அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன் பேரில் இப்பணிகள் கடலூர் கெடிலம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழைம தொடங்கப்பட்டன. அமைச்சர் எம்.சி.சம்பத் பனை மர விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.இப் பணிகளை தொடர்ந்து மேலும் 20 ஆயிரம் பனை மர விதைகள் கடலூர் கெடிலம் ஆற்றின் கரைகள் முழுவதிலும் நடப்படும் என தெரிவித்தனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்