பனை தந்த மாதம் லட்ச ரூபாய் வாழ்க்கை!

பனை மரம் தென்மாவட்டங்களின் உயிர்மரம். இரவு நேரத்தில் விழுந்து கிடக்கும் பனம்பழத்தை எடுக்க, அதிகாலையில் பனங்காட்டுக்குள் கடும் போட்டியே நடக்கும். கோழி கூவும் முன்னரே எழுந்து பனம்பழம் எடுக்கச் செல்வார்கள். முந்திச் செல்பவர்களால் மட்டுமே பனம்பழம் அதிகம் எடுக்க முடியும். போர்க்களத்தில் வெட்டுண்டு கிடக்கும் மனிதத் தலைகள்போலவே நிலவொளியில் ஆங்காங்கே தென்படும். சில சமயங்களில் பேய்கள்கூட பனம்பழங்கள் போல விழுந்து,  பனம்பழம் எடுக்கச் செல்பவர்களை ஏமாற்றுமாம். அதனால் தரையில் கிடக்கும் பனம்பழத்தை மூன்று முறை கால்களால் தட்டிய பிறகே குனிந்து எடுப்பார்கள். இல்லையென்றால், பேய் அடித்துவிடும். இப்படியாக  பேய்க்கதைகள் உலவும் பூமிதான் பனங்காடு.

பனை ஏறும் தொழிலாளி

பனைமரம் ஏறுவதே தனிக்கலை. ஒல்லியான வலுவான தேகம். `பளபள’வென  செருகிவைக்கப்பட்ட அரிவாள்.  கலயத்தில் சேர்ந்திருக்கும் கள்ளை ஊற்ற சிறிய வாலி, கால்களில் அணிந்திருக்கும் கயறு… இவையெல்லாம்தான் பனையேறும் ஒரு தொழிலாளியின் அடையாளங்கள். பனைமரம் ஏறினால்  மட்டும் போதாது… சரியான கிளையைப் பிடித்து மரத்தின் உச்சிக்குச் செல்ல தெரிய வேண்டும். கரணம் தப்பினால் காலன் அழைத்துக்கொள்ளும் தொழில் இது. பனைமரம் சராசரியாக 35 அடிகள் உயரம் வரை வளரும். நாள் ஒன்றுக்கு 50 பனைமரங்கள் ஏறி இறங்குவார்கள்.இன்ஷூரன்ஸும் இல்லை; பாதுகாப்பு உபகரணங்களும் கிடையாது. ஒரு பனைமரத்தில் ஏறினால் அதையொட்டி உள்ள மற்றொரு பனைமரத்தின் கிளையைப் பிடித்து மரத்துக்கு மரம் தாவும் திறமைகொண்ட பனையேறிகளும் இருந்ததாகச் சொல்வார்கள். பனைமரங்கள் அழிவதுபோல அவர்களும் மறைந்துவிட்டார்கள்.

பனையில் இருந்து கிடைக்கும் பதநீரும் நுங்கும் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியவை. தென்னையும் பனையும் நிறைந்த கேரளத்தில் கள்ளுக்கடைகள் எனப்படும் `டாட்டி ஷாப்’புகளும் அதிகம். பெண்களுக்கு தனி இடவசதி அளிக்கும் கடைகளும் உள்ளன. இதனால், பனைமரம் ஏறும் தொழில் அங்கே  இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. மாநிலம் முழுவதுமே கள்ளுக்கடைகள் பரவிக் கிடக்கின்றன. ஒரு லிட்டர் கள், 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மரத்தின் சொந்தக்காரருக்கு 30 ரூபாய், பனைமரம் ஏறும் தொழிலாளிக்கு 18 ரூபாய். எஞ்சியது கடைக்காரர்களுக்கு. கேரளத்தில் இதை `கள்ளுக் கணக்கு’ என்கிறார்கள்.

பனை ஏறும் தொழிலாளர்களுக்கு அங்கே கடும் டிமாண்ட். ஒயிட் கலர் ஜாப்புக்கு மட்டும்தான் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என நாம் கேள்விப்பட்டுள்ளோம். கேரளாவில் பனைமரம் ஏறும் தொழிலாளியான சலீமான்,  மாதாமாதம் சர்வசாதாரணமாக 1,25,000 ரூபாய்  வரை சம்பாதிக்கிறார். சலீமானின் நாள் சம்பளம் 4 ஆயிரம் ரூபாய். இதுதவிர, பனைமரம் ஏறும் சங்கம் வழங்கும் போனஸ் தனி.  கடந்த ஆண்டு சலீமான் இரண்டரை லட்சம் ரூபாய் போனஸாகப் பெற்றார். சலீமானின் தந்தையும் பனையேறும் தொழிலாளிதான். தந்தையின் உயிரை `கள்’ குடிக்க… சிறு வயதிலேயே சலீமான் மீது குடும்ப பாரம் விழுந்தது. சலீமானும் பனங்காட்டுக்குள் புகுந்தார்.

சலீமான்

 

காலை 7 மணிக்கு மரம் ஏறத் தொடங்கினால் இருள் கவ்வும் வரை பனை ஏறுவார். நாள் ஒன்றுக்கு 210 லிட்டர் கள் இறக்குவார். ஒருநாள்கூட விடுப்பு எடுக்க மாட்டார்.  கடந்த நிதி ஆண்டில் மட்டும் 40 ஆயிரம் லிட்டர் கள் இறக்கி சலீமான் சாதனை படைக்க, கேரள அரசு அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. கோட்டயம் அருகே உள்ள மடப்பாடு என்பதுதான் சலீமானின் சொந்த ஊர். மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளராக இருந்த சலீமானால், தொழில் `பிஸி’ காரணமாக கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலகிவிட்டார். மூத்தமகளை எம்.காம் படிக்கவைத்துள்ளார். இளைய மகள் பி.காம் படித்துள்ளார்.

சலீமான் மரம் ஏறத் தொடங்கி 32 ஆண்டுகள் ஓடிவிட்டன. சிலருக்கு ஒருநாள் வேலைக்குப் போகவில்லை என்றால்கூட கிறுக்குப் பிடித்ததுபோலாகிவிடும். சலீமானும் அந்த ரகம்தான்.  உறவினர் வீட்டு விஷேசத்துக்குச் சென்றால்கூட, தலையைக் காட்டிவிட்டு மீண்டும் பனங்காட்டை நோக்கி  ஓட்டம் பிடிப்பார். “எங்கே சென்றாலும்  மனம் முழுக்க பனங்காட்டில்தான் இருக்கும். மீண்டும் பனங்காட்டுக்குள் நுழையும் வரை டென்ஷன்தான். இளைய தலைமுறையினர் பனைமரம் ஏற விரும்புவதில்லை. எனக்கு மாற்றாக யாரும் இல்லை. ஒருநாள் கள் இறக்கவில்லை என்றால்கூட என்னை நம்பியிருக்கும் கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டுவிடுவார்கள். அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சுதான். என் தந்தை குடித்துக் குடித்தே அழிந்துபோனார். அவர் இறந்த பிறகும் எனக்கும் என் குடும்பத்துக்கு பனைமரம்தான் சோறு போட்டது. இப்போது 50 சென்ட் நிலத்தில் வீடு கட்டியிருக்கிறேன். மகள்களை நல்ல இடத்தில் கல்யாணம் கட்டிக்கொடுத்தேன். எல்லாமே பனை தந்த வாழ்க்கைதான்”  என்று பனை மரத்தின் பெருமை பேசும் சலீமான் ஒரு டீடோட்லர்!

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *