பனை மர சிறப்புகள்

பனைமரம் தமிழர்களின் அடையாளம். பனையின் வேர் முதல் நுனி வரை பயன் தருகிறது. எனவே இதற்கு ‘கற்பகதரு’ என்று பெயர். இதில் 801 பயன்பாட்டு பொருட்கள் இருப்பதாக ‘தாலவிலாசம்’ என்ற நுால் கூறுகிறது. பனைமரம் பல்லுயிர் களின் வாழிடமாக உள்ளது.

நாம் பயன்படுத்தும் காகிதத்தின் ஆயுட்காலம் நுாறு ஆண்டுகள். பனை ஓலையின் ஆயுட்காலமோ 400 ஆண்டுகள். பண்டைய கால இலக்கியங்கள் எல்லாம் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டன.

அப்படிப்பட்ட பனை மரத்தின் விதைப்பு முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.


வறட்சியான பகுதியில் குறிப்பாக துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் பனை மரங்கள் வளர்கின்றன.

‘அழகுப்பனை’ ஆண் பனை

நன்கு காய்ந்த பனங்கொட்டையை விதைத்தால் மூன்று மாதங்களில் பனங்கன்று உற்பத்தியாகும். நட்ட ஒன்பது முதல் பத்து ஆண்டுகளில் பருவத்திற்கு வந்து விடும்.

நீர்ப்பாசன வசதி இருந்தால் விரைவில் வளர்ந்து விடும். 120 ஆண்டுகள் வரை பயன் தரும்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு தான் ஆண், பெண் மரங்களை அடையாளம் காண முடியும்.

ஆண் பனையை ‘அழகுப்பனை’ என்றும், பெண் பனையை ‘பருவப்பனை’ என்றும் குறிப்பிடுவர். ‘பாளை’ மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பனை ஆண் பனை. இதில் நுங்கு காய்க்காது. பெண் பனையில் மட்டும் தான் நுங்கு காய்க்கும். பெண் பனையில் ஆண் பனையை விட கூடுதலாக பதநீர் கிடைக்கும்.

மரம் ஒன்று பலன் ஏராளம்
ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு நான்கு புது ஓலைகள் வளரும். நான்கு பழைய ஓலைகள் கீழே விழும். ஆறு முதல் 12 பாளைகள் தள்ளும். 100 முதல் 120 பனம் பழங்கள் காய்க்கும்.

சராசரியாக ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு பனை சீசனில் 150 லிட்டர் பதநீர் கிடைக்கும்.

நுங்கு 8 முதல் 10 குலைகள் இருக்கும். ஒரு குலையில் சராசரியாக 20 பனங்காய்கள் இருக்கும். நுங்கு வெட்டாவிடில் பனம் பழமாக பழுத்து கீழே விழும்.

நான்கு மாதத்தில் பனங் கிழங்குகள் கிடைக்கும். ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 5,000 முதல் 6,500 ரூபாய் வரை வருமானம் உண்டு. ஏப்ரல் – அக்டோபர் வரை ஆறு மாதங்கள் பனை சீசன் காலங்கள். மார்ச் கடைசியில் பாளை விழும்.

நீர் வளம் காக்கும் பனைகள்

கண்ணுக்கு தென்பட்ட அந்த மாதத்தில் மரத்தில் ஏறி பாளையை இறுக்கி விட வேண்டும். அப்பொழுது தான் பதநீர் கிடைக்கும்.

கம்போடியா நாட்டில் அதிகளவில் பனை மரங்கள் காணப்படுகின்றன. எங்கு திரும்பினாலும் பனை மரங்களும், பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருட்களை காண முடியும். கம்போடியா நாட்டு மக்கள் பனை மரத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள்.

நாம் மறந்த, பனை மரத்தை அதன் பெருமை கருதி ஆசை, ஆசையாய் வளர்த்து வருகிறார்கள். சாலை ஓரங்கள், கண்மாய்க்கரை ஓரங்களில் அதிகளவில் பனை மரங்களை நட்டு மண்ணரிப்பை தடுக்க வேண்டும்.

தொடர்புக்கு 9443570289 .

– எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *