பழ வகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், பப்பாளியைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல மகசூலையும், அதிக லாபத்தையும் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரகங்கள்:
- பப்பாளி பயிரிட கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7 மற்றும் கூர்க்கனிடியூ மற்றும் சூரியா இவற்றுள் கோ.2, கோ.5 மற்றும் கொ.6 பப்பெயின் எடுப்பதற்கும் உண்பதற்கும் உகந்தது. கோ.3, கோ.7 இருபால் ரகங்களாகும்.
மண், தட்பவெப்பநிலை:
- பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக் கூடியது. எனினும் களிமண் பூமியில் சாகுபடி செய்ய முடியாது. சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் சற்றே வெப்பம் அதிகமாக நிலவும் இடங்களில் நன்கு வளரும். மலைப் பகுதிகளில் சுமார் 1,200 மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வடிகால் வசதி இருப்பதன் மூலம் தண்டுப் பகுதியில் ஏற்படும் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
பருவம்:
- ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். இருப்பினும் ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் பப்பாளி சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.
நிலம் தயாரித்தல்:
- நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்து கொள்ள வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. நீளம், 45 செ.மீ. அகலம் மற்றும் 45 செ.மீ. ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். பின்பு குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நாற்றுக்களை குழியின் மத்தியில் நடவேண்டும்.
விதைப்பு:
- ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் விதைகள் போதுமானது.
நாற்றாங்கால்:
- ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலிதீன் பைகளில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலிதீன் பையில் நான்கு விதைகள் விதைக்க வேண்டும். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுக்கள் 60 நாளில் நடவுக்குத் தயாராகி விடும்.
நீர் நிர்வாகம்:
- வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:
- ஆண், பெண் செடிகளை நீக்கியவுடன் செடி ஒன்றுக்கு 50 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும். மேலும் செடி ஒன்றுக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா அளிக்க வேண்டும். உரம் இட்ட பின் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
நுண்ணோட்டச் சத்து:
- துத்தநாக சல்பேட் 0.5 சதவீதம் மற்றும் போரிக் அமிலம் 0.1 சதவீதம் என்ற கலவையை நடவு செய்த 4ஆவது மற்றும் 8ஆவது மாதங்களில் தெளிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும்.
பின்செய் நேர்த்தி:
- செடிகள் பூக்க ஆரம்பிக்கும்போது, 15 முதல் 20 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியை விடவேண்டும். ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு விட்டு இதர ஆண், பெண் செடிகளை நீக்கவேண்டும். கோ.3 மற்றும் கோ.7 போன்ற இருபால் ரகங்களில் இருபால் பூக்கள் கொண்ட மரங்களை மட்டும் வைத்துக் கொண்டு பெண் மரங்களை நீக்கிவிடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
- நாற்றாங்காலில் நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஒரு பாலிதீன் பையில் ஒரு கிராம் கார்போ பியூரான் 3 ஜி குருணை மருந்தை இடவேண்டும்.
- வேர் அழுகல் நோய்: செடியின் மேல் பாகத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கி நின்றால் இந்நோய் பரவும். இந்நோய் தாக்கிய செடிகள் வாடி இறந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த 0.1 சத போர்டோக் கலவை அல்லது 0.2 மயில்துத்ததம் கரைசலை வேர்கள் நனையுமாறு ஊற்ற வேண்டும். 15 நாள் இடைவெளியில் 2 அல்லது 4 முறை உபயோகிக்க வேண்டும்.
அறுவடை:
- பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக வரும் போது அறுவடை செய்யவேண்டும்.
வயது:
- 24 முதல் 30 மாதங்கள்.
மகசூல்:
- கோ.2 ரகமாக இருந்தால் ஹெக்டேருக்கு 250 டன்களும், கோ. 3 ரகத்தில் 120 டன், கோ.5 ரகத்தில் 250 டன், கோ. 8 ரகத்தில் 160 டன், கோ.7 ரகத்தில் 225 டன்களும் மகசூல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்