பப்பாளி உற்பத்தியில் சாதனை!

பப்பாளி சாகுபடியில் இதுவரை ஒரு மரத்தில் 80 கிலோ உற்பத்தி தான் அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில், இயற்கை முறை வேளாண் உற்பத்தி மூலமாக தங்கள் பண்ணை மரத்தில் 130 கிலோ பப்பாளியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது, மேட்டுப்பாளையம் ஈடன் நர்சரி கார்டன்ஸ்.

இந்த சாகுபடி குறித்து ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளர் எஸ்.ராஜரத்தினம் கூறியது:

 •  1998-இல் துவக்கப்பட்ட இப் பண்ணையில் பல்வேறு வகையான மலர், மர, பழ நாற்றுக்களும் உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
 • நாற்று உற்பத்தியில் இதுவரை விதை, கட்டிங், மண் பதியம், விண் பதியம், ஒட்டு கட்டுதல், மொட்டு கட்டுதல், திசு வளர்ப்பு முறைகளில் மட்டுமே நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
 • ஆனால், எங்கள் நர்சரியில் 8-ஆவது முறையாக இலைகள் மூலமாக நாற்று உற்பத்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளோம்.
 • தற்போது மலைவேம்பு நாற்றுக்களும் லட்சக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்பட ஆந்திரம், கர்நாடக மாநில விவசாயிகளுக்கும் விற்பனை செய்து வருகிறோம்.
 •  விளைச்சலில் சிறந்த ஆதாயம் தரும், ரெட்லேடி ரக பப்பாளி நாற்றுக்களைத் தேர்வு செய்து எங்கள் பண்ணையிலேயே சோதனை முறையில் சாகுபடி செய்து வருகிறோம்.
 • இதற்கென சிறந்த மண் வளம் கொண்ட ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 900 பப்பாளி நாற்றுக்களை 7-க்கு 7-அடி இடைவெளியில் நடவு செய்து, நன்கு மக்கிய ஆட்டு எருவையும், வேப்பம் புண்ணாக்கையும் கலந்து உரமாக இட்டு, இயற்கை முறை வேளாண்மை மூலமாக பயிர் செய்து வருகிறோம்.
 • நடவு செய்த 6-ஆவது மாதத்திலேயே இந்த பப்பாளி நல்ல விளைச்சல் தரக்கூடியது.
 • 10 நாளைக்கு ஒருமுறை அறுவடை செய்தால் போதும்.
 • 2-ஆம் வருட இறுதியில் அதிகபட்சமாக மரத்திற்கு 130 கிலோ வரை பப்பாளி விளைச்சல் கிடைக்கும்.
 • இதற்கு தண்ணீர் செலவும் அதிகமில்லை.
 • மண்ணின் தன்மைக்கேற்ப 7-10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
 •  தற்போது ரெட்லேடி ரக பப்பாளியை பயிர் செய்ய தமிழக விவசாயிகள் மட்டுமின்றி கேரள பகுதி விவசாயிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 • இரண்டு வருடம் விளைச்சலைத் தரும் இந்தப் பப்பாளியை பயிரிட முதல் வருடம் ரூ.35,000, 2-ஆம் வருடம் ரூ.25,000 என மொத்தம் ரூ.60,000 வரை முதலீடு செய்தால், இறுதியில் செலவினங்கள் போக, ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நிகர லாபம் பெறலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *