பப்பாளி சாகுபடி

பழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன்.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

பப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது:

 • “எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைதான் பயிர் செய்து வந்தோம்.
 • எனினும் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள பயிர்கள் பற்றியும், அவை நம் பகுதியில் சாகுபடி செய்ய உகந்ததுதானா என்பது பற்றியும் தொடர்ந்து தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டேன். நண்பர்கள் மூலமாகவும், தோட்டக் கலைத் துறையினர் மூலமாகவும் பல தகவல்களை பெற்றேன். இப்படி கிடைத்த தகவல்களின் அடிப் படையில்தான் பப்பாளி சாகுபடி செய்வது என முடிவெடுத்தேன்.
 • முதல் கட்டமாக 2 ஏக்கரில் செய்து பார்ப்போம் என முடிவு செய்தேன்.
 • இதற்கான விதையை தோட்டக்கலைத்துறையினரின் உதவியோடு பெற்றேன்.
 • தைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த விதை அதிக விளைச்சல் தரக் கூடியது. பழத்தின் சுவையும் நன்றாக இருக்கும்.
 • விதை விலைதான் அதிகம். ஒரு ஏக்கருக்கு 20 கிராம் விதை போதுமானது. இதன் விலை ரூ.4,500.
 • பாக்கெட்டில் மண் நிரப்பி, அதில் விதையைப் போட்டு, 60 நாள்களுக்கு நிழலில் வளர விட வேண்டும்.
 • அதன் பின்னர், வாழைக்கு பாத்தி கட்டுவது போன்று வயலை தயார் செய்ய வேண்டும்.
 • கன்றுகளை நடுவதற்கு சற்று மேடாக மண்ணை வைத்துக் கொண்டு அதில் கன்றுகளை நட்டு, தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
 • பப்பாளி சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை.
 • எனவே, சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருகிறேன். ஏக்கருக்கு 800 கன்றுகள் என்ற வகையில் 1,600 மரங்கள் தற்போது உள்ளன.
 • விதை முளைத்த 6 மாதத்தில் மரம் 5 அடி உயரத்துக்கு வளர்ந்து விடும்.
 • 7 முதல் 8 மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.
 • வாரம் ஒரு தடவை அறுவடை செய்யலாம்.
 • காய்ப்பு தொடங்கி 2 ஆண்டுகளுக்கு காய்கள் அதிக அளவில் காய்க்கும். அதன் பின்னர் குறைந்து விடும். அப்போது மரத்தை வெட்டி விட்டு, புதிதாக நடவு செய்யலாம்.
 • சொட்டு நீர் பாசனத்தின் வழியாகவே இதற்கு தேவையான உரங்களை செலுத்தலாம்.
 • ஓரளவுக்கு நல்ல முறையில் நீர் பாய்ச்சி பராமரித்தால், வாரம் ஒருமுறை ஏக்கருக்கு ஒரு டன் வரை மகசூல் எடுக்கலாம்.
 • அறுவடை செய்யப்படும் பப்பாளியை தனித்தனியே பேப்பரில் சுற்றி, அதை திருச்சி மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனைக்கு அளிக்கிறோம்.
 • தற்போது டன் ஒன்றுக்கு ரூ.12,000 வரை விலை கிடைக்கிறது. அதிக விளைச்சல் இருந்தால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம். விலையும் கூடுதலாக கிடைக்கும்.
 • பப்பாளியை பொறுத்தவரையில் களர், உவர் நிலங்கள் தவிர அனைத்து நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.
 • தங்கள் பகுதியில் உள்ள சந்தையின் தேவையை அறிந்து கொண்டு சாகுபடி செய்வது அவசியம். ப
 • ப்பாளி பயிரில் ஓராண்டு வரையில் ஊடு பயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யலாம்.
 • அதன் பின்னர் ஊடுபயிர் சாகுபடி செய்வது பூச்சி அல்லது நோய் தாக்குதலை பப்பாளி மரங்களுக்கு ஏற்படுத்தி விடும்.

சந்தை வாய்ப்பை அறிந்து கொண்டு சாகுபடி செய்தால், எந்த சாகுபடியையும் வெற்றிகரமாக மேற்கொண்டு, அதில் நல்ல லாபமும் ஈட்டலாம்” என்கிறார் பாலமுருகன். மேலும் விவரங்களுக்கு 09486493933 என்ற செல்பேசி எண்ணில் பாலமுருகனை தொடர்பு கொள்ளலாம்.​

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *