பப்பாளி நாற்றுகள் கட்டிங் முறையில் உற்பத்தி

மேட்டுப்பாளையம் ஈடன் நர்சரி கார்டனில் பப்பாளி மற்றும் செண்பக நாற்றுகளை கட்டிங் முறையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.
கட்டிங் முறையில் நாற்று உற்பத்தி குறித்து இந்த நர்சரி நிர்வாகிகள் எஸ்.ராஜரத்தினம், ஏ.அப்துல் கபார் கூறியது:
வழக்கமாக செண்பக நாற்றுகள் விதை மற்றும்ஒட்டு கட்டும் முறையிலும், பப்பாளி நாற்றுகள் விதைகள் மூலமாக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் நீண்ட நாள் ஆய்விற்கு பின்னர், இவ்விரு நாற்றுகளையும் கட்டிங் முறையில் உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

 கட்டிங் முறை:

  • நன்கு விளைச்சலைத் தரும் உயர்ரக தாய்ச் செடியில் துளிர்க்கும் கிளைகளை எடுத்து பக்குவப்படுத்தி அவற்றை பனிக்கூடாரம் மற்றும் நிழல்வலை கூடாரத்தில் வைத்து வேர்களை உருவாக்கி, அதன்மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்வதே கட்டிங் முறையாகும். இந்த தொழில்நுட்பம் மூலம் அதிக விளைச்சலைத் தரும் தாய்ச்செடிக்கு
  •  இணையான தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்க முடியும்.
  •  தற்போது மேட்டுப்பாளையம் மற்றும் தேரம்பாளையத்தில் இயங்கி வரும் எங்கள் நர்சரியில் 30 வகையான மரம், பழம், மலர் வகை நாற்றுகளையும், சுற்றுச்சூழலை பசுமையாக்கும் நோக்கத்தில் விழாக்களில் வழங்கப்படும் நாற்றுகளையும் அதிகளவில் உற்பத்தி செய்வதாகத் தெரிவித்தனர்.

இலைகள் மற்றும் கட்டிங் முறையில் நாற்று உற்பத்தி குறித்து வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மரவளர்ப்புத் துறை தலைவர் கே.டி.பார்த்திபன் கூறியது:

 

  •  முளைப்புத் திறன் குறைவாக உள்ள பழம் மற்றும் மர வகைகளிலும், மலட்டு தன்மை உள்ள மர வகைகளிலும் தண்டுகள் (கட்டிங் முறை), ஒட்டு கட்டுதல், பதியன் மற்றும் திசு வளர்ப்பு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
  • ஆனால் இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்வது ஒரு சில தாவரங்களில் மட்டுமே சாத்தியமாக இருந்து வந்தது.
  •  ஈடன் நர்சரியில் மலர் வகைகளான குண்டுமல்லி மற்றும் இட்லிப்பூ நாற்றுகளை இலைகளிலிருந்து இனப்பெருக்கம் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
  •  இவ்வாறு உருவாக்கப்படும் நாற்றுக்கள் ஒரே சீராகவும், தாய்ச்செடியின் குணங்களை கொண்டும் இருப்பதால் நல்ல மகசூலை தருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால் இவற்றின் உற்பத்தி மற்றும் மகசூல் திறன் குறித்து ஆய்வு செய்த பின்னரே, பயன்பாட்டிற்கு உட்படுத்த வேண்டும்.
  • மேலும் பப்பாளி செடிகளையும் தண்டுகள் (கட்டிங் முறை) மூலம் இனப்பெருக்கம் செய்திருப்பது புதிய முயற்சியாகும். இந்த விதையில்லா இனப்பெருக்கம் முறை பப்பாளியில் நல்ல மகசூலை தரும் வாய்ப்பு உள்ளது. இந்த நர்சரி உரிமையாளர்கள் வனக்கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய வேளாண் புதுமை திட்டத்தில் பயிற்சி பெற்று அக்ரி பிசினஸ் இன்குபேட்டரில் உறுப்பினர்களாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது என்றார்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *