எங்கெங்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பழமான பப்பாளி, அள்ளி அள்ளித் தரும் பலன்கள் எண்ணிலடங்காதது!
*பொதுவாக, மலம் சிக்கல் இன்றி வெளியேறினாலே, பெரும்பாலான நோய்களைத் தள்ளி வைக்க முடியும். இதற்கு கைகொடுக்கிறது… பப்பாளி. இது மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும்.
* பப்பாளி, பித்தத்தைப் போக்குவதோடு… உடலுக்கும் தெம்பூட்டக் கூடியது. கல்லீரல் கோளாறுகளையும் பப்பாளி சரிசெய்ய வல்லது. சீரற்ற மாதவிலக்கு உள்ள பெண்களுக்கு இப்பழம் அருமருந்து. பப்பாளியில் உள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்ற மூலப்பொருள் உள்ளது. அது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும். மேலும், ‘கார்பின்’ இருதயத்துக்கும் ‘ஃபைப்ரின்’ ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.
* இளமைப் பொலிவைக்கூட்டி வயோதிகத்தை கட்டுப்படுத்தும் பப்பாளி, உடம்பிலுள்ள நச்சுக்கள் முழுவதையும் சுத்திகரிக்கக் கூடியது. தினமும் காலையில் பப்பாளிப்பழத்தை துண்டுகளாகவோ அல்லது ஒரு டம்ளர் ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால், உடம்பில் கழிவுகளே இருக்காது. இயற்கை மருத்துவ சிகிச்சையில் பட்டினி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது பப்பாளிச்சாறு, வெள்ளரிச்சாறு என மாறிமாறி குடித்து வந்தால், உடல் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றிவிடலாம்.
உடல் எடை குறைக்க விரும்புவோர், அதற்கான டயட்டுடன், தினமும் காலை உணவாக பப்பாளிப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பப்பாளிக்காயை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வந்தாலும், எடை குறையும்.
பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை முகப்பரு உள்ளவர்கள் தங்களது முகத்தில் மென்மையாக தேய்த்து வந்தால், பருக்களை போக்குவதோடு முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி பொலிவு கிடைக்கும்.
* உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை எடுத்து முடித்ததும் பப்பாளிப் பழத்தை உண்டால், உடம்புக்கு தெம்பு கொடுக்கும். முக்கியமாக ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொண்டவர்கள், சிகிச்சைக்குப் பின் நிறைய பப்பாளிப் பழம் சாப்பிட வேண்டும். காரணம், குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
இன்று அலோபதி மருத்துவர்கள், பெரும்பாலும் ஆன்டிபயாடிக் மருந்துகளையே பரிந்துரை செய்வதால் குடல் தசைகள் மிக மோசமான பாதிப்புகளுக்கு ஆளாவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இத்தகைய நிலையில் உள்ளோருக்கு பப்பாளி வைத்தியம் நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.
-எம்.மரிய பெல்சின்
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மிக அருமையான தகவல்…. நன்றி….