கூடுதல் லாபம் தரும் பயறு வகைப் பயிர்கள்!

தமிழகத்தில் நிகழ் சம்பா பருவத்தில் வரப்பு பயிராக பயறு வகைகளை சாகுபடி செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.நிகழாண்டு (2016) உலக பயறு வகை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
நமது நாடு அரிசி, கோதுமை, கரும்பு போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும், பயறுவகை பயிர்களில் உற்பத்தியில் தன்னிறைவு அடையப்படாததால், பயறுவகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தில் வேளாண்மைத் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நெல் வரப்புகளில் பயறுவகை சாகுபடி: விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கார்த்திகை பட்டத்தில் பயறுவகை பயிர்களை விவசாயிகள் பெருமளவு சாகுபடி செய்கின்றனர்.
வழக்கமாக முழு வயல்களிலும் பயிரிடுவதைத் தொடர்ந்து, தற்போது நிகழாண்டு சம்பா சாகுபடி நெல் வயல்களில் வரப்பு பயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயிர்களை சாகுபடி செய்திடும் தொழில்நுட்பத்தை வேளாண்த் துறை அறிமுகப்படுத்தி வருகிறது.
நடவுமுறை:

சம்பா நெல் நடவுப் பணி முடிந்த உடன் வரப்பைச் சுற்றி உள்புறம் சேற்றை அணைத்து, அரை அடி உயரத்துக்கு உள்வரப்பு அமைக்கப்பட வேண்டும். அதில் ஓர் அடி இடைவெளிவிட்டு குழிக்கு 2-3 பயறு விதைகள் ஊன்றப்படுகிறது. பயறுவகை விதைகள் மண்ணின் உரத்தை உறிஞ்சி முளைத்து நன்கு செழித்து வளர்ந்துவிடும்.

பயறுவகை பயிர்களில் பொறி வண்டுகள் அதிகம் இனவிருத்தி அடைந்து, நெல் பயிரைத் தாக்கும் இலைச் சுருட்டு புழு, புகையான், இலைப்பேன், குருத்துப்பூச்சி போன்ற தீமை தரும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்களை அழிப்பதால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பும் கிடைப்பதுடன், மருந்து தெளித்திடாத இயற்கை விவசாயத்துக்கு வரப்பு பயிர்கள் பெரிதும் உதவியாக உள்ளது.
உளுந்துப் பயறு மகசூல்:

இதனால், பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்காமல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2,000 செலவு குறைந்திடும். மேலும், பயறுவகை பயிர்கள் வரப்பு பயிர்களில் இருந்து ஏக்கருக்கு குறைந்தது 100 முதல் 200 கிலோ வரை உளுந்து மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
விவசாயிகளுக்கு இன்றைய சந்தை மதிப்பில் ஏக்கருக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனால், விவசாயிகள் நிகழ் சம்பா சாகுபடியில் வரப்பு பயிராக, உளுந்து உள்ளிட்ட பயறுவகைகளை கூடுதலாக சாகுபடி செய்து, பூச்சிமருந்து செலவைக் குறைப்பதுடன், குறைந்த செலவில் கூடுதல் வருவாய் பெறவும் பயறுவகைகளைப் பயிரிட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று, விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தெரிவித்தார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கூடுதல் லாபம் தரும் பயறு வகைப் பயிர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *