தண்ணீர்ப் பற்றாக்குறை நேரத்தில் குறைந்தஅளவு நீரைக் கொண்டு பாசிப்பயறு சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
பாசிப்பயறு:
தண்ணீர்ப் பற்றாக்குறையால் நெல், வாழைப் போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாதபோது பாசிப்பயறு சாகுபடி செய்யலாம். பயிர்களில் பாசிப்பயறு சாகுபடி காலம் மிகக் குறைவு. மேலும் பாசன நீர் குறைவாக கிடைத்தாலும் போதும்.
பாசிப்பயறு சாகுபடியில் இதர நன்மைகளும் உள்ளன. மற்ற பயிர்களைவிட ஏக்கருக்கு உரச்செலவு மிகவும் குறைவு. பயிர்ப் பாதுகாப்புக்கு அதிக செலவில்லை. பாசிப்பயறு சாகுபடியால் நிலம் நல்ல வளம் பெறும். 90 நாளில் லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாகுபடி முன்:
ஓர் ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரமிட்டு நிலத்தை நன்கு உழ வேண்டும். அடி உரமாக ஏக்கருக்கு 60 கிலோ டை அம்மோனியம் பாஸ்பேட் உரமிடவேண்டும். நிலத்தில் நீர் பாய்ச்சி நல்ல ஈரப்பதத்தில் ஒரு சால் உழுது விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 8 கிலோ தரமான விதை தேவை. நீர் பாசனம் செய்ய நிலத்தில் சிறுசிறு பாத்திகள் (20 அடி, 10 அடி) அமைக்கவேண்டும். விதைக்கும் முன் விதைநேர்த்தி, நுண்ணுயிர் நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு அளிக்கும் கவனம் நல்ல பலன் தரும்.
விதை நேர்த்தி:
8 கிலோ விதையுடன் 32 கிராம் திரம் அல்லது டைத்தேன் எம். 45 மருந்து கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் நுண்ணுயிர் நேர்த்தி செய்ய வேண்டும்.
நுண்ணுயிர் நேர்த்தி:
பயறு விதைகளுக்கு நுண்ணுயிரை விதையுடன் நேர்த்தி செய்ய வேளாண் துறை பரிந்துரைக்கிறது. விதைநேர்த்தி செய்த விதையை ஒரு பாக்கெட் நுண்ணுயிர்க் கலவையுடன் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு முதலில் நுண்ணுயிர்க் கலவையை அரிசிக் கஞ்சியில் கலந்து நன்கு பரப்பிய விதையில் கரைசலைத் தெளிக்க வேண்டும். பின்னர், விதையை நிழலில் 15 நிமிடம் உலரவைத்த பிறகு விதைக்க வேண்டும்.
இலைமூலம் உரமிடல்:
பாசிப்பயறுக்கு டிஏபி உரக்கரைசலை இலைமேல் தெளிக்கும்போது சுமார் 50 கிலோ கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. கரைசலை கவனமாக தயாரிக்க வேண்டும். ஏக்கருக்கு தேவையான டை அம்மோனியம் பாஸ்பேட் 4.5 கிலோவை 25 லிட்டர் நீரில் கலந்து ஒருநாள் வைத்திருந்து, தெளிந்த கரைசலை எடுத்து 210 லிட்டர் நீரில் கலந்து முதல் தடவையாக பூக்கும் போதும், பின்னர் 15 நாளில் அதாவது, 2ஆவது முறையும் கைத்தெளிப்பானால் தெளித்தல் வேண்டும். விதைத் தெளிப்பானைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருந்து தெளிக்கும்போது பூக்கள் கீழே விழும் அபாயம் உள்ளது.
களையெடுத்தல்:
பாசிப்பயறுக்கு களையெடுத்தால் நல்ல பயன் கிடைக்கும். களையெடுத்த வயல்களில் காய்கள் கொத்துக் கொத்தாக பிடித்திருக்கும். விதைத்த 20 ஆம் நாளிலும், 30ஆம் நாளிலும் களையெடுத்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
நீர்ப்பாசனம்:
கோடையில் பாசிப்பயறுக்கு 6 அல்லது 9 பாசனங்கள் தேவை. விதைத்த 3ஆம் நாள் ஒருமுறையும் பிறகு மண் தன்மைக்கு ஏற்ப 10 முதல் 15 நாளுக்கு ஒருமுறையும் பாசனம் கொடுக்கலாம். அதிக அளவில் பாசனம் கொடுத்தால் காய் பிடிப்பது பாதிக்கும். அதிக பாசனம் கொடுத்தால் இலைகள் அதிகம் வளர்ந்து வெயிலில் செடிகள் துவண்டு விடும். இதனால் பூப்பிடிப்பது பாதிக்கும். ஆகவே, பாசனத்தைக் கவனித்து மேற்கொள்வதால், காய் பிடிப்பது சீராக இருக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு:
பூச்சி, நோய்கள் தாக்காமலிருக்க விதைத்த 25 ஆம் நாள், 130 மில்லி டைமக்ரான், 500 கிராம் டைத்தேன் எம் 45 ஆகியவற்றை நீரில் கலந்து பயிருக்குத் தெளிக்க வேண்டும்.
தேமல் நோய் வராமல் தடுக்க எச்சரிக்கை அவசியம். நோய் தாக்கிய செடிகளை உடனுக்குடன் பிடுங்கி பிளாஸ்டிக் பையில் போட்டு தனியே எடுத்துச் சென்று எரிக்க வேண்டும். நோய் தாக்கிய செடிகளைத் தொட்டுவிட்டு நோய் தாக்காத செடிகளைத் தொடக்கூடாது.
அறுவடை:
பாசிப்பயறில் 3 முதல் 4 அறுவடை கிடைக்கும். விதைத்த 56, 64, 85ஆவது நாள்களில் அறுவடை கிடைக்கும். நல்ல சாகுபடி முறையெனில் 4ஆவது அறுவடை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, 500 கிலோ மகசூல் எடுக்க முடியும். கட்டுக்கோப்பு சாகுபடி முறையைக் கையாண்டால் 600 கிலோ மகசூல் உறுதி.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்