பருத்தியில் பூச்சி கட்டுப்பாடு

பருத்திப் பயிரில் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுவதன் மூலம் மகசூல் இழப்பைத் தவிர்த்து கூடுதல் லாபம் பெறலாம்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

இளம்பருவம் (விதைத்த 50 நாள்கள் வரை):

 • இப் பருவத்தில் தத்துப்பூச்சி, அசுவினி தாக்குதல் தென்படும்.
 • தத்துப்பூச்சி தாக்குதலால் பருத்தி இலைகள் மஞ்சள் நிறமாகி, ஓரங்கள் மடிவதுடன் இலைகள் உதிரும்.
 • அசுவினி தாக்கப்பட்ட பயிர்களின் தளிர் இலைகள் சிறிதாக தோன்றுவதுடன் இலைகள் கிண்ணம்போலக் குவியும்.
 • தத்துப்பூச்சி, அசுவினியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 200 மி.லி. அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.

காய்ப் புழுக்கள்:

 • பருத்தியில் பூ, பிஞ்சுகள் உருவாகி காய் பிடிக்கும் தருணத்தில் காய்ப் புழுக்களின் தாக்குதல் காணப்படும்.
 • புள்ளிக் காய்ப் புழு, பச்சை அல்லது அமெரிக்கன் காய்ப் புழு, இளஞ்சிவப்புக் காய்ப் புழு போன்ற 3 வகை காய்ப் புழுக்கள் பருத்திக் காய்களைத் தாக்கி பயிருக்கு சேதம் விளைவிக்கும்.
 • புள்ளிக் காய்ப் புழுக்கள் பிஞ்சுக் காய்களைத் துளைத்தால் அவை செடியிலிருந்து உதிர்ந்துவிடும்.
 • முற்றுகிற காய்களைக் குடைந்து தின்பதால் உள்ளே இருக்கும் பஞ்சின் தரம் குறைந்து மகசூலும் குறையும்.
 • பச்சை அல்லது அமெரிக்கன் காய்ப் புழு, பயிர்கள் பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் தாக்குதலை ஏற்படுத்தும். இவை காய்களுக்குள் தலையை மட்டும் நுழைத்து பஞ்சு, விதைகளைக் குடைந்து தின்னும்.

காய் முதிரும் பருவங்கள்:

 • இப் பருவத்தில் இளஞ்சிவப்பு காய்ப் புழுக்கள் பயிரைத் தாக்கும்.
 • புழுக்கள் தாக்கப்பட்ட பயிர்களில் மலர அல்லது விரிய வேண்டிய பூக்களின் இதழ்கள் விரியாமல் நுனிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டப்பட்டு ரோஜா மலரின் மொட்டுகள்போல தோற்றம் அளிக்கும்.
 • அவ்வாறு உள்ள பூக்களைப் பிரித்துப் பார்த்தால் இளஞ்சிவப்பு காய்ப் புழு, மகரந்தம், சூல்பை ஆகியவற்றைத் தின்று சேதப்படுத்தியிருக்கும்.
 • இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு குளோர்பைரிபாஸ் 800 மில்லி அல்லது குயினால்பாஸ் 800 மி.லி., பாசலோன் ஒரு லிட்டர் அளவில் தேவையான நீருடன் கலந்து தெளிக்கலாம்.

தண்டு மூக்கு வண்டு அல்லது மோதிரப் புழு:

 • இப் புழுக்கள் பருத்தி விதைத்த 25 நாளிலிருந்து 90 நாள்கள் வரை தாக்குதலை ஏற்படுத்துவதுடன், அடித்தண்டில் வீக்கம் காணப்படும்.
 • செடிகளின் இடையே களை எடுக்கவோ, உரமிடவோ, நீர் பாய்ச்சும்போதும், பலத்த காற்று வீசும்போதும் தண்டின் வீங்கிய இடத்தில் செடிகள் முறிந்து சேதம் விளைவிக்கும்.
 • இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 கிலோ கார்போபியுரான் குருணை மருந்தை செடிகளுக்கு அருகே இட்டு மண் அணைக்கலாம்.
 • அல்லது ஒரு லிட்டர் குளோர்பைரிபாஸ் மருந்தை தேவையான அளவு நீருடன் கலந்த கரைசலை தண்டுகள் நன்கு நனையும்படி தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

காய் பிடிக்கும் மற்றும் முற்றும் பருவங்கள்:

 • இப் பருவத்தில் புரோடீனியா புழுக்கள் பருத்தியில் தாக்குதல் ஏற்படுத்தும்.
 • புழுக்கள் தாக்கிய பயிரின் இலைகள் சல்லடைபோல் அரிக்கப்பட்டிருக்கும்.
 • இப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு குயினால்பாஸ் 800 மில்லி, குனோர்பைரிபாஸ் 800 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்:

 • ஒவ்வொரு பூச்சிக்கும் தனித்தனியே நிர்வாகம் செய்வதைவிட ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் செய்வதன் மூலம் பருத்தியைத் தாக்கும் பூச்சிகளை திறன்பட கட்டுப்படுத்தலாம்.
 • எனவே, பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்து பருத்தியில் ஏற்படும் பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பருத்தி விவசாயிகள் சாகுபடி செலவைக் குறைத்து அதிக மகசூல் பெறலாம்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *