பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தியில் ஏற்பட்டு வரும் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஜெ. கதிரவன்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
- பெரம்பலூர் மாவட்டத்தில் பீ.டி பருத்தியானது அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையால் பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
- இதனால் பருத்தி செடிகளில் வேர் அழுகல் நோய், இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
- மேலும், பல பகுதிகளில் பருத்தி செடிகள் அதிக சப்பைகளுடனும், சில பகுதிகளில் 20 முதல் 30 நாள்கள் வயதுடைய செடிகளாகவும் காணப்படுவதால், இவற்றில் நோய் தாக்குதல் ஏற்படும்போது பருத்தி மகசூல் பெரிதும் பாதிக்கப்படும்.
- அதிக நாள்களுக்கு பருத்தி வயலில் மழை நீர் தேங்கும்போது, செடிகளில் உடற்செயலியல் மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் சிகப்பு இலை அதிகளவில் தாக்கி, செடிகளின் இலைகள் சிவப்பாக மாறி கீழே விழும் தன்மை ஏற்படும்.
- எனவே, வயலில் தேங்கியுள்ள மழை நீரை பத்து வரிசைகளுக்கு இடையே வாய்க்கால் பறித்து வெளியேற்ற வேண்டும்.
- பருத்தி செடிகளானது வாடிய நிலையில் காணப்படும் போது, அதை பிடுங்கி பார்த்து வேர் அழுகல் நோய் இருக்கும் பட்சத்தில் அதாவது, வேர்கள் அழுகி வேரின் மேல் பகுதி முழுவதும் அழுகியும், தண்டு பகுதி மட்டும் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்போது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் டிரைகோடெர்மா விரிடி என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லி அல்லது 1 கிராம் கார்பண்டாசிம் என்ற ரசாயன பூஞ்சாணக் கொல்லி மருந்தை கரைத்து, வேர் அழுகல் நோய் தாக்கியுள்ள செடிகளுக்கு அருகில் உள்ள மற்ற அனைத்து பருத்தி செடிகளுக்கும், வேர் பகுதியில் ஊற்றி கட்டுப்படுத்தலாம்.
- அல்லது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 கிலோ டிரைகோடெர்மா விரிடியை 100 கிலோ மட்கிய மாட்டு எருவுடன் கலந்து, செடிக்கு செடி இட்டால் வேர் அழுகல் நோய் வராமல் பாதுகாக்க முடியும்.
- மழையின் காரணத்தால் இலைப்புள்ளி மற்றும் இலைக்கருகல் நோயின் அறிகுறிகள் பருத்தி செடியின் இலைகளில் தென்படும் சமயத்தில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் காப்பர் ஆக்ஸி குளோரைடு மற்றும் 0.1 கிராம் ஸரெட்டோமைசின் சல்பேட் ஆகியவற்றை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- மேலும் விவரங்களுக்கு, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை நேரில் அல்லது, 09944244582 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்