பருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் வழிகள்

அறிகுறிகள்

 • பருத்தியில் வேர் அழுகல் நோயானது விதை முளைத்து ஒன்று அல்லது இரண்டு வார காலத்தில் தாக்கினால் விதை உறையில் கருப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும்.
 • தண்டு பகுதி சிறுத்து, செடி வாடிவிடும். அதனால் வயலில் இடைவெளி அதிகமாகி திட்டு திட்டாக காணப் படும்.
 • இந்நோயானது 4 முதல் 6 வார வயதுடைய செடியைத் தாக்கினால் சிவப்பும் பழுப்பும் கலந்த திட்டுக்கள் மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியில் காணப்படும்.
 • பின்னர் அப்பகுதி கருப்பு நிறமாக மாறி, மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியுடன் செடி ஒடிந்துவிடும்.
 • செடி காய்க்கும் தருணத்தில் வேரழுகல் நோய் அதிகமாகக் காணப்படும்.
 • வேரழுகல் நோய் தாக்கிய செடிகள் திடீரென்று வாடி வதங்கிவிடும்.
 • இந்த செடிகளைப் பிடுங்கிப் பார்த்தால் பக்கவாட்டு வேர்கள் சிறுத்தும் வேர்ப்பகுதி அழுகியும் காணப்படும்.
 • தாக்கப்பட்ட செடிகளின் பட்டை நார் நாராகவும் எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும்.
 • நோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கிப் பார்த்தால் கருப்பு நிற பூசண வளர்ச்சியைக் காணமுடியும்.

சாதகமான சூழ்நிலைகள்:

 • வறண்ட வானிலைக்குப் பின் கனத்த மழை பெய்தாலும் மண்ணின் வெப்பநிலை 35 முதல் 39 டிகிரி செ. இருந்தாலும் ஈரப்பதம் 15 முதல் 20% இருந்தாலும் பருத்திக்கு முன் காய்கறிகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் பயறுவகைப்
 • பயிர்கள் பயிரிட்டாலும் இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

நோய் பரவும் விதம்:

 • நோய்க்காரணியானது மண் மூலம் முதன்மையாகப் பரவுகிறது.
 • இரண்டாவதாக பாசன நீர், காற்று ஆகியவற்றின்மூலம் பரவுகிறது.
  கட்டுப்படுத்தும் முறைகள்:
 • பருத்தி விதைக்கு ஒரு கிலோவுக்கு 2 கிராம் பவிஸ்டின் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற விகிதத்தில் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
 • நோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கிவிட்டு, அதற்குப் பின் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் தாக்கப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளின் வேரில் ஊற்றி நோயைக் கட்டுப்படுத்தலாம்.
 • விதைக்கும் காலம் அதிக வெயில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • ஊடுபயிராக சோளம் பயிரிட்டாலும் இந்நோயின் தாக்குதல் குறைவாக இருக்கும்.

எஸ்.ஜெயராஜன் நெல்சன், பேராசிரியர் மற்றும் தலைவர்,
பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *