பருத்தி அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம்

அறுவடை செய்த பருத்தியை தொழில்நுட்ப உதவியுடன் பராமரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாயை ஈட்டலாம் என்று வேளாண் வணிகத்தின் வேளாணைமை துணை இயக்குநர் இ.செல்வம் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி போன்ற இடங்களில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.

பருத்தியின் சிறப்புத் தன்மைகளான நிறம், சுத்தம்,மென்மை, குறைவான ஈரம் ஆகிய நான்கு தன்மைகளைப் பொருத்தே அதன் விலை அமைகிறது. மேற்கண்ட நான்கு தன்மைகளைப் பெற அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் பருத்திக்கு கூடுதல் விலை கிடைக்கும்.

தொழில்நுட்பங்கள்:

  • வெடித்து நன்கு மலர்ந்த பருத்தியை மட்டும் செடியிலிருந்து அறுவடை செய்ய வேண்டும்.
  • மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஒரு முறை பருத்தியை அறுவடை செய்ய வேண்டும்.
  • பருத்தியை காலை நேரத்தில் சேகரம் செய்வது சிறந்தது. இதனால், காய்ந்த இலை, சருகுகள் பருத்தியில் ஒட்டாது.
  • அவற்றை நிழலில், மணல் பரப்பிய களங்களில் உலர்த்த வேண்டும்.
  • நேரடி வெயிலில் பருத்தியை உலரப் போட்டால் பஞ்சின் நிறம் குறைவது மட்டுமல்லாமல் அதன் மென்மைத் தன்மையும் பாதிக்கும். பருத்தியை ரகம் வாரியாக தனித்தனியே சேமிக்க வேண்டும்.
  • பருத்தி நன்கு உலர்த்திய பிறகு அதில் கலந்துள்ள இலைச் சருகுகள், காய்ந்த சப்பைத் துண்டுகள், பூச்சி நோய்த் தாக்கியது ஆகியவற்றை தனியாகப் பிரிந்து தரத்தை மேம்படுத்த வேண்டும்.
  • பருத்தியை காற்றோட்டமான அறைகளில் மணல் பரப்பிய தரையில் சேமிக்க வேண்டும்.
  • இவ்வாறு அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்களை பின்பற்றி பருத்தியை பராமரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு வேளாண் வணிகத்தின் தருமபுரி கோட்ட வேளாண்மை அலுவலரான தா.தாம்சனை 09443563977 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *