பருத்தியை தாக்கி பாழ்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வட்டாரங்களில் அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி சாகுபடி செய்யப்பட்டு 20 முதல் 25 நாள் பயிர்களாக வளர்ந்துள்ளன. இப்பருவத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, இலைப்பேன், அசுவினி மற்றும் வெள்ளை ஈ பருத்தியை தாக்கி பாழ்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இந்த பூச்சிகளின் தாக்குதலினால் செடிகள் மஞ்சள் நிறமடைந்து பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.
தாக்குதல் அதிகமிருந்தால் செடிகள் வாடி கருகி விடும். இதுகுறித்து கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்புத் துறை தொழில் நுட்ப வல்லுனர் ராஜேந்திரன் பயிர் பாதுகாப்பு உத்திகளை கடைப்பிடித்து பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்துள்ள ஆலோசனைகள்:
- பருத்தி விதைகளை ஊடுருவி பாயும் பூச்சிக்கொல்லியான இமிடாகுளோபிரிட் மருந்தை 1 கிலோ விதைக்கு 5 மி.லி. என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
- பயிர் முளைத்த 20 முதல் 25 நாளில் இமிடாகுளோபிரிட் மருந்து ஏக்கருக்கு 40 மி.லி. என்ற அளவிலும் அல்லது ரோகார் மருந்து ஏக்கருக்கு 300 மி.லி. என்ற அளவிலும் பயிரில் தெளிக்க வேண்டும்.
- குருணை மருந்துகளான பியூரடான் அல்லது போரேட் மருந்துகளை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் 3 பங்கு மணலுடன் கலந்து மண்ணில் இடவேண்டும்.
- தாவர பூச்சிகொல்லிகளான வேப்ப எண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதம் என்ற அளவிலும் பயிரில் தெளிக்க வேண்டும்.
- ஊடு பயிராக தட்டைப்பயறு, சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளம் பயிரிட்டால் நன்மை செய்யும் பூச்சியான பொறி வண்டின் எண்ணிக்கை பெருகி அசுவினி, தத்துப்பூச்சி மற்றும் இலைப் பேனின் தாக்குதலை குறைந்து விடும்.
- மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி ஏக்கருக்கு 10 என்ற அளவில் வைத்து வெள்ளை ஈயின் தாக்குதலை குறைக்க வேண்டும்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்