பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த மூன்று விவசாயிகள் இறந்திருக்கிறார்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.
பெரம்பலூர் பருத்திச் சாகுபடிக்குப் பெயர்பெற்ற மாவட்டம். இந்தப் பகுதியில் பூச்சிக்கொல்லி விஷத்தை வயல்களுக்குத் தெளித்தபோது, நச்சு மருந்து வீரியம் தாங்காமல் செல்வம், ராஜா, அர்ஜூனன் என்ற 3 விவசாயிகளின் உயிரிழந்தனர். குன்னம் வட்டத்தில் பல பகுதிகளும் பாதிக்கபட்டதாகச் சொல்கிறார்கள். பெரியம்மா பாளையம், ஆதனூர், சித்தளி, பேரளி,வி.களத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார்கள்.
செல்வம் என்ற விவசாயி கடந்த அக்டோபர் 21-ம் தேதி பருத்தி வயலுக்கு மருந்து அடிக்கச் சென்ற போது மோனோ குரோட்டாபாஸ் மருந்தை குடத்தில் கலக்கியபோது மருந்தின் வீரியம் தொண்டை, வாய், கண்ணில் ஏறி நிலை தடுமாறி விளைநிலத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் அங்கு மருத்துவம் பார்க்க முடியாமல், திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல சொல்லியிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி 25-ம்தேதி இறந்துள்ளார்.
அதேபோல் சித்தளி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற விவசாயி கடந்த 24-ம் தேதி மாலை நேரத்தில் பருத்தி வயலுக்கு மருந்து அடித்திருக்கிறார் அப்போது மருந்தின் தாக்கம் அதிகம் உடம்பில் ஏறியிருக்கிறது. கண் சிவந்து, மயக்கநிலையில் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு தூங்கியிருக்கிறார். அதிகாலையில் வாந்தி வயிற்றுப்போக்கு அதிகமாகவே, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அன்று மாலையே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் அர்ஜூனன் என்ற விவசாயியும் பருத்தி வயலுக்கு மருந்து அடித்து மருத்துவமனையில் இறந்திருக்கிறார்.
மருந்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த மூன்று விவசாயிகளும் பருத்தி வயலுக்கு அடித்த மருந்து மோனோ குரோட்டாபாஸ் மருந்தால் இறந்திருக்கிறார்கள். இந்த மருந்தை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும் சுதந்திரமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் பருத்திக்கு மருந்து அடித்த 35 விவசாயிகள் இறந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் பேசினோம். ’விவசாயிகள் எப்படி மருந்து அடிப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள் இதனால்தான் விவசயிகள் இறப்பது. விவசாயிகளிடம் மருந்து எப்படி அடிப்பது என்று விழிப்புஉணர்வை ஏற்படுத்துகிறோம். 5 க்கு மேல் உரம் மருந்துக்கேன் அடிக்கக் கூடாது என்று சட்டம் போட இருக்கிறோம்’ என்று முடித்தார்
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகத்தில் மோனோக்ரோடோபோஸ் பற்றிய பயங்கர தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்