மழைக் காலத்தில் பருத்தி பயிர்களைப் பாதுகாக்கும் முறைகள்

மழைக் காலத்தில் பருத்தி பயிர்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். இரா. மாரிமுத்து கூறியது:

தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அனைத்துப் பயிர்களின் வயல்களிலும் மழை நீர்த் தேங்கிக் காணப்படுகிறது. இதனால், பாக்டீரியம், பூஞ்சாணம் போன்றவற்றால் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

  • குறிப்பாக, பருத்தியில் வெர்டிசீலியம் வாடல் நோய், வேர் அழுகல் நோய், ஆல்டர் நேரியா, இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய், புகையிலைக் கீற்று வைரஸ் நோய் ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
  • மேலும், செடிகளிலுள்ள சப்பைகள், காய்கள் அழுகி உதிர வாய்ப்புள்ளது.
  • பருத்தி வயல்களில் தேங்கியுள்ள மழை நீரால், மெக்னீசியம் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு, பருத்தி இழையின் ஓரங்கள் சிவப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடுகின்றன.இதனால், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
  • பருத்தியை மழை நீரிலிருந்து பாதுகாக்க, வயல்களில் தேங்கும் நீரை, ஐந்து பாத்திகளுக்கு இடையே பார் அமைத்து, வயலைச் சுற்றி வடிகால் வசதி செய்து தேங்கிய நீரை வெளியேற்ற வேண்டும்.
  • பருத்திச் செடிகளில் வேர் அழுகல் நோய் காணப்படும் போது, சூடோமோனாஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி உள்ளிட்ட எதிர் உயிர்க் கொல்லிகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் அல்லது மேன்கோசெப் பூஞ்சாணக் கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடை லிட்டருக்கு 2 கிராமுடன், பாக்டீரியா கொல்லியான ஸ்டிரெப்டோமைசின் சல்பேட்டை பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து, செடிக்குச் செடி வேர் பகுதிகளில் ஊற்றுவதன் மூலம், வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • பருத்தி இலைகளில் இலைப்புள்ளிகள் தென்படும் போது, காப்பர் ஆக்ஸிகுளோரைடு 30 கிராம், ஸ்டிரெப்டோமைசின் சல்பேட் ஒரு கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, 10-15 நாள்கள் இடைவெளியில் இலையின் மீது தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
  • மேலும், மழை நின்ற பிறகு, செடிகள், சப்பைகள் நன்கு செழிப்புடன் இருக்க, வளர்ச்சி ஊக்கி அல்லது டி.ஏ.பி. 2 சதக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
  • பருத்தியில் இலைகள் சிவப்பாக தென்படும் போது, மெக்னீசியம் சல்பேட் 100 கிராம், ஜிங் சல்பேட் 50 கிராம், யூரியா 10 கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மழையிலிருந்து பருத்தியைக் காப்பாற்றி அதிக மகசூலைப் பெறலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை நேரில் அல்லது 04328293251   மற்றும்   04328293592 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மழைக் காலத்தில் பருத்தி பயிர்களைப் பாதுகாக்கும் முறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *