பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் சட்டிக் கலப்பை உழவு அவசியம் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ப. விஜயலட்சுமி.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி முறையில் பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலான மழை பெய்ததால் விவசாயிகள் உழவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மானாவாரி பருத்திச் சாகுபடிக்கு கரிசல் மண் பகுதிகளில் சட்டிக் கலப்பை கொண்டு முதலில் கோடை உழவு செய்ய வேண்டும்.
அப்போது மண்ணானது ஒன்று முதல் ஒன்றரை அடி வரை பெயர்ந்து, மண்ணின் கடினத் தன்மை குறைந்து பொல பொலவென மாறும்.
இதனால் ஆழ வேர் வளர்ச்சியுடைய பருத்தி செடியின் வேர் நன்றாக வளர்ந்து செழுமையாக இருக்கும்.
அதுமட்டுமன்றி, மண்ணின் நீர் பிடிப்புத் திறன் கூடுவதால் வறட்சிக் காலத்தில் பயிர்கள் சற்று தாக்கு பிடிக்கும் தன்மையையும் ஏற்படும்.
மண்ணில் உள்ள தீங்குயிரி பூச்சியினங்களின் இளம் நிலைகளான முட்டைகள், கூண்டுப் பருவம் போன்றவை நன்றாக சூரிய ஒளியில் பட்டு அல்லது மிக ஆழத்தில் சென்று அழுகி உயிரிழப்பதால், பூச்சிகளின் தாக்குதலும் குறையும்.
எனவே, நடப்புப் பருவத்தில் மானாவாரி பயிராக பருத்தி சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் சட்டிக் கலப்பையை பயன்படுத்தி ஒரு முறை உழுதுவிட்டு, பிறகு நடவு செய்வதற்கு முன் கொக்கி கலப்பையை பயன்படுத்தி உழவு செய்து தொழு எரு அல்லது ரசாயன உரங்களை அடியுரமாக இட்டு பயிர் செய்தால் அதிக மகசூல் பெறலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்