அன்பான அப்பா பறவை !!

ஆங்கிலத்தில் ‘மலபார் ஹார்ன்பில்’  (Malabar Hornbill) என்று அழைக்கப்படும் இந்தப் பறவை, தமிழில் ‘மலபார் இருவாட்சி’ எனப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 9 வகையான இருவாட்சி இனங்கள் தென்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் மலபார் இருவாட்சி. உருவ அமைப்பில், இருப்பதிலேயே மிகவும் சிறிய இருவாட்சி இனம், இதுதான். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணக் கிடைக்கும் பறவை இது.

 

இந்த இன இருவாட்சிப் பறவைகளுக்குப் பழங்கள்தாம் முக்கிய உணவு. எனவே, இவற்றை மரங்கள் அடர்ந்த காடுகளில் மட்டும்தான் காண முடியும். இதர இருவாட்சி இனங்களை மனிதர்கள் உள்ள குடியிருப்புகளில்கூடக் காண முடியும். இருவாட்சி இனங்களில், இதற்கு மட்டும்தான் கண்களைச் சுற்றி இமைகள் உள்ளன.

இவை கூட்டம் கூட்டமாகத்தான் பறக்கும். இனப்பெருக்கக் காலத்தில், பழங்கள் தவிர சின்னச் சின்னப் பூச்சிகளும் இவற்றுக்கு இரையாகும். இவை, இனப்பெருக்கத்துக்காகப் புதிதாகக் கூடு கட்டாது. அந்தப் பொந்துக்குள் பெண் பறவை சென்ற பிறகு, அது தன் எச்சிலைக் கொண்டு அந்தப் பொந்தை மூடிவிடும்.

முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் வரையில், அது அந்தப் பொந்தைவிட்டு வெளியே வராது. உணவு உண்பதற்காக மட்டும் தனது அலகை வெளியே நீட்டுவதற்குத் தோதாக ஒரு சிறு துளையை அது ஏற்படுத்தியிருக்கும். அதற்கான உணவை, ஆண் பறவை கொண்டு வந்து ஊட்டிவிடும். மரங்களில் ஏற்கெனவே உள்ள பொந்துகளையே இவை அதிகம் பயன்படுத்தும். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலமே இவற்றுக்கு இனப்பெருக்கக் காலம்.

2006-ல் கேரளத்தின் தட்டேக்காடு பறவைகள் சரணலாயத்தில்தான் இந்தப் பறவையை முதன்முதலில் பார்த்தேன். அப்போது எடுத்த படங்கள்தாம் இவை. இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. காரணம், வளர்ச்சிப் பணிகளுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டு வருவதுதான். ஏற்கெனவே உள்ள காடுகளில் பழ மரங்கள் குறைந்துகொண்டே வருவது இன்னொரு காரணம்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com

நன்றி: ஹிந்து

மேலும் தெரிந்து கொள்ள Hornbill India


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *