அலுமினியப் பறவையும் நிஜப் பறவையும்

பறவையைக் கண்டான், விமானம் ப டைத்தான்” என்று ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டி ருந்தார். ஆனால் பறவையும், விமானமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகிவிட்டது காலத்தின் கொடுமை.

‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால்,வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.

சென்ற ஆண்டு இப்படி 50 முறை விமானங்களில் பறவைகள் சிக்கிக்கொண்டதாக இந்திய விமான நிலையங்களின் நிர்வாகம் (AAI) குறிப்பிட்டிருக்கிறது. புறாவி லிருந்து காக்கைகள்வரை (சில சமயம் மயில்கள்கூட) இப்படி சிக்கியிருந்தாலும், பெரும்பாலான பிரச்சினைகள் பருந்துகளிடம் இருந்துதான

முதல் விபத்து

முதலில் பதிவான இப்படிப்பட்ட ஒரு விபத்து 1912- ல் கலிஃபோர்னியாவில் நடந்தது. கடல் காகம் (சீகல்) பறவை ஒன்று மோதி விமானம் பாதிப்படைய, விமான ஓட்டிகள் மரணமடைந்தனர். பறவையால் விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழந்தது அதுவே முதல்முறை.

பெரும்பாலும் விமானம் தரைத் தளத்துக்கு அருகில் பறக்கும்போதுதான் (புறப்படும் நேரத்திலும் Takeoff, வந்துசேரும் நேரத்திலும் Landing) பறவைகள் அவற்றின்மீது மோதுகின்றன. அமெரிக்காவில் மட்டுமே சென்ற ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ‘பறவைகளால் விமான விபத்துகள்’ நிகழ்ந்துள்ளன.

சமீபகாலமாகப் பறவைகளுக்கும் அலுமினியப் பறவைகளுக்கும் நடக்கும் இந்த விபத்துகள் அதிகமாகி வருவதற்குப் பல காரணங்கள். விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது முக்கியக் காரணம்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

தொழில்நுட்பக் காரணம்

தவிரப் பழைய விமானங்களில் பிஸ்டன் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை இயக்கும்போது (விமானத்தின் முன், பின் புறங்களில்) அதிக சப்தம் உருவாகும். இதனால் தங்களை அணுகும் ஆபத்தை உணர்ந்து பறவைகள் விலகிச் செல்ல வாய்ப்பு இருந்தது. தவிர, விமானத்தின் மீது பறவை மோதினாலும் விமானத்தின் பிஸ்டன் இன்ஜின் அருகே பொருத்தப்பட்டுள்ள புரொபெல்லர்கள் சுற்றிக்கொண்டே இருப்பதால், பறவையின் ஒரு பகுதியை அவை வெட்டிவிடும். அல்லது பறவையை அந்த இடத்திலிருந்து தள்ளிவிடும். இதனால் விமானத்துக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தது.

ஆனால், ஜெட் இன்ஜின்கள் அறிமுக மான பிறகு காட்சிகள் மாறின. இவற்றின் வேகம் அதிகம். எழுப்பும் ஒலியோ மிகக் குறைவு. தவிர ஜெட் இன்ஜின்கள் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. எனவே, இவை காற்றோடு பறவையையும் உள்ளே உறிஞ்சி கொள்கின்றன. இதனால் இன்ஜின் திடீரெனச் செயலிழந்துவிடும் ஆபத்து உருவாகிறது.

Courtesy: ToI
Courtesy: ToI

சில சமயம் இன்ஜினில் உள்ள விசிறியின் இறக்கை மீது பறவை வேகமாக மோதும்போது, அந்த இறக்கை நகர்ந்து அருகிலுள்ள மற்றொரு இறக்கையின் விசையுடன் மோதலாம். இந்தக் காரணங்களால் மொத்த விமானமும் நிலைகுலைந்து விழுந்து பயணிகள் இறந்த சம்பவங்களும் உண்டு.

பறவை நடமாட்டம்

பொதுவாகவே விமான நிலையங்களில் பறவைகள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால், விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதி பெரும்பாலும் புறநகர் பகுதியாக இருக்கும். கடுமையான இடநெருக்கடி கொண்ட நகரங்களைவிட, புறநகர் பகுதிகளில் வசிப்பதையே பறவைகளும் விரும்புகின்றன. தவிர விமான நிலையங்களுக்கு அருகே குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் இருப்பது சாதாரணமாக உள்ளது. மேலும் விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் சில பகுதிகள் குப்பை கொட்டப்படும் இடங்களாகவும் இருப்பதுண்டு. அதிலுள்ள கழிவுகள், இறைச்சித் துண்டுகள், அப்பகுதிகளுக்கு வந்து சேரும் பூச்சிகளை உண்பதற்காகவும் பறவைகள் அங்கேயே வட்டமடிக்கின்றன.

விமானத் தளங்களில் பறவை நடமாட்டம் அதிகமாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அங்கிருந்து சுற்றுப்புறம் முழுவதும் பரந்து விரிந்து பளிச்சென்று தெரிகிறது. எனவே, இரைகொல்லிப் பறவை தாக்க வந்தால் இரைப் பறவையால் உடனடியாகத் தப்பித்துவிட முடியும். இந்த வசதியாலும் விமானத் தளங்களைப் பறவைகள் அதிகம் நாடுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் வரும் விமானங்களில் 2010 வருடத்தில் 3 முறை பறவை முட்டியதாக தகவல். இதற்கு காரணம் விமான நிலையத்திற்கு அருகிலேயே உள்ள குப்பை கொட்டும் கிடங்கு தான். இந்த குப்பையை நோண்டி எலி போன்ற உணவை உண்ண பருந்து போன்ற பெரிய பறவைகள் வருகின்றன

Courtesy: ToI
Courtesy: ToI

விரட்டும் நடவடிக்கைகள்

ஆனால், இந்தப் பறவைகளை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பலவும் இயற்கைக்கு முரணானவை. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மரம், செடிகளை அப்புறப்படுத்துகிறார்கள். இதன் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு குறைகிறது. அவை கூடு கட்டுவதற்கான இடங்களும் அழிக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் பூச்சி மருந்துகளை ஏராளமாக அடிக்கிறார்கள். இதன் மூலமாகவும் பறவைகளின் உணவு (பூச்சிகள்) அழிக்கப்படுகிறது.

பறவைகளுடைய எதிரிகளின் குரல்களைப் பதிவு செய்து அவ்வப்போது ஒலிக்கவிடுவதன் மூலம் பறவைகளை மிரண்டு ஓடச் செய்கிறார்கள். வெடி வெடித்தும் இதைச் சாதிக்கிறார்கள்!

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அளிக்கும் ஆலோசனைகள்

 விமான நிலையப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம். விமானத் தளங்களைத் தொடர்ந்து பைனாகுலர்கள் மூலம் பார்த்துப் பறவைகள் தென்பட்டால் விரட்டலாம்.

பறவைகள் தங்கள் தினசரி இரைதேடலைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் வைத்துக் கொள்ளும். அந்த நேரங்களில் விமானம் புறப்படவோ, வந்து சேரவோ இல்லாதபடி அவற்றின் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

‘அற்பப் பறவைகளுக்காக விமான நேரத்தை மாற்றி அமைப்பதா?’ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியானால் வழக்கம்போல இயற்கை சமநிலையைப் பாழ்படுத்திவிட்டு, அதற்கான பலனை அனுபவிக்க நாம் தயாராக வேண்டியதுதான்.

– ஜி.எஸ்.எஸ்., எழுத்தாளர், தொடர்புக்கு: aruncharanya@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *