அழுகிய இறைச்சியும் பிணந்தின்னிக் கழுகும்

இறந்து அழுகிப் போன இறைச்சியை, நோய் வந்த உயிரினங்களின் இறைச்சியைச் சாப்பிட்டுப் பிணந்தின்னிக் கழுகுகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? அவை நோயால் தாக்கப்படாதா?

நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள்

பாக்டீரியாக்கள்தான் இறந்த உடல்களை மக்கிப்போக வைக்கின்றன. அப்போது அவை வெளியிடும் வேதி நச்சுகள், பறவைகள், உயிரினங்களுக்கு ஆபத்தானவையாக இருக்கின்றன. ஆனால், பிணந்தின்னிக் கழுகுகளோ உயிரினங்களின் உடல் சிதைக்கப்படும்வரை காத்திருக்கின்றன. ஏனென்றால், அப்போது விலங்குகளின் வலுவான உடல் மேல்தோல் துளைக்கப்பட்டிருக்கும் என்பதால், உள்ளிருக்கும் இறைச்சியை எளிதாகச் சாப்பிட முடியும்.

அழுகிக்கொண்டிருக்கும் பிணத்தில் பாக்டீரியாக்கள் பெருக ஆரம்பிக்கும்போது, இரைப்பை அமிலத்தால் அழிக்கப்பட முடியாத வேதி நச்சுகளை அவை வெளியிடுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகளின் அலகில் நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாப்பிடும்போது ஆபத்தான நுண்ணுயிரிகள் பிணந்தின்னிக் கழுகுகளின் வயிற்றுக்குள் போகின்றன. நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள் போனாலும், அவற்றின் இரைப்பையில் இரண்டு பாக்டீரியாக்கள்தான் அதிகம் இருக்கின்றன.

Courtesy: Hindu
Courtesy: Hindu

நஞ்சைத் தாங்கும்

ஆனால், தொண்டையில் உள்ள காப்பு மேற்பூச்சு மூலம் ஓரளவு நச்சைக் கிரகித்துக்கொள்வதுடன், நோயெதிர்ப்பு செல்கள் மூலம் ஓரளவு நச்சைப் பிணந்தின்னிக் கழுகுகள் முறித்துவிடுகின்றன. அவற்றின் வயிற்றில் உள்ள செரிமான அமிலம் (Hydrochloric acid), மனிதர்களுடையதைவிடப் பத்து மடங்கு வீரியமானது. இந்த அமிலங்கள் தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்துவிடும் சக்தி படைத்தவை.

Courtesy: Hindu
Courtesy: Hindu

ஜீரண நடைமுறையின்போது பிணந்தின்னிக் கழுகுகளின் இரைப்பையில் இருக்கும் இரைப்பை அமிலம் பெரும்பாலான பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது. அதேநேரம் மற்ற விலங்குகளைக் கொல்லக்கூடிய பாக்டீரியாக்கள் பிணந்தின்னிக் கழுகுகளின் சிறுகுடலில் இருக்கின்றன. இறைச்சி அழுகும்போது உருவாகும் Fusobacteria, நச்சுத்தன்மை கொண்ட Clostridia பாக்டீரியாதான் அவை. பல பாக்டீரியாக்களை இரைப்பை அமிலம் கொன்றாலும்கூட, ஆபத்தான சில பாக்டீரியாக்களைச் சகித்துக்கொள்ளக்கூடிய திறனை அவை பெற்றுள்ளது சிறப்பு அம்சம்.

இதில் இயற்கையின் அதிசயம் என்ன என்றால் சாப்பிடும் அழுகிய இறைச்சியைவிட பிணந்தின்னிக் கழுகுகளின் எச்சம் சுத்தமாக இருப்பதுதான். இயற்கை துப்புரவாளர்களின் பணி அதனால்தான் சிறந்ததாகப் போற்றப்படுகிறது போலும்.

இவ்வளவு அற்புதமான திறன்களைப் பெற்றுள்ள பிணந்தின்னிக் கழுகுகள், இந்தியாவில் அழிவின் விளிம்புக்கு ஏற்கெனவே தள்ளப்பட்டுவிட்டன என்பதுதான் பெரிய சோகம்.

மனிதர்கள் பயன்படுத்தும் வலி நிவாரணிகளில் முக்கிய வேதிப்பொருளாக இருப்பது ‘டைக்ளோஃபினாக்’. (Diclofenac) இதேதான் கால்நடைகளுக்கும் வழங்கப்படுகிறது.

ஆனால், இவற்றை உட்கொண்ட கால்நடைகள் சில காலம் கழித்து இறந்த பின், அவற்றின் சடலங்களை உண்ணும் பிணந்தின்னிக் கழுகுகள் மரித்துப் போகின்றன.

சில இடங்களில் இவற்றின் எண்ணிக்கை 97% சதவீதம் குறைந்து விட்டன! அதனையும் ஒரு தலைமுறையில் 30 ஆண்டுகளில் நம் கண் முன்பே நாம் புரிந்து கொள்வதற்கு முன்பே ஆகி விட்டது என்பது தான் சோகம். இதை பற்றி இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *