இமயமலையில் ஒரு புது பறவை!

சில வரலாற்று நாயகர்களுக்கு மரணமே இல்லை. மக்களின் கதைகளிலும் வாழ்விலும் நீக்கமற கலந்திருப்பார்கள்.

சாலிம் அலியும் (அப்படிப்பட்ட ஒருவர்தான். இயற்கையியலாளர்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் சாகாவரம் பெற்றவர் சாலிம் அலி. அவரது அன்பர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி இது!

புதிதாக இனம்காணப்பட்ட இமயமலை பறவை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருப்பட்டிருக்கிறது. ஆம்!

காட்டுப் பூங்குருவி

கிழக்கு இமயமலையில் பரவலாகக் காணப்படும் பூங்குருவி வகையைச் சேர்ந்த இந்தப் பறவை முன்பு கருதப்பட்டதுபோல் அல்லாமல், ஒரு புதிய சிற்றினம் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பறவைக்கு ‘இமாலயக் காட்டுப் பூங்குருவி’ (Himalayan Forest Thrush) என்று பொதுப்பெயரையும், சாலிம் அலியின் நினைவாக ‘ஸூதெரா சாலீமலீ’ (Zoothera salimalii) என்று அறிவியல் பெயரையும் சூட்டியிருக்கிறார்கள். இந்தியா, சுவீடன், சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களின் குழு ஒன்றுதான், இந்தப் பறவையைத் தனிச் சிற்றினமாக இனம் கண்டிருக்கிறது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இந்தியாவில் சிறுவர்கள் முதல் ஆட்சியாளர்கள்வரை பறவைகளின் மீது கவனம் கொள்வதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் ‘பறவைத் தாத்தா’ என்றழைக்கப்படும் சாலிம் அலி (1896-1987). ஏற்கெனவே சில சிற்றினங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இப்போது இன்னுமொரு கவுரவம் இது.

Dr. சாலிம் அலி
Dr. சாலிம் அலி

அரிய கண்டுபிடிப்பு

புதிதாக ஒரு சிற்றினம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா?

காடுகள் உள்ளிட்ட இயற்கைச் சூழல்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் சூறையாடப்பட்டுவரும் தற்காலத்தில், உயிரினங்கள் வேகவேகமாக அழிக்கப்பட்டுவரும் காலத்தில் இது பெரிய விஷயம்தான்! 2000-க்குப் பிறகு ஓர் ஆண்டுக்கு ஐந்து என்ற எண்ணிக்கையில்தான் உலக அளவில் புதிய பறவை இனங்கள் இனம் காணப்பட்டுவருகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இதுவரை நான்கு சிற்றினங்கள் மட்டுமே புதிதாக இனம்காணப்பட்டிருக்கின்றன. ஆகவேதான், இந்தச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

சமீபகாலம்வரை ‘பிளைன்-பேக்டு பூங்குருவி’யாகக் கருதப்பட்டுவந்த இந்தப் பறவையின் டி.என்.ஏவை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தபோதுதான், இது வேறு வகையான சிற்றினம் என்பது தெரியவந்திருக்கிறது. இந்தப் பறவையின் குரல் அந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட மற்ற பூங்குருவிகளின் குரலைவிட இனிமையானது என்பது மற்றுமொரு வேறுபாடு. மேலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகு, இந்தப் பறவையோடு தொடர்புடைய இரண்டு புதிய சிற்றினங்கள் சீனாவில் இனம் காணப்பட்டிருக்கின்றன.

நிலைக்குமா?

இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிச் சொல்லும்போது ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக’த்தின் (BNHS) முன்னாள் இயக்குநர் ஆசாத் ரஹ்மானி, “பறவையியலைப் பொறுத்தவரை இந்தியாவில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் என்பதை உணர்த்தும் அற்புதமான கண்டுபிடிப்பு இது. அது மட்டுமல்ல, வடகிழக்கு இந்தியா என்பது உயிர்ப்பன்மையின் கேந்திரம் (Biodiversity hotspot) என்பதையும் உணர்த்துகிறது. ஆகவே, பெரிய அணைத் திட்டங்கள் போன்றவற்றிலிருந்து இந்த இயற்கைச் சூழலைக் காப்பது அவசியம்” என்கிறார்.

படுவேகமாக உயிரினங்கள் அழிந்துவரும் சூழலில் புதிய பறவை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும், அதற்கு சாலிம் அலியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியான செய்தி. இமயமலையின் கிழக்குப் பகுதியில் திரியும் இந்தப் பறவையின் பாடல் என்றென்றும் நீடிப்பது, நம் கையில்தான் இருக்கிறது.

 நன்றி:ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *