டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் – II

டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் (Vulture) பற்றி முன்பே படித்தோம். இதை பற்றி ஹிந்துவில் வந்துள்ள மேலும் ஒரு செய்தி..

மனிதர்கள் பயன்படுத்தும் வலி நிவாரணிகளில் முக்கிய வேதிப்பொருளாக இருப்பது ‘டைக்ளோஃபினாக்’. (Diclofenac) இதேதான் கால்நடைகளுக்கும் வழங்கப்படுகிறது.

ஆனால், இவற்றை உட்கொண்ட கால்நடைகள் சில காலம் கழித்து இறந்த பின், அவற்றின் சடலங்களை உண்ணும் பிணந்தின்னிக் கழுகுகள் மரித்துப் போகின்றன.

இது சூழலியல் மீது கரிசனம் கொண்ட அனைவருக்கும் தெரிந்த தகவல்தான். ஆனால், பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவுக்கு ‘டைக்ளோஃபினாக்’ மட்டுமே காரணம் அல்ல என்கிறார் சுகுமாரன்.

கூடலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்து வராகப் பணியாற்றிவரும் சுகுமாரன், ‘டைக்ளோஃபினாக்’ மருந்துக்கு எதிராகப் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

எப்படி இறந்தன?

அது பற்றி விரிவாகப் பேசினார் சுகுமாரன்: “1983-ம் ஆண்டு நான் கால்நடை மருத்துவம் படித்தபோது ‘டைக்ளோஃபினாக்’ இல்லை. 1985-ல் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றியபோதுதான் அந்த மருந்து அறிமுகமானது. பின்னர், அதுபோலவே ‘கீடோப்ரோஃபின்’ எனும் மருந்தும் அறிமுகமானது.

இந்த இரண்டு மருந்துகளாலும் பிணந்தின்னிக் கழுகுகள் உயிரிழக்கின்றன என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்தபோது, இவற்றைப் பயன்படுத்துவதை 2002-ம் ஆண்டில் நான் கைவிட்டேன்.

ஆனால், கழுகுகளின் அழிவுக்கு இவை மட்டுமே காரணம் என்று சொல்லமாட்டேன். ‘டைக்ளோஃபினாக்’ எச்சம் உள்ள கால்நடைகளின் சடலத்தைச் சாப்பிட்ட உடனே கழுகுகள் இறந்துவிடுவதாகப் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. சடலத்தைத் தின்று ஒரு மாதக் காலத்துக்குப் பிறகுதான், அவை இறந்துபோகின்றன.

கால்நடை சடலங்களைச் சாப்பிட்ட கழுகுகள் ஒரே இடத்தில் கூட்டமாக இறந்து கிடந்ததாகக் கூறப்படுகின்றன. அதற்கு ‘டைக்ளோஃபினாக்’ காரணமாக இருக்க முடியாது.

ஒருவேளை அவை அருந்தும் நீரில் வேறு விஷப் பொருட்கள், வேதி பொருட்கள் கலந்திருக்கலாம். அதைக் குடித்தவுடன் கழுகுகள் உடனடியாக இறந்திருக்கலாம்.

மலடான மண்

வேதியியலில் ‘சிலேஷன்’ எனும் வேதி திரிபு நிலை உண்டு. இது தாதுப்பொருட்களை கட்டி வைக்கும் தன்மை கொண்டது. ஒரு காலத்தில் மாயாறு, மசினகுடி பகுதிகளில் புற்களை அழிக்க கிளைபோசெட் (glyphosate) என்ற களைக்கொல்லி தெளிக்கப்பட்டது.

அந்தக் களைக்கொல்லி பூமியில் உள்ள தாதுப் பொருட்களைக் கட்டி வைத்துவிடும். ஆக, இதன் மூலம் மண்ணில் உள்ள தாதுப் பொருட்கள் நீரில் கலக்க முடியாமல் போய்விடும். அதற்குப் பதிலாக வேறு சில விஷப் பொருட்கள் கலந்துவிடும். இது உணவு சுழற்சியையும் பாதிக்கிறது.

எனவே, கழுகுகளுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகள் கிடைக்காமல் போகின்றன. அதன் காரணமாகக் கழுகுகள் முட்டையிடும் காலத்தில் அவற்றின் முட்டைகள் மிகவும் பலவீனமாக இருக்கும்.

தாய் அடைகாக்கும்போது முட்டை ஓடு பலவீனமாக இருப்பதால், உள்ளேயிருக்கும் குஞ்சு செத்துவிடும். அப்போது ஒரு தலைமுறையே அழிந்து விடுகிறது. பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவு வேகமடைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அழிந்த மசினகுடி மாடுகள்

தவிர, ஒரு காலத்தில் மசினகுடி பகுதிகளில் மசினகுடி இன மாடுகள் நிறைய இருந்தன. அவற்றைப் புசிக்க ‘இரைகொல்லி’களும் நிறைய இருந்தன. அதனால் பிணந்தின்னிக் கழுகுகளுக்கு உணவுப் பஞ்சம் இருக்கவில்லை.

ஆனால், காலம் செல்லச் செல்லப் பாரம்பரிய மசினகுடி மாடுகளைப் பாதுகாப்பதை விட்டுச் சீமை மாடுகளை அரசு அறிமுகம் செய்தது. ஆனால், சீமை மாடுகளிடையே நோய்த் தாக்கம் அதிகமாக இருந்தது.

அவை வேகமான இறந்தன. அவற்றுக்குச் சரியாக ‘இனம் சேரவும்’ தெரியவில்லை. இதனால், அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

இரைகொல்லிகள் எளிதாகப் பிடிக்கக்கூடிய இரையாக இருந்ததால், அவற்றைப் புசிக்க ஆரம்பித்தன. ஆனால், இம்மாடுகளுக்கு அதிகளவில் ‘டைக்ளோஃபினாக்’ போன்ற மருந்துகளைச் செலுத்தியதால், இந்தக் கால்நடைகளை உண்ட ‘இரைகொல்லி’களும் இறந்தன.

பிணந்தின்னிக் கழுகுகளுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதுவும் அவற்றின் அழிவுக்கு ஒரு காரணமாகும்.

பிரச்சினை யாரிடம்?

இவை எல்லாவற்றையும்விட, தற்போது முறையான கால்நடை மருத்துவர்கள் ‘டைக்ளோஃபினாக்’ மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், அரசு பயிற்சி பெறும் கால்நடை உதவியாளர்கள், சினை ஊசி, தடுப்பு ஊசி போடும் கிராமக் கால்நடை ஊழியர்கள் தங்களைக் கால்நடை மருத்துவர்களாகக் கருதிக்கொள்வதால், மாடுகளுக்கு ‘டைக்ளோஃபினாக்’ மருந்தைக் கொடுத்து விடுகிறார்கள்.

இந்த மருந்தை விற்பனை செய்யத் தடை உள்ளபோதும், மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைப்பதால், பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவுக்கு முற்றுப்புள்ளி விழவில்லை!” என்கிறார்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் – II

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *