கடந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பின்போது சேலம் அருகேயுள்ள கன்னங்குறிச்சி ஏரிக்கு அக்கா ஐஸ்வர்யாவுடன் புறப்பட்டேன்.
தவிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் எங்களை வரவேற்றது. இரவு வேட்டைக்குப் பின் மூன்று ராக் கொக்குகள் தங்கள் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தன.
தொலைவில் ஏழு பெரிய பறவைகள் செல்வது மங்கலாகத் தென்பட்டது. சங்குவளை அல்லது நத்தைக்குத்தி நாரைகளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருநோக்கியில் பார்த்தேன்.
எனக்கும் சூரியனுக்கும் நடுவில் அவை பறந்து கொண்டிருந்ததால், நிறம் தெளிவாகத் தெரியவில்லை. இருநோக்கி மூலம் பின்தொடர்ந்தேன். அவை சற்று இடப் புறம் திரும்பியதும் ஏதோ கனவு உலகத்தில் மிதப்பது போலத் தோன்றியது.
சேலத்து விருந்தாளிகள்
நான் பார்த்துக் கொண்டிருப்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. வெறும் ஒளிப்படங்களாகவும் இயற்கை வரலாற்று நாயகர்களில் ஒருவரான சர் டேவிட் அட்டன்பரோவின் காட்டுயிர் படங்களிலும் மட்டுமே, அந்தப் பறவையை அதற்கு முன்பு பார்த்திருக்கிறேன்.
அந்தப் பறவைகளைக் காணப் பழவேற்காடோ அல்லது கோடிக்கரையோ செல்ல வேண்டும் என்பது பல வருடக் கனவாக இருந்தது. ஆனால், சேலம் அஸ்தம்பட்டிக்கு அருகே நான் நின்றுகொண்டிருந்த ஏரியை, அவை தேடி வந்திருக்கின்றன.
நீண்ட மெல்லிய கழுத்து, குச்சி போன்ற கால்கள், மண்வெட்டி போல் வளைந்த அலகு, காலை வெயிலில் மின்னிய இளஞ்சிவப்பு இறகுகள் என அவை ஏழும் பெரிய பூநாரைகள் (Flamingos) என்பதை உறுதி செய்தன.
பெரும் பூநாரை (Greater Flamingo) என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு(Phoenicopterus roseus, P. minor) என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது.
என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அங்கிருந்த ஒரு மணி நேரமும் அவற்றின் மீதிருந்து என் பார்வை சிதறவில்லை. சேலத்தில் முதல்முறையாக ஒளிப்பட ஆதாரத்துடன் பெரிய பூநாரைகளை பதிவு செய்ய உதவிய என் சிறிய கேமராவை நினைத்துப் பெருமை கொண்டேன்.
ஒரு வருடத்துக்கு முன் நடந்த நிகழ்வானாலும், இன்றைக்கும் அந்த நினைவு உயிரோட்டமாக இருக்கிறது. அன்று அனுபவித்த அதே மகிழ்ச்சியோடு, இந்த வருடக் கணக்கெடுப்பை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.
கட்டுரையாளர், கல்லூரி மாணவர்
தொடர்புக்கு: enviroganeshwar@gmail.com
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்