நம்மூர் நீர்நிலைகளிலும் வயல்களிலும் குளிர்காலத்தில் பறவைகள் நடமாட்டம் அதிகமாவதைக் கவனித்திருப்பீர்கள். லட்சக்கணக்கான பறவைகள் உருவில் சிறிய வாலாட்டிக்குருவியிலிருந்து ஒரு மீட்டர் உயரமுள்ள செங்கால் நாரை வரை ஐரோப்பா போன்ற உலகின் வடபகுதியிலிருந்து ஆசியா, ஆப்ரிக்கா போன்ற தென்பகுதிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவைக் கடந்து இரை தேடிவருகின்றன. புள்ளினங்களின் இந்த வலசை வழக்கம் பற்றி அறிவியலின் பல கேள்விகளுக்கு இன்னும் பதிலில்லை.
ஆனால், நெடுந்தூரம் பயணிக்கும் விமானங்கள் போலவே இப்பறவை கூட்டங்கள் முடிந்தவரை கடலின் மீது பறப்பதைத் தவிர்த்து, நிலப்பரப்பின் மீதே பயணிக்கின்றன. வருடாவருடம் இவை ஒரே வழியில் பயணிக்கின்றன. சில புள்ளினங்கள் அவ்வப்போது, குறிப்பிட்ட இடங்களில் தரையில் இறங்கி, இரையுண்டு, இளைப்பாறி, சில நாட்களுக்குப் பின் பயணத்தைத் தொடருகின்றன. இந்த வான்வழிகளும், தரையிறங்கும் இடங்களும் பறவை ஆர்வலருக்கு நன்கு தெரியும்.
அகமன் ஹீலா
ஐரோப்பாவிலிருந்து வலசை வரும் கூழைக்கடா, பெருங்கொக்கு (Crane), செங்கால் நாரை போன்ற புள்ளினங்கள், இஸ்ரேல் நாட்டில் கோலன் ஹைட்ஸ் மலைப்பகுதிக்கு அருகிலுள்ள சதுப்புநிலம் நிறைந்த ஹூலா பள்ளத்தாக்கில் இறங்கி, சில நாட்களுக்குப் பின்னர் மறுபடியும் தெற்கு நோக்கிப் பயணத்தைத் தொடங்குகின்றன. இஸ்ரேல் இவ்விடத்தை அகமன் ஹூலா பறவை சரணாலயம் என அறிவித்து மிகுந்த அக்கறையுடன், உலகின் சிறந்த ஒரு பறவைப் புகலிடமாகப் பாதுகாத்துவருகிறது.
இன்டர்நெட்டில் இதைப் பற்றிப் படித்துவிட்டு, அங்கிருத்து 30 கி.மீ. தூரத்திலுள்ள ஒரு வீட்டை 5 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து (இன்டர்நெட் மூலம்தான்), நால்வர் அங்குச் சென்றோம். சிறிய குன்றொன்றின் மீதிருந்த எங்கள் வீட்டிலிருந்து ஒருபுறம் கலிலேயா கடலையும், மறுபுறம் கோலன் மலையையும் காண முடிந்தது. நாங்கள் சென்றது மார்ச் மாதத்தில். பறவைகள் தத்தம் இடங்களுக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தன.
காலையில், நெடுஞ்சாலையி லிருந்து சரணாலய சாலைக்குத் திரும்பும்போது வானத்தில் அகன்ற வெண்மேகமொன்று மெதுவாக மிதந்து போவது போலத் தெரிந்தது. இருநோக்கியில் பார்த்தபோது அவை கூழைக்கடாக்களாகப் புலப்பட்டன. சரணாலய அலுவலகத்தில் வழிகாட்டி ஜாஸ்மின் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். இந்த இஸ்ரேலிய இளம்பெண், ஒரு மாதத் துக்கு முன்தான் இரண்டாண்டு கட்டாய ராணுவச் சேவையை முடித்துவிட்டுத் தனக்குப் பிடித்த காட்டுயிர் துறையில் பணியாற்ற ஆரம்பித்திருந்தாள்.
வழிகாட்டி உதவி
சரணாலயத்தின் வரலாறு பற்றியும் அங்குக் காணக்கூடிய புள்ளினம் பற்றியும் எங்களுக்கு ஓர் அறிமுக உரையாற்றிவிட்டு, சிறிய மின்கலத்தால் இயங்கும் வாகனத்தில் எங்களை அமர்த்திச் சரணாலயத்துக்குள் கூட்டிச்சென்றார். நாங்கள் மாலை மறுபடியும் சென்றபோது, எங்கள் வசமே ஒரு வண்டியைக் கொடுத்துவிட்டு, ஒரு விளக்கமான நிலப்படத்தையும் தந்து, பிரச்சினை ஏற்பட்டால் எனக்குப் போன் செய்யுங்கள் என்று தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
நாங்கள் நேராகச் சதுப்பு நிலப்பரப் புக்குச் சென்றோம். தொலைவிலேயே பெருங்கொக்குகள் எழுப்பும் கொம்பூதுவது போன்ற ஒலிகள் கேட்டன. ஒருபுறம் ஒரு பெரிய சுவர் போலக் கோலன் மலை. மறுபக்கம் பறவைக் கூட்டம். கூழைக்கடாக்கள் ஒருபுறமும், செங்கால் நாரைகளுடன் பெருங்கொக்குகளும் மறுபுறமும் ஆயிரக்கணக்கில் பரவியிருந்தன. இந்த மூன்று பறவைகளையும் நம்மூரிலும் பார்க்கலாம்.
கூழைக்கடா சென்னைக்கருகில் பள்ளிக்கரணை, முட்டுக்காடு போன்ற நீர்நிலைகளுக்கு வருகிறது. பெருங்கொக்குகள் கர்நாடகாவில் தார்வார் போன்ற பகுதியில் கூட்டம் கூட்டமாக வந்திறங்குவதைப் பார்க்க முடியும். செங்கால் நாரையைத் தனியாகவோ, ஜோடியாகவோ தமிழ்நாட்டு வயல்களில் காணலாம்.
செங்கால் நாரை
கண்டம் விட்டுக் கண்டம் வரும் வலசைக்கு ஒரு குறியீடாகச் செங்கால் நாரை என்ற எழிலார்ந்த பறவை அமைந்துவிட்டது. மதுரையில் வாடையில் நடுங்கிக்கொண்டிருந்த சத்திமுத்தப்புலவர், இரு செங்கால் நாரைகள் வடதிசை நோக்கிப் பறப்பதைக் கண்டு, “நாராய்ச் நாராய் செங்கால் நாராய்” என்று தொடங்கும் அந்தக் கவிதை மூலம் கும்பகோணத்திலிருக்கும் தம் மனைவிக்கு விட்ட தூது, இன்று தமிழரின் மொத்த நினைவில் மறக்க முடியாத ஒரு கவிதையாக உறைந்துவிட்டது.
இருள் கவிய ஆரம்பித்ததும் நாங்கள் வண்டியைத் திருப்பினோம். நாரைகளின் ஒலி மங்க மங்க, சரணாலய அலுவலகத்தை அடைந் தோம். ஊருக்குத் திரும்பிய பின்னரும் ஜாஸ்மின் பலமுறை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு அகமன் ஹூலா பறவைகளைப் பற்றிய விவரங்களைத் தந்தார். அந்தப் பறவைகளும் நினைவில் இருந்து நீங்கவே இல்லை.
– சு.தியடோர் பாஸ்கரன், சூழலியல் எழுத்தாளர், தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்