ஆங்கிலத்தில் ‘கிரீன் பீ ஈட்டர்’ (Green bee eater) என்று அழைக்கப்படும் இந்தப் பறவையைத் தமிழில், பச்சைப் பஞ்சுருட்டான் என்று அழைக்கிறார்கள். இதன் உடல் சிறியதாக இருந்தாலும், வால் கம்பியைப் போல நீளமாக இருக்கும். குஞ்சுப் பறவைகளுக்கு வால் இருக்காது.
இந்தியா முழுக்கவும் இந்தப் பறவையைக் காண முடியும். குறிப்பாக நீர்நிலைகளில், அதிக அளவில் தென்படும். வட மாநிலங்களில், அடர் பச்சை நிறத்திலும், தென் மாநிலங்களில் இளம் பச்சை நிறத்திலும் என இந்தப் பறவைகளின் குடும்பத்தைச் சேர்ந்த, அதே நேரம், மிகச் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட சில பறவைகள் தென்படுகின்றன.
இந்தப் பறவையினத்தை ‘ஏரியல் ஃபீடர்ஸ்’ (aerial feeders) என்கிறார்கள். காரணம், இவை இதர பறவைகளைப் போலத் தனது இரையைத் தேடிக்கொண்டிருக்கவோ, இரைக்காகக் காத்திருக்கவோ செய்யாது. பறந்துகொண்டிருக்கும்போதே சின்னச் சின்ன ஈக்கள், குளவிகள், பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்துச் சாப்பிடும் திறன் கொண்டவை இவை.
பெயருக்கேற்றபடி, இவை பெரும்பாலும் தேனீக்களைத்தான் அதிகம் சாப்பிடும். அவற்றின் கொடுக்குகள் தன்னைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, மரத்தில் அந்தத் தேனீக்களை அடித்து அடித்துச் சாப்பிடும். இரை கிடைத்தவுடன், அதை உடனே விழுங்கிவிடாமல், அதை மேலே தூக்கிப்போட்டு விழுங்கும்.
இவை வலசை செல்லும் பறவைகள் அல்ல. ஆனால், அதிக வெப்பம், அதிக மழைக்காலங்களில் உணவு தேடி சில நாட்களுக்கு மட்டும் வேறு பகுதிகளுக்குச் சென்றுவரும் தன்மை உடையவை.இதர பறவைகளைப் போன்று மரத்தில் கூடு கட்டாமல், மணற்பாங்கான இடங்களில் பொந்துகள் போன்ற வடிவமைப்பைச் செய்து, அதற்குள்தான் முட்டையிடும்.
பெங்களூரில் இந்த பறவைகளை அதிகம் பார்க்கலாம்
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்