மனிதன் அழித்த அதிசயப் பறவை

இருநூறு ஆண்டு களுக்கு முன்பு வரை பூமியில் வாழ்ந்த ஒரு அதிசயப் பறவை ‘டூடூ’(Dodo). ஆனால், இன்றைக்கு அந்த அதிசயப் பறவை உயிரினங்களின் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது. ‘டூடூ போல் சாகாதே’ (‘as dead as a dodo’) என்னும் பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. மிக மிக சாதுவான பறவையாக டூடூ இருந்ததுதான் அழிந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.

டூடூ மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடாத பறவை யாக இருந்திருக்கிறது. பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவ அமைப்பைக் கொண் டிருந்தாலும் காண்பதற்கு நட்பான பறவை யாகவும் அது இருந்து உள்ளது. இதனால் டூடூவை கேலிக்குரிய பறவையாகப் பார்த்திருக்கிறார்கள். பறக்க இயலாத சிறிய சிறகுடைய பறவை இது. இந்த இயல்பால் ஆபத்து வந்தால்கூட டூடூ மிக எளிதில் சிக்கிக்கொண்டிருக்கிறது, எதிர்த்துச் சண்டையும் இடுவதில்லை. டூடூவின் அழிவை, போர்க் குணம் இல்லாத எந்த இனமும் காலமாற்றத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போக நேரிடும் என்றும் புரிந்துகொள்ளலாம்.

இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸ் என்னும் அழகிய தீவைப் பூர்வீகமாகக் கொண்டது டூடூ. இந்தத் தீவில் பல ஆண்டுக் காலத்துக்கு மனிதர்களே இல்லை. மனிதர்கள் காலடி படாதவரை டூடூக்கள் இங்கு பெருமளவில் செழித்து வாழ்ந்திருக்கின்றன. முதன்முதலில் கடல் மூலம் இந்தத் தீவுக்கு வந்த அரபி யர்கள் ஓய்வு எடுப்பதற்காக இறங்கியுள்ளனர்.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

டச்சுக்காரர்களின் பெருமை

அடுத்து, 1507ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் இந்தத் தீவுக்கு வந்து தங்கியுள்ளார்கள். இவர்கள்தான் டூடூவை முதலில் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. டூடூ என்ற பெயரை அவர்கள்தான் இட்டி ருக்க வேண்டும். அதற்குப் போர்த்துகீசிய மொழியில் முட்டாள் என அர்த்தம். டூடூக்கு முட்டாள் பறவை என்ற பெயரும் உண்டு.

ஆனால், 1598இல் மொரிஷியஸுக்கு வந்த டச்சுக்காரர்கள்தாம் டூடூவைக் கண்டுபிடித்ததாக மற்றொரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. பெருமளவில் டூடூ வேட்டையாடப்பட்டது டச்சுக்காரர்களின் கால கட்டத்தில்தான். அவர்கள் மெய்பூ என்னும் நகரை உருவாக்கி, அதைத் தலைமையிடமாகக்கொண்டு மொரீஷியஸை ஆண்டு வந்தார்கள்.

அழிவுக் காலம்

மொரீஷியஸ் இப்படி நாடாக ஆன பின்புதான் டூடூவின் அழிவுகாலம் தொடங்கியது. டச்சுக்காரர்களுக்குப் பிறகு பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். பிரெஞ்சுக்காரர் களிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர். மனிதக் குடியேற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தன. அதனால் இந்தத் தீவில் நாய்கள், எலிகள், பூனைகள், பன்றிகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கையும் பெருகின.

1628இல் வரையப்பட்ட ஒரு பைண்டிங்கில் வலது பக்கம் கீழே டூடூ பார்க்கலாம் Courtesy: Wikipedia
1628இல் வரையப்பட்ட ஒரு பைண்டிங்கில் வலது பக்கம் கீழே டூடூ பார்க்கலாம் Courtesy: Wikipedia

டூடூ சண்டையிடும் இயல்பு இல்லாத பறவை. புற்களால் கூடுகள் அமைத்து, அது இட்ட முட்டைகள் இந்த விலங்குகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டன. டூடூவின் எண்ணிக்கை சட்டெனக் குறைந்தது. 1680ஆண்டுக்குள் அவை முற்றிலும் அழிந்துவிட்டன. மனிதர்கள் கண்ணில் பட்டு அதிகபட்சம் 100-150 ஆண்டுகளுக்குத்தான் அவற்றால் உயிர் பிழைத்திருக்க முடிந்திருக்கிறது.

டச்சு ஓவியர் ரோலண்ட் சாவ்ரே 1624இல் டூடூவை படமாகத் தீட்டியுள்ளார். இதுதான் டூடூவைத் தெரிந்துகொள்வதற்கான முதல் சாட்சியாக இருந்தது. அதன் பிறகு பலரும் ஓவியங்களில் டூடூவைப் பதிவுசெய்துள்ளனர். ஓவியங்களின் அடிப்படையில் அதன் உடல் சாம்பல் நிறத்திலும் கால்கள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன. டூடூ வாழ்ந்த காலத்தில் அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அது தடமே இல்லாமல் எலும்புத் துண்டுகள்கூட மிஞ்சாமல் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

நினைவுச் சின்னம்

மொரீஷியஸ் பிரிட்டிஷின் காலனியாக இருந்தபோது, ரிச்சர்டு ஓவன் என்னும் பிரிட்டிஷ் உயிரியியலாளர், 1865இல் உதிரிஉதிரியாகக் கிடைத்த எலும்புகளை வைத்து டூடூவின் எலும்புக் கூட்டைத் திரும்ப அமைத்தார். அதை வைத்துதான் டூடூவின் உருவத்தை ஓரளவு யூகிக்க முடிகிறது. சுமார் 3 அடி முதல் 6 அடி உயரத்துடன் டூடூக்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எடை சுமார் 10இலிருந்து 20 கிலோ வரை.

1800களில்  கடைசியாக வரையப்பட்ட படம் Courtesy: Wikipedia
1800களில் கடைசியாக வரையப்பட்ட படம் Courtesy: Wikipedia

டூடூவிற்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. மொரீஷியஸில் இருந்த கல்வாரியா என்னும் மரத்தின் பழங்கள்தான் டூடூவின் விருப்ப உணவு. டூடூ இப்பழத்தைச் சுவைத்த பிறகு, அதன் கழிவுடன் வெளியேறும் விதைதான் முளைக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். டூடூ அழிந்ததால் கல்வாரியா மரமும் அழிந்துபோய்விட்டது. ஒரு உயிரினத்தின் அழிவு, சங்கிலித் தொடராக அது சார்ந்துள்ள மற்ற உயிரினங்களின் அழிவாகவும் மாறுவதை இதிலிருந்து உணரலாம்.

ஒரு காலத்தில் வேடிக்கைப் பொருளாக இருந்த டூடூ இந்த உலகில் இருந்து அற்றுப்போய் விட்டாலும், சுதந்திரம் அடைந்துவிட்ட இன்றைய மொரீஷியஸின் பெருமைக்குரிய அரசுச் சின்னமாக அது மாறியிருக்கிறது.

நன்றி: ஹிந்து

ஒழித்து கட்ட மனிதனுக்கு தேவையாக இருந்தது 100 ஆண்டுகள் தான். அப்போதைய தொழிர்நுட்பதில் 100 ஆண்டுகள் என்றால் இப்போது 10 ஆண்டுகளே போதும். ஒரே நாளில் பல நூறு சதுர கிலோமீட்டர் காடுகளை வெட்டும் இயந்திரங்கள், ஒரே நாளில் ஒரு ஏரியை  நிரப்ப கூடிய JCB இயந்திரங்கள்!

நம் கண் முன்னேயே சிட்டு குருவி மறைந்து கொண்டு இருக்கிறது. நான் சின்ன வயதில் காவேரி கரை ஓரத்தில் மரங்கள் மீது மர நாய்கள் எனப்படும் ரிவர் ஒட்டர் River Otter பார்த்து இருக்கிறேன். கடந்த முறை சென்ற போது அந்த இடத்தில ஒரு மரத்தை கூட காணோம்!

நம் தலைமுறை எப்படிப்பட்ட உலகத்தை பெற்று அதை எப்படி அடுத்த தலைமுறைக்கு விட்டு போக போகிறோம் என்று நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மனிதன் அழித்த அதிசயப் பறவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *