வெட்டுக்கிளிகளின் எதிரி!

வெட்டுக்கிளிகள் (Locust invasion) என்றாலே அலறிக்கொண்டிருக்கிறது உலகம். ஆனால், வெட்டுக்கிளிகளுக்கு இவரைக் கண்டால் மரண பயம். வெட்டுக்கிளிகள் மட்டுமல்ல… பருந்து உள்ளிட்ட பறவைகளுக்கும் இவர் என்றால் பயம் தான். இனப்பெருக்க காலத்தில் இவரது எல்லைக்குள் எவரும் நுழைந்து விட முடியாது. அது எவ்வளவு பெரிய ஆளானாலும் இவரது எதிர்ப்பைக் கண்டு தெறித்து ஓடி விடுவார்கள். இந்தப் பாதுகாப்பை நம்பி, மற்ற பறவைகள் இவர் கூடு அருகே தமது கூடுகளை அமைத்துக்கொள்ளும். இவர் தனது இரையைப் பிடிக்கச் செல்லும் அழகே அழகு. ராஜாக்கள் தேரில் பவனி வருவதுபோல், கால்நடைகள்மீது அமர்ந்து பவனி வருவார்.

இரட்டைவால் குருவி.

அட நம்ம கரிச்சான் குருவி, இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா? எனத் தோன்றும். அந்தச் சிறிய பறவையிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில பண்புகளைப் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

வெட்டுக்கிளிகள் படை... இயற்கைப் பேரிடரா... மனிதர்களின் பசுமைப் பேரிடரா?

கரிச்சான்தான் அந்த வேட்டை நாயகன். மின் கம்பங்கள், மாடுகள்மீது, கருநீல நிறத்தில் இரட்டை வாலுடன் பார்த்திருப்பீர்கள். கால்நடைகள் நடக்கும்போது, அதன் காலுக்குக் கீழேயுள்ள செடிகள் மிதிப்பட்டு, அதில் உள்ள பூச்சிகள் பறக்கும். அப்போது, கால்நடைகளின் முதுகில் உள்ள கரிச்சான், குட்டி விமானம்போல, பறந்து, பூச்சியைப் பிடித்துக்கொண்டு மீண்டும் கால்நடை முதுகில் அமர்ந்துகொள்ளும். 90ஸ் கிட்ஸ் பார்த்து ரசித்த பறவை. தற்போது இதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கரிச்சானிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.

Drongo

Drongo

தன்னை விடப் பலத்திலும், உருவத்திலும் பெரிதான பருந்தைக் கூட, வெறித்தனமாக விரட்டும். விரட்டும்போது இது காட்டும் வேகம் மற்றும் மூர்க்கம் பருந்தைப் பதறி ஓட வைக்கும்.

மன’தில்’ துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். நமது இலக்கை அடைய முடியும். எதிரி நம்மைவிடப் பலவானாக இருந்தாலும், பயம் இல்லாமல் எதிர்க்க வேண்டும். வீரியமான எதிர்ப்பு, எதிரிகளை நமது பாதையிலிருந்து பின்வாங்க வைக்கும். தைரியம் உருவத்தில் இல்லை… உள்ளத்தில் இருந்தால் போதும். வெற்றி பெறலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கிறது கரிச்சான்.

தன்னை விடப் பலத்திலும், உருவத்திலும் பெரிதான பருந்தைக் கூட, வெறித்தனமாக விரட்டும். விரட்டும்போது இது காட்டும் வேகம் மற்றும் மூர்க்கம் பருந்தைப் பதறி ஓட வைக்கும். பறவையியல் ஆர்வலர்கள் பலரும் கரிச்சான் பருந்தை விரட்டும் அழகைப் பார்த்த அனுபவத்தை ஆச்சர்யத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள். பயம் என்றால் என்னவென்றே தெரியாத பறவை இந்த ரெட்டைவால் காரன். அதனால்தான் இவனை, King Crow என அழைக்கிறார்கள்.

தன்னம்பிக்கை நம்மைக் காக்கும். அதே நேரம் நம்மைச் சேர்ந்தவர்கள், நம்மை நம்ப வேண்டும். இவர் பாதுகாப்பானவர். இவரது பாதுகாப்பில் பயம் இல்லாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையை, நண்பர்கள், உறவினர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கை நம்மை நல்மனிதனாக அடையாளப்படுத்தும். இந்தப் பண்பு கரிச்சானிடம் நிறைந்திருக்கிறது.

Drongo

Drongo

இனப்பெருக்க காலத்தில், இது தனது எல்லை பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும். எத்தனை பெரிய பறவையானாலும், அந்த எல்லைக்குள் வர முடியாது. இதைச் சில சிறிய பறவைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. தங்கள் பாதுகாப்புக்காக, புறா, தவிட்டுக்குருவி உள்ளிட்ட சில பறவைகள், தங்கள் கூடுகளைக் கரிச்சான் கூட்டுக்கு அருகே அமைத்துத் தங்களைக் காத்துக்கொள்கின்றன.

மாடுகளின் மீதுஅமர்ந்து, தனக்குத் தேவையான உணவைத் தேடிக்கொள்கிறது. அதற்கு உதவி செய்யும் மாடுகளுக்கும் உதவியாக இருக்கிறது கரிச்சான். மாடுகளின் முதுகில் இருக்கும் காயங்களைக் காகங்கள் கொத்தி பெரிதாக்கி விடும். ஆனால், கரிச்சான் அமர்ந்திருந்தால் காகங்கள் பக்கத்தில் வராது. காத தூரம் ஓடிவிடும். தனக்கு உதவி செய்யும் மாடுகளுக்கு இப்படி நன்றிக்கடனைச் செலுத்துகிறது கரிச்சான்.

புறா, தவிட்டுக்குருவி உள்ளிட்ட சில பறவைகள், தங்கள் கூடுகளைக் கரிச்சான் கூட்டுக்கு அருகே அமைத்துத் தங்களைக் காத்துக்கொள்கின்றன.

வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளிகள்

தைரியம், தன்னம்பிக்கை, பாதுகாப்பு, செய்நன்றி போன்ற பண்புகளைக் கரிச்சானிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கரிச்சான் குருவியின் முக்கிய உணவு வெட்டுக்கிளிகள்தான். தற்போது வெட்டுக்கிளிகள் மற்றும் விவசாயத்தில் விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகள் அதிகரித்து வருகின்றன.

ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு என்பதுதான் உணவுச்சங்கிலியின் அடிப்படை. ஆனால், மனிதர்கள் சில உயிரினங்களின் உணவை அழித்து விட்டோம். அதனால் உணவுச் சங்கிலி உடைபட்டுக்கிடக்கிறது. பெரும்பாலான பறவைகள் அழிவே பூச்சிகளின் இனப்பெருக்கம் என்கிறார்கள் பறவையியல் ஆய்வாளர்கள். அந்த வகையில் வெட்டுக்கிளிகளின் வேட்டைக்காரனான ரெட்டைவால் குருவியும் அருகி வருகிறது.

இதுகுறித்து பேசிய சூழலியல் ஆய்வாளர் கோவை சதாசிவம், ”பறவைகளில் வித்தியாசமான குணமுடைய பறவை. எதற்கும் பயப்படாது. காக்கை முதல் பருந்து வரை துரத்தும். கரிச்சானை விட 5 மடங்கு பெரியதாக இருக்கும் பருந்து. அதையே பயம் இல்லாமல் துரத்திக்கொண்டு போகும். அதிகாலையில் எழுந்து 6 முதல் 7 மணிக்குள் சற்றேறக்குறைய 300 பூச்சிகள்வரை பிடித்துவிடும் கரிச்சான் குருவிகள். இதற்கான கொள்ளளவு 100 பூச்சிகள்தான். ஆனால் அதிக பூச்சிகளை உண்டு, அரைத்துக் கக்கிக்கொண்டே இருக்கும். கீழே துப்பும் பூச்சிகள் எறும்பு போன்ற உயிர்களுக்கு உணவாகிறது. மண்ணுக்கு உயிர்மசத்து கிடைக்கிறது. கரிச்சான் குருவி அதிகமாக இருக்கும்போது நிலத்தில் பூச்சிகள் குறைகின்றன. அந்தக் காலத்தில் விதைப்பதற்கு முன்பாக நிலத்தில் ஆட்டுப் பட்டி போடுவார்கள். ஆட்டுக் கழிவு நிலத்திற்கு உரமாகும். அதன் பிறகு விளையும் பயிர் செழிப்பாக வளரும். அதனால் நிறைய பூச்சிகள் வரும். அதைப் பிடிக்கக் கரிச்சான் போன்ற பறவைகள் வரும். அந்த முறை மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது பூச்சிக்கொல்லி பயன்பாடு அதிகமாகிவிட்டது. இதனால் பூச்சிகளுக்குப் பெரிய பாதிப்பு இல்லை. மாறாக, பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் அதிக பிரச்னை உருவாகிறது” என்றவர், வெட்டுக்கிளிகள் பற்றிச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

கோவை சதாசிவம்

“நம்மிடமே 32 வகையான வெட்டுக்கிளிகள் இருக்கின்றன. ஆனால், தற்போது தாக்குதல் நடத்துபவை பாலைவன வெட்டுக்கிளிகள். நம்மிடம் இருக்கும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிடும் பறவைகளில் முதலிடத்தில் இருப்பது கரிச்சான். அடுத்து மைனா உள்ளிட்டவை. பூச்சிகளை வேட்டையாடும் பறவைகளை அழித்து வருகிறோம். பறவைகளின் எண்ணிக்கை குறையக்குறைய வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. இதே நிலை நீடித்தால், மனிதர்களின் உணவைப் பூச்சிகள் அழிக்கும். மனிதர்கள் பூச்சிகளை உணவாகக் கொள்வார்கள். அதுதான் நடக்கப்போகிறது” என்றார்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *