ஏக்கருக்குப் பல லட்சம் லாபம் கொடுக்கும் டிராகன் ஃப்ரூட்…

வெளிநாட்டுப் பழம் என்றும், சர்க்கரை வியாதிக்கு மருந்தாகும் பழம் என்றும் மக்கள் மத்தியில் டிராகன் ஃப்ரூட் அழைக்கப்படும் இவை தேனியில் விளைவிக்கப்பட்டு வருகிறது.

தேனியில் விளையும் டிராகன் ஃப்ரூட்… ஏக்கருக்குப் பல லட்சம் லாபம்!

ழங்களின் வரிசையில் தற்போது டிராகன் ஃப்ரூட் பிரபலமாகி வருகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த தோலுடைய இந்தப் பழத்தின் உள் பகுதியில் விதைகள் கலந்த வெள்ளை நிறச் சதைப்பகுதி காணப்படுகிறது. அதே போல் சிவப்பு நிறச் சதைப்பகுதியுடன் கூடிய பழங்களும் சந்தையில் கிடைக்கின்றன. வெளிநாட்டுப் பழம் என்றும், சர்க்கரை வியாதிக்கு மருந்தாகும் பழம் என்றும் மக்கள் மத்தியில் டிராகன் ஃப்ரூட் அழைக்கப்படும் இவை தேனியில் விளைவிக்கப்பட்டு வருகிறது.

டிராகன் ஃப்ரூட் தேனி

“முதலில் பேரீச்சம்பழம் பயிரிட்டேன். அதில் பெரிய லாபம் இல்லை. நம்ம ஊர் தட்பவெப்பநிலை பேரீச்சைக்கு ஏற்றபடி இல்லாததால் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தேன். ஆனால், டிராகன் ஃப்ரூட், நல்ல விளைச்சல், நல்ல லாபம்” என்று பேச ஆரம்பித்தார் சுந்தர்ராஜன்.

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சுந்தர்ராஜன், தேனி மாவட்டம் சீலையம்பட்டி – வேப்பம்பட்டி சாலையில் இருக்கும் தனது தோட்டத்தில் 60 சென்ட் நிலத்தில் டிராகன் ஃப்ரூட் பயிரிட்டிருக்கிறார்.

டிராகன் ஃப்ரூட்

“முதலில் தயக்கத்தோடுதான் டிராகன் ஃப்ரூட் பயிரிட்டேன். ஆனால், முதல் விளைச்சலிலே நல்ல லாபம் கிடைத்தது. இதற்கான கன்றுகள் குஜராத்திலிருந்து வாங்கினேன். தமிழகத்தில் நானும், சத்தியமங்கலத்தில் இருக்கும் ஒருவரும் மட்டுமே பயிர் செய்திருக்கிறோம். கன்றை வாங்கிப் பயிர் செய்தால் அதிகப் பராமரிப்போ, அதிக கவனிப்போ தேவையில்லை. கள்ளிச்செடி போன்று வளரும். கொடியாகப் படரும். அதற்கு ஏற்றாற்போல, சிமென்ட் தூண்கள் மற்றும் அதன் உச்சியில் வட்ட வடிவ சிமென்ட் மூடி தேவை. இவை அனைத்தும் ஆடர் செய்து டிராகன் ஃப்ரூட்டிற்காகச் செய்ய வேண்டும். இது மட்டும்தான் செலவு என்று சொல்வேன். மற்ற செலவும் எதுவும் பெரியதாக இல்லை. இயற்கை முறையில்தான் நான் பயிர் செய்திருக்கிறேன். சாணம், பஞ்சகவ்யம் போன்றவைதான் பயன்படுத்துகிறேன்.

டிராகன் ஃப்ரூட்

சுந்தர்ராஜன்

கள்ளிச்செடி போன்று இருப்பதாலும், முட்கள் இருப்பதாலும் பெரும்பாலும் பூச்சிகளின் தாக்குதல் இருக்காது. கன்று பயிரிட்டு ஒன்றரை வருடத்தில் பழம் பார்த்துவிடலாம். நான்கு முதல் ஐந்து அடிக்கு ஒரு கன்று வைத்தால் போதும் நன்கு வளரும். இடையிடையே கொடியை வெட்டிவிட வேண்டும். பெரிய அளவில் தண்ணீர் தேவையும் இல்லை. வறட்சியைத் தாங்கி வளரும் குணம் இதற்கு உண்டு. வாரத்திற்கு நான்கு முறை மட்டும் தண்ணீர் விட்டால் போதும். நான் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் விடுகிறேன். நான்கு முதல் ஐந்து வருடச் செடியாக இருந்தால் அதில் இருந்தே நான் கன்று எடுத்துவிடலாம். அப்படிதான் நான் செய்துகொண்டிருக்கிறேன்.” என்றார்.

உங்கள் தோட்டத்தில் விளையும் டிராகன் ஃப்ரூட்டை எப்படி விற்பனை செய்கிறீர்கள், எவ்வளவு லாபம் கிடைக்கும் என நாம் கேட்டோம். “கடந்த நான்கு வருடங்களாக டிராகன் ஃப்ரூட்டை பயிர் செய்கிறேன். இங்கே 60 சென்ட் என்றால் இன்னோர் இடத்தில் பெரிய அளவில் பயிர் செய்கிறேன். பழத்துக்குள் சிவப்பு நிறச் சதைப்பகுதி, வெள்ளை நிறச் சதைப்பகுதி என இரண்டு வகைகள் உள்ளன. அவற்றிற்கு ஏற்றார் போல அதன் விலை இருக்கும். சிவப்பு நிறச் சதைப் பழங்கள் கிலோ 200 ரூபாய்க்கும், வெள்ளை நிறச் சதைப் பழங்கள் கிலோ 150 ரூபாய்க்கும் கோவையில் இருக்கும் பழக்கடை ஒன்றிற்கு விற்பனை செய்கிறேன். ஏக்கருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.” என்றார்.

டிராகன் ஃப்ரூட்

ஒரு செடியில் குறைந்தது 10 முதல் 20 பழங்கள் இருக்கும் என்று வைத்துக்கொண்டாலும்கூட, ஏக்கருக்கு 150ல் இருந்து 200 செடிகள் வைக்க முடியும். நாம் சென்றபோது செடியில் பழங்கள் இல்லை. வருடத்திற்கு 8 மாதங்கள் பழம் எடுக்கக்கூடிய இந்த டிராகன் ஃப்ரூட் குறித்து, திருவள்ளூர் மாவட்டத் தோட்டக்கலை துறை அதிகாரி பாபு பேசுகையில், “டிராகன் ஃப்ரூட் பழம் தமிழ்நாட்டில் இன்னமும் அவ்வளவு பிரபலம் அடையவில்லை. இது வட மாநிலங்களில் ஒருசில இடங்களில் மட்டும் பயிர் செய்து வருகிறார்கள். தேனி போன்ற இடங்களில் இப்பழம் விளைந்தாலும் ஒட்டுமொத்த தமிழக வெப்பநிலைக்கு ஏற்றதல்ல. விவசாயிகள் இதைப் பற்றி நன்கு அறிந்த பின்னர் பயிரிடவும்” என்றார்.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஏக்கருக்குப் பல லட்சம் லாபம் கொடுக்கும் டிராகன் ஃப்ரூட்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *