கொடுக்காபுளி ‘மணிலா புளி’ எனவும் அழைக்கப்படுகிறது.
பண்ணையை சுற்றியுள்ள வேலிகளில் காற்று தடுப்பானாகவும், சீமைக்கருவேல மரத்திற்கு மாற்றுப் பயிராகவும், முட்கள் நிறைந்திருப்பதால் பாதை ஓரங்களில் பாதுகாப்பிற்காகவும், கடும் வறட்சியை தாங்கும் பயிராகவும், நிழல் தரும் மரமாகவும், சதைப்பற்றுள்ள பழங்கள் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நல்ல உணவு பயிராகவும், மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதால், அதிக வருமானம் ஈட்டவும் பயிரிடப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் நெருக்கு நடவு செய்யும் பொழுது மண் அரிப்பானை கட்டுப்படுத்தும் தடுப்பானாகவும் பயன்படுகிறது.
வெப்ப மண்டல பயிர்:
பழங்கள் குழந்தை முதல் முதியோர் வரை மிகவும் விரும்பி உண்ணப்படுகிறது. இவற்றின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணெய் எடுத்த பின் புண்ணாக்கு மற்றும் இலைகள் கால்நடை தீவனமாக கொடுக்கின்றனர்.
இலைகளை பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்தலாம்.
கொடுக்காப்புளி ஒரு வெப்ப மண்டல பயிர் ஆகும். கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய கடின மரம் ஆகும்.
கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, மா, முந்திரி போன்றவைகள் கடும் வறட்சியினை தாங்க இயலாமல் காய ஆரம்பித்து விடும். ஆனால் இதனை உபயோகப்படுத்தப்படாத மணற்பாங்கான நிலங்களிலும் உப்புத்தன்மை அதிகமுள்ள நிலங்களிலும் வளர்க்க முடியும்.
‘பி.கே.எம். – 1’ ரகம்:
இதனை விதை மற்றும் தண்டுப்போத்துக்கள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். ஆன்ல விதைப்பெருக்கம் மூலம் நடவு செய்யக்கூடாது.
நல்ல விளைச்சலும் உண்மைத்தன்மையான தரமான பழங்கள் கிடைக்க இளம் தண்டு ஒட்டு கட்டப்பட்ட செடிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டு ‘பி.கே.எம்.-1’ என்ற ரக கொடுக்காப்புளி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ரகத்தின் பல விவசாயிகள் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்து வருகின்றனர். இதனால் இந்த ரகம் அதிகப்படியான உற்பத்தி செய்யவும் ஒரு நீண்ட காலத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கென ‘சயான் பாங்க்’ எனும் நடவுப்பணி முறை பின்பற்றப்படுகிறது.
மானாவாரி பராமரிப்பு:
தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலமமாக கொடுக்காபுளி அதிகளவில் உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
ஒட்டு செடிகள் நடவு செய்ய ஏற்ற மாதம் ஜூன் முதல் செப்டம்பர் வரை. குழிகள் அளவு 3 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி ஆழம் இருக்க வேண்டும். இடைவெளி 8 க்கு 8 மீட்டர் இருக்க வேண்டும்.
ஒரு எக்டேருக்கு 156 ஒட்டுச் செடிகள் தேவைப்படும். ஒட்டுக்கன்றுகள் ‘மென்தண்டு ஒட்டு’ முறையில் தயாரிக்கப்பட்ட செடிகளாக இருக்க வேண்டும்.
நன்கு காய்க்கும் மரங்களுக்கு தொழு உரமாக 60 கிலோ/மரம்/ஆண்டு இடுவதால் மகசூல் அதிகரிக்கும். நடவு செய்த 3 மாதங்களுக்கு 2-3 நாட்கள் இடை வெளியிலும், மழை இல்லாத காலங்களிலும் 7-10 நாட்கள் இடைவெளியிலும் நீர்பாய்ச்சி பராமரிக்க வேண்டும். பின் மானாவாரியாக பராமரிக்கலாம்.
-முனைவர் ஆர். சங்கரபாண்டியன்
தோட்டக்கலை கல்லுாரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்