மாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், கட்டுபடுத்துவது எப்படி?

மாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், பழ அழுகல் நோயானது ஒரு வகை பூசணத்தின் (கோலிட்டோ டிரைகம் கிளியேஸ் போராய்ட்ஸ்) ஏற்படுகிறது.
அறிகுறிகள்: இந்நோய் முதலில் இலைகளைத் தாக்கி வட்டவடிவ மரவண்ண புள்ளிகள் ஏற்பட்டு நாளடைவில் இலை முழுவதும் பரவி கருகி உதிர்ந்துவிடும். முதிர்ச்சியடைந்த கிளைகளும் நுனிகளும் காயங்கள் மூலம் தாக்கப்பட்டு கருகி இறந்துவிடும். இந்நோய் பூக்கள் உருவாகும்போது தாக்குவதால் பூக்கள் கருகி உதிர்ந்துவிடும். பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து அறுவடை செய்யப்பட்டபின் மாம்பழத்தில் ஒழுங்கற்ற கரும்புள்ளிகள் நிறைய தோன்றும். இதனால் பழ அழுகல் ஏற்பட்டு பழத்தின் தரமும் குறைந்து காணப்படும்.
இந்நோய் பரவும் விதம்: பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் பூக்கும் பருவத்தில் தோன்றும் மழை மூலம் காற்றில் பூசண வித்துகள் எடுத்துச் செல்லப்பட்டு பரவுகிறது. பச்சைப் பழங்களிலுள்ள துளைகள் காயங்கள் மூலம் பூசணம் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தும். முதிர்ந்த பழங்களில் பூக்காம்புகளை ஒட்டியும் வளர்ந்த நுனிப்பகுதி மூலமும் உள்ளே செல்லும். பொதுவாக பச்சைக்காய்களில் கிருமி உள்ளே சென்று சதைப்பகுதியைத் தாக்கி வளர்ந்து பழம் பழுக்கும்போது சேதம் அதிகரிக்கிறது. தாக்கப்பட்ட பழங்களிலிருந்து நல்ல பழங்களுக்கும், தோப்புகளிலிருந்து சேமிப்பிற்கு கொண்டு செல்லும்போதும் வெகுவாக பரவுகிறது.
தடுப்பு முறைகள்: மரத்தின் கீழே பாதிக்கப்பட்டு உதிர்ந்த இலைகள், பூக்கள் மற்றும் பிஞ்சுகளை அப்புறப்படுத்தி எரித்துவிடுதல் நல்லது. பாதிக்கப்பட்ட கிளைகள், நுனிகள் மற்றும் இலைகளை மரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இந்நோய் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பலவித நோய்களை (அதாவது இலைப்புள்ளி, பூக்கருகல், மொட்டு கருகல், பிஞ்சு கருகல் மற்றும் பழ அழுகல்) ஏற்படுத்துவதால் அக்டோபர் மாதம் முதல் (நோய் வரும் முன் எச்சரிக்கையாக) 21 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் + கைடின் கலவையை லிட்டருக்கு 5 கிராம் வீதம் 6 முறை தெளித்தால் நோய் கட்டுப்படுவதுடன் நல்ல தரமான அதிகமான விளைச்சல் பெற முடியும் என்பது உறுதி.
இந்நோயானது அறுவடைக்குப் பின் பழ அழுகல் ஏற்படுத்தக் கூடியதாகையால் அறுவடை செய்தவுடன் வெந்நீரில் நனைத்து நடவேண்டும். பழங்கள் வைக்கும் அட்டைப்பெட்டியில் மிருதுவான பொருளின் மேல் மாம்பழங்களை ஒரே அடுக்கில் வைப்பது நல்லது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பழங்களை குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்க வேண்டும். அப்படி செய்யாவிடில் வெளியாகும் அதிக வெப்பத்தினால் ஆக்சிஜன் குறைந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் எத்திலீன் வாயு அதிகமாவதால் பழங்கள் சீராக பழுக்காமல் அழுகல் தோன்றுவதைக் காணலாம்.
குறிப்பு: சூடோமோனாஸ் புளோரசன்ஸ்(இபி7 + கைடின்) கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலுள்ள பயிர் நோயியல் துறையில் கிடைக்கும்.
(தகவல்: வை.ஜெயலட்சுமி, கு.திரிபுவனமாலா, மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி-635 112)

நன்றி: தினமலர் விவசாய இணைப்பு


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *