இந்தியாவின் மேற்கில் இருந்து கிழக்கு வரை நிலத்தடி நீர் வற்றிவருகிறது. அதுமட்டுமில்லாமல், கடந்த 80 வருடங்களில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தினால், இந்த நிலை வராது என நிரூபித்திருக்கிறார் ஐயப்பா மசாகி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மசாகி அங்கு நீர் காந்தி, நீர் வித்தைக்காரர், நீர் மருத்துவர் என பொதுமக்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் மனிதர்.
நீர் சேமிப்பு தொடர்பான ஐயப்பா மசாகியின் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால், 2020ல் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் என்ற சொல்லே காணாமல் போய்விடும் என்கிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள் .
கர்நாடகாவில், தான் பிறந்த ஊரான கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிய ஒரு சூழலில், அவர் பிறந்தார். அந்நாளில் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, பல கிலோமீட்டர் தொலைவு சென்று தண்ணீர் எடுக்கச் சென்ற அவருடைய குழந்தைப் பருவமே, அவரை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. மண்ணெண்ணெய் வாங்கக் கூட வசதி இல்லாத பெற்றோர், பல கஷ்டங்களுக்கு இடையிலும் இவரை படிக்க வைத்தனர். படித்து வேலைக்குச் சென்ற மசாகிக்கு, வழக்கமான வேலையில் நாட்டம் இல்லை. காரணம் அவர் சிறுவயதில் சந்தித்த குடிநீர் பிரச்னை.
சில நாட்களில் ஊர் திரும்பிய அவர், 6 ஏக்கர் பரப்பளவில் வறண்ட ஒரு நிலப்பகுதியை வாங்கினார். அங்கு காபியும், ரப்பரும் வளர்த்தார். கனமழை, பிறகு 2 வருடங்கள் வறட்சி என மாறி மாறி வந்ததில் பயிர்கள் அழிந்தன. அப்போதுதான் இவருக்கு ஒன்று புரிந்தது. ‘குளிரிலும், வெள்ளத்திலும் மக்கள் வீட்டினுள் தூங்கி முடங்கிவிடுகின்றனர். சுளீரென வெயில் அடித்து வறட்சி ஏற்படும்போதுதான், அய்யய்யோ என்ன இது இப்படி வெயில் கொளுத்துகிறது’ என கொதித்து எழுகின்றனர்.
இதற்கெல்லாம் தீர்வு காண முடிவெடுத்தார் மசாகி. இடையே அண்ணா ஹசாரே, ராஜேந்திர சிங் போன்றோரை சந்தித்து விவாதித்தார். போர்வெல்களில் அதிக நீரை சேமிப்பதன் மூலமும், பாசனத்திற்கு குறைந்த அளவு நீரை உபயோகிப்பதன் மூலமும் நீரை அதிகளவு சேமிக்கலாம் என்பதை அறிந்தார்.
அடுத்தடுத்த வருடங்களில், அது வெற்றியை கொடுத்தது. இம்முறையைப் பயன்படுத்தி அவர் அதிக அறுவடை செய்தார். பிறகு, பக்கத்து வயல்களிலும் இம்முறையைப் பரிசோதித்து வெற்றி பெற்றார். அவருடைய வேலையை உதறிவிட்டு இப்பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
நிலத்தில் ஒரு குழி தோண்டி அதில் மணல், களிமண், கூழாங்கற்கள், பாராங்கற்கள் ஆகியவற்றை போட்டார். மழை நீர் உள்ளே சென்றால் கற்களையும், மணலையும் தாண்டிச் சென்று அடிமண்ணை நனைக்கும். ஒரு saturation புள்ளிக்கு வந்த பிறகு, நிலத்தில் இருந்து நீர் ஊற்று போல் பெருக்கெடுக்கும். இதுவே இவரது அவரது நீர் சேகரிப்பு முறை திட்டம். இவருடைய வழிகாட்டுதலில், பலரும் நீர் சேமிப்பு பணியிலும் விழிப்பு உணர்வு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐயப்பா மசாகியின் விவசாய சேவைக்காக அசோகா fellowship, Jamnalal Bajaj உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 2012 ம் ஆண்டு 600 செயற்கை ஏரிகளை உருவாக்கி சாதனை புரிந்ததற்காக, லிம்கா சாதனை புத்தகத்தில் இவரது நிறுவனம் இடம்பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 70,000 போர்வெல்கள் இவரது நிறுவனத்தால் போடப்பட்டிருப்பதும் பெரும் சாதனைதான்.
இவரை பற்றி மேலும் அறிய —
இவரை தொடர்பு கொள்ள – அலைபேசி எண் 09448379497 , ஈமெயில் : rainwatermasagi2000@yahoo.co.in
நன்றி: விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்