சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியத் தேவையாக உள்ளது தண்ணீர். தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை என தண்ணீர் சார்ந்த பிரச்சினைகளே மாநிலத்தில் பிரதான பிரச்சினைகளாக உள்ளன.
இந்த சூழலில் சொட்டு நீர் பாசன முறை தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த பெரும் உதவியாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி எம்.சதாசிவம். இவர் தற்போது சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தி கரும்பு சாகுபடி மேற்கொண்டுள்ளார்.
“வாய்க்கால்கள் மூலம் நேரடியாக வயலுக்குப் பாய்ச்சும்போது 5 ஏக்கர் வயல்களுக்கு தேவைப்படும் தண்ணீரை, சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்துவதன் மூலம் 25 ஏக்கர் பரப்பளவுள்ள வயல்களுக்கு பாய்ச்ச முடிகிறது” என்கிறார் சதாசிவம்.
“மேலும், பயிருக்கான உரங்களையும் நீரில் கரைத்து சொட்டு நீர் பாசனம் மூலமே விநியோகிப்பதால், உரமிடுவது போன்ற பணிகளுக்கான ஆள் செலவு கணிசமாகக் குறைகிறது. சொட்டு நீர் பாசன முறையால் தண்ணீரின் தேவை பெருமளவு குறைவதோடு, சாகுபடி செலவும் குறைகிறது. கூடுதல் மகசூலும் கிடைக்கிறது. மேலும் சொட்டு நீர் பாசன முறையை அமைத்ததற்காக அரசின் மானிய உதவியும் எனக்கு கிடைத்துள்ளது” என்கிறார் அவர்.
சொட்டு நீர் பாசன முறையை ஏற்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதமும் அரசின் மானிய உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் சரகத்தைச் சேர்ந்த வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் தேவையான வழிகாட்டுதல்களை அவர்கள் வழங்குவார்கள்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்