எந்த ராஜாவோ எப்போதோ வெட்டி வாய்த்த கால்வாய்களையும் ஏரிகளையும் தூர் வாராமல் கருவேல மரங்களை வெட்டாமல் வைத்து மழை பெய்யும் நீர கடலூரில் வீணாகியது பற்றி படித்தோம். தூத்துக்குடி மாவட்டமும் இதே கதைதான்.. ஹிந்துவில் வந்த செய்தி
கால்வாய் ஆக்கிரமிப்பே வெள்ளப் பெருக்குக்கு காரணம்
பருவமழை தொடங்கும் முன்பே குளங்கள், கால்வாய்களை முறையாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் தான் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கடம்பூர், கயத்தாறு போன்ற பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அன்று இரவு வரை 15 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம் அனைத்தும் தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளத்தை நோக்கி புதுக்கோட்டை காட்டாற்று ஓடை வழியாக சீறிப்பாய்ந்து வந்தது.
ஏற்கெனவே நிரம்பும் நிலையில் இருந்த கோரம்பள்ளம் குளம் சற்று நேரத்தில் தனது முழு கொள்ளளவை எட்டியது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வந்ததை தொடர்ந்து குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனால் குளத்தில் உள்ள 24 மதகுகளும் உடனடியாக திறக்கப்பட்டு உபரநீரி அனைத்தும் உப்பாற்று ஓடை வழியாக வெளியற்றப்பட்டன.
வெள்ளம் சூழ்ந்தது
உப்பாற்று ஓடையில் அதிகளவில் தண்ணீர் சென்றதால் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு 10 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடுமையாக அவதிக்குள்ளாயினர். தீயணைப்பு படையினர் படகு மூலம் மக்களை மீட்டனர். மக்கள் பல்வேறு மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
மேலும், கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரும் புதுக்கோட்டை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுக்கோட்டை, அந்தோணியார்புரம், மறவன்மடம் போன்ற பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
மழை குறைந்தது
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவில் மழை இல்லை. நேற்று முன்தினம் ஆங்காங்கே லேசான மழை இருந்தது. நேற்று மழை அறவே இல்லை.
இதனால் காட்டாற்று ஓடையில் வரும் தண்ணீர் நின்றது. மழை இல்லாமல் தண்ணீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து கோரம்பள்ளம் குளத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 மதகுகள் மட்டுமே திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று அறவே தண்ணீர் வரத்து இல்லாததை தொடர்ந்து அனைத்து மதகுகளும் மூடப்பட்டுவிட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது கோரம்பள்ளம் குளம் முழு அளவில் நிரம்பி கடல்போல காட்சியளிக்கிறது.
ஆக்கிரமிப்புகள் காரணம்
ஒரு நாள் பெய்த கனமழைக்கே இந்த நிலை என்றால், தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் நிலைமை என்னவாகும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்திரமப்பட்டியை சேர்ந்த விவசாயியும் காந்திய சேவா மன்ற நிறுவனருமான வீ. ராஜேந்திரபூபதி கூறும்போது, ‘கோரம்பள்ளம் குளத்தை நம்பி 2,262 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெருகின்றன. தாமிரபரணி பாசனத்தின் கடைசி குளம் என்ற போதிலும், பெரும்பாலும் காட்டாற்று வெள்ளத்திலேயே இந்த குளம் நிரம்புகிறது.
கோரம்பள்ளம் குளத்துக்கு வரும் காட்டாற்று ஓடையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், சீமை கருவேல மரங்கள் பெருமளவில் வளர்ந்துள்ளன. இதனால் தான் தண்ணீர் முறையாக வரமுடியாமல் தடுப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதேபோல் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் கடலுக்கு வெளியேற்றப்படும் உப்பாற்று ஓடையில் சில தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமித்து கிட்டங்கிகள் அமைத்துள்ளனர். மேலும், சில உப்பள உரிமையாளர்களும் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனைத் தவிர சீமை கருவேல மரங்களும் பெருமளவில் வளர்ந்துள்ளன.
இதனால் தான் கரை உடைப்பு ஏற்பட்டு அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், முள்ளக்காடு, காலாங்கரை, வீரநாயக்கன்தட்டு போன்ற குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்தது. மேலும், இந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தூர்வாரப்படவில்லை
கோரம்பள்ளம் குளத்தில் 9 அடி வரை தண்ணீரை தேக்க முடியும். ஆனால், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் குளம் மணல் மேடாகியுள்ளது. இதனால் குறைந்த அளவே தண்ணீரை சேமிக்க முடிகிறது. மீதமுள்ள தண்ணீ்ர் வீணாக கடலுக்கு செல்கிறது. பயிர் சாகுபடி செய்யும்போது கடைசி நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தான் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் காலத்திலாவது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய வேண்டும்’ என்றார் அவர்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்