குறைந்த நீரில் காய்த்துக் குலுங்கும் மா மரங்கள்

வறட்சிக்கு இலக்கான சென்னிமலை வட்டாரத்தில், குறைந்த நீரில் மா பயிரிடும் பரப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, 70 ஹெக்டேரில் மா மரம் காய்ப்பு துவங்கியுள்ளது. சென்னிமலை வட்டாரம் வறட்சியின் பிடியில் ஒருபுறம் சிக்கித்தவிக்கும் நிலையில் ஒரு சில பகுதியில் விவசாயிகள் மா பயிர் செய்து வருமானம் பார்த்து, பசுமைபுரட்சியை அரங்கேற்றி வருகின்றனர்.

சென்னிமலை யூனியனில் தோட்டக்கலைத் துறை மூலம், “தேசிய தோட்டக்கலை இயக்கம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, மா, நெல்லி போன்ற மரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

சென்னிமலை வட்டாரத்தில் நிகர சாகுபடி பரப்பு, 14 ஆயிரத்து 600 ஹெக்டேர். ஆண்டு தோறும்7,000 ஹெக்டேர் சாகுபடி ஏதுமின்றி தரிசாக விடப்படுகிறது.

தரிசு நிலங்களில், அரிதாக கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு சொட்டு நீர்ப் பாசனம் மூலம் மாந்தோப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இத்தரிசு நிலங்கள் அங்காங்கே பசுமை சுரங்கங்ளாக மாற்றப்படுகின்றன. சென்னிமலை உள்வட்டத்தில், 43 ஹெக்டேர், வெள்ளோடு உள்வட்டத்தில், 18 ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெள்ளோடு, மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி தனது தோட்டத்தில் இரண்டு ஹெக்டேரில், 160 மா மரங்களை சாகுபடி செய்துள்ளார்.

டிராக்டரில் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றி, மாமரங்களை வளர்க்கிறார்.

துரைசாமி கூறியதாவது:

மா மரங்களை காப்பாற்ற இப்பகுதியில் எவ்வித நீராதாரமும் கிடையாது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து, டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்றி, நான்கு ஆண்டுகளாக மாங்கன்றுகளை காப்பாற்றி வந்துள்ளேன். இப்படி மா வளர்ப்பதை பார்த்து “இப்படி தண்ணீர் ஊற்றி எங்கே மா வளரப் போகிறது’ என, பலர் கிண்டல் செய்தனர். தற்போது, காய்கள் காய்த்து தொங்குவதை பார்த்து பொறாமைப் படுகின்றனர்.

கோடை காலத்தில் மட்டும், 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றுகிறேன். தற்போது, மாந்தோப்பை பார்க்கும் போது எனக்கே பிரமிப்பாக உள்ளது. காய்ப்பு துவங்கி உள்ளது.

வியாபாரியிடம், 17 ஆயிரம் ரூபாய்க்கு, ஓராண்டுக்கு குத்தகையாக பேசி விற்றுவிட்டேன்.என்றார்.

நுண்ணீர் பாசனம்
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் கூறியாதவது:

இத்திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் மா, நெல்லி, கொய்யா, எலுமிச்சை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது மேலும் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

இதனால் வறட்சி பகுதியான சென்னிமலை பகுதி மா விளையும் பூமியாக மாற்ற விவசாயிகள் மத்தியில் மவுன புரட்சியாக இது நடந்து வருகிறது.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *